ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

- திருத்தொண்டத்தொகை

(தை மாதம் சதய நட்சத்திரம் 24.1.2023 - அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை)

சோழ தேசத்தில் திங்களூர் என்ற பகுதியில் அந்தண மரபில் தோன்றியவர் அப்பூதியடிகள் ஆவார். களவு, பொய், காமம், கோபம் என்ற அனைத்துக் குற்றங் களையும் ஒழித்தவரான அப்பூதியடிகள், சிவ வழிபாட்டிலும் பக்தியிலும் பெருவிருப்புடையவர். திருநாவுக்கரசரின் ‘வடிவு தாம் காணாராயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு.’ (பெரியபுராணம்.1790) திருவுருவினை நேரில் காணாவிட்டாலும் கல்லில் கட்டி கடலில் இட்டும், சுண்ணாம்புக் காளவாயில் போட்டும், அரசன் அவரை (அப்பரை) வதைத்த போதெல்லாம் சிவபெருமானே காத்தருளினார் என்பதையெல்லாம் செவிச்செய்தியாய் கேள்வியுற்று அவர்பால் பெரும் அன்பு பூண்ட காரணத்தால், தன் வீட்டில் உள்ள எல்லா பொருள்களுக்கும் ‘திருநாவுக்கரசு’ என்றே பெயர் சூட்டினார்.

தன் மகன்களுக்கும் இளைய திருநாவுக்கரசு, மூத்த திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டி அழைத்திடும் ஒழுக்க நெறியில் நின்றவரானார். மேலும், திருநாவுக்கரசர் திருப்பெயரில் மடங்களும், தண்ணீர்ப் பந்தல்களும் முதலான முடிவிலா பல அறங்களைச் செய்து வந்தார் அப்பூதியடிகள். ஒருமுறை அப்பர் சுவாமிகள் திருப்பழனத்தை வழிபட்டு விட்டு, பிற தலங்களை வழிபடும் பொருட்டு, திங்களூர் என்ற ஊரை அடைந்தார். அங்கு, ‘மந்தமாறுதல் செய்த பந்தலுடன் அமுதம் தண்ணீர்’ப் பந்தலை பார்த்தும் அங்கு ‘திருநாவுக்கரசு’ எனும் பெயர் எழுதி இருப்பதனை கண்டும் வியந்து, ‘இப்பந்தர் இப்பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார்’ என்றார்.

அதற்கு அங்குள்ளோர் சிலர் ‘செப்பு அரும் சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார் தப்பின்று எங்கும் உள சாலை குளம் கா’ (பெரியபுராணம்.1794) என்றனர். நாவுக்கரசர் உடனே அப்பூதியடிகள் இல்லம் இருக்கும் இடத்தைக் கேட்டு அங்கு சென்றார். தன் மனைவாயில் முன் சிவனாரின் அடியாரொருவர் வந்துள்ளார் என்றறிந்த அப்பூதியார் அவரே திருநாவுக்கரசர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அப்பூதி அடிகள் நாவுக்கரசரை வணங்கி நின்றார். அவரிடத்தில் நாவுக்கரசர் ‘‘யாம் திருப்பழனம் எனும் இடத்தில் இறைவனை தரிசித்து வரும் வழியில் இவ்வூரில் உம்முடைய அறச் செயல்களை அறிந்து உம்மைக் காணவந்தோம். என்று கூறி,

‘‘ஈறு இல் பெரும் தண்ணீர்ப் பந்தரில் நும் பெயர் எழுதாதே

வேறு ஒரு பெயர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்’’

- பெரியபுராணம்.1799

என்று வினவினார். ‘‘வேறொரு பெயர் என்றதனைக் கேட்ட அப்பூதி அடிகள் சிந்தை நிலை அழிந்தவராய் சினத்துடன், நாணமற்ற சமணர்களுடன் பல்லவ மன்னன் சேர்ந்து செய்த பாதகச் செயல்களை முறியடித்து சிவநெறியில் சிறந்திருக்கும் ஒருவர் பெயரையா வேறொரு பெயர் என்றீர்? திருத்தொண்டினாலே இம்மையிலே மேன்மை அடைய முடியும் என்பதனை என் போன்றவர்க்கு உணர்த்திய திருநாவுக்கரசரின் பெயரையா வேறொரு பெயர் என்றீர்?

‘‘பொங்கு கடல் கல்மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை

அங்ஙணர்தம் புவனத்தில் அரியாதார் யார் உளரே!’’

 - பெரிய புராணம்.1802)

என்று திருநாவுக்கரசரின் பெருமைகளை அப்பூதியடிகள் பக்தியோடு எடுத்துரைத்தார். நாவரசர்பால் கொண்ட அன்பினால் வெகுண்டு கூறியவற்றைக் கேட்ட திருநாவுக்கரசரும்,  

“அருளு பெருஞ் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த

தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான்’’

 - பெரிய புராணம்.1803

- என்று பதிலுரைத்தார்.

