திரையாக மாறி நின்ற குபேர பீம ருத்திரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஜி.மகேஷ்

காஷ்யபருக்கும் அதிதிக்கும் குழந்தையாக பிறந்த திருமால