அவரே யாம் தொழும் திருநாவுக்கரசர் என்றறிந்த அப்பூதியடிகள் கைகளைத் தலைமேல் குவித்து கண்களின்றும் மகிழ்ச்சியால் நீர் அருவி போல் பெருகிட, வாய்க்குழற, உடல் முழுதும் மயிர்கூச்செறிய தரையில் விழுந்து அவரது திருவடிகளை வணங்கினார். அப்பூதியாரைத் தாமும் வணங்கி அவரைத் தமது கரங்களால் எழுப்பினார். வறுமையுற்றார் பெருநிதி பெற்றது போல் அப்பூதியடிகள் மனம் மிக மகிழ்ந்து அவர் முன்பு ஆனந்தக் கூத்தாடிய நிலையை,

‘‘மற்றவரை எதிர் வணங்கி வாகிசர் எடுத்தருள

அற்றவர்கள் அருள்நிதியம் பெற்றார் போல் அருமறையோர்

முற்றம் உளம் களி கூற முன் நின்று கூத்தாடி

உற்ற விருப்புடன் சூழ ஒடினார் பாடினார்”

(பெரியபுராணம்.1805)

என்று விளக்குகிறார் சேக்கிழார். அப்பர் சுவாமிகள் வந்திருப்பதைத் தம் மனைவி மக்களுக்குக் கூறி அவர்களையும் அழைத்து வந்து நாவரசரை வணங்கினார். பின்பு தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவரது திருவடிகளை நீரால் கழுவி, தண்ணீரை தன்தலையில் இரைத்துக்கொண்டார் அப்பூதியடிகளார். பிறகு, திருநாவுக்கரசரை விருந்துண்ண வேண்டி, அவருக்கு சோற்றுடன் அறுசுவை உணவு சமைக்கப்பட்டன. அவ்வுணவைப் பரிமாற தன்மகனான மூத்த திருநாவுக்கரசை வாழைக்குருத்து அரியும்படி அனுப்பினார் அப்பூதியர். அங்கு வாழைக்குருத்து அரியும்போது, பாம்பொன்று அவனது உள்ளங்கையில் தீண்டியது.

பாம்பின் விஷம் தலைக்கேறும் முன், அரிந்த வாழைக்குருத்தை தன் தாயின் கையில் கொடுத்து விட்டு நிலத்தில் விழுந்தான் அச்சிறுவன். அரவம் தீண்டி மகன் இறந்தான் என்றறிந்தால் அப்பர் சுவாமிகளுக்கு உணவு பரிமாற முடியாமல் போய்விடும் என்று கருதிய அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும், மகனை ஒரு பாயில் சுருட்டி வைத்துவிட்டு, திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறத் தயாராகினர்.

நாவரசருக்கு உணவு பரிமாற முற்படும்போது, மூத்த திருநாவுக்கரசு எங்கே? என்று வினவினார் அப்பர் சுவாமிகள். என்ன சொல்வது? என்று தெரியாமல் திகைத்தவராய், நிகழ்ந்த செயல்களில் ஒன்றிணையும் எடுத்துரைக்காதவராய் அப்பூதியடிகள் ‘‘இப்போது இங்கு அவன் உதவான்” என்று கூறினார். இதைக் கேட்ட நாவுக்கரசர் தடுமாற்றம் அடைந்தவராய் உண்மையை கூறும்படி கேட்டார்.

இச்செய்தியினை பெரியபுராணத்தின்,

பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ

வருவது என்று உரையாரேனும் மாதவர் வினைய வாய்மை

தெரிவு உற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து

பரிவோடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே

 (பெரியபுராணம்.1821)

 - என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன.

அப்பூதியாரும் நடந்தனவற்றை எல்லாம் திருநாவுக்கரசு சுவாமிகளிடம் எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட நாவரசர், ‘நன்றுநீர் புரிந்த செயல்! இத்தன்மை செய்தவர் இவ்வுலகில் எவர் உளர்’ என்றுகூறி எழுந்து சென்று உயிரிழந்த அந்தச் சிறுவனின் உடலை நோக்கினார்.

பின் அங்குள்ள சிவபெருமான் திருக்கோயிலின் முன் சிறுவன் உடலைக் கிடத்தி,

‘‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே”

 - தேவாரம்

என்ற பதிகத்தின் 10 பாடல்களையும் பாடி முடிக்கப்பட்ட பிறகு, சிவபெருமான் அருளால் சிறுவனின் உடலில் இருந்த நஞ்சு நீக்கப்படுகிறது. அக்கணமே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான்.  அப்பர் சுவாமிகள் அவனுக்குத் திருநீறு கொடுத்தருளினார். அந்த நிகழ்வுக்குப் பிறகு திருநாவுக்கரசர் அப்பூதியாரின் இல்லத்தில் அனைவரோடும் உணவருந்தினார். அதன்பிறகு, திங்களூரில் சில நாட்கள் தங்கியிருந்து சென்றார் அப்பர் சுவாமிகள். நாவுக்கரசரின் திருவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்ட அப்பூதியடிகளின் பக்தியும் வாழ்வும் இன்றும் நமக்குப் பெரும் பாதையாய் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

முனைவர் ப.பிரதாப்

Related Stories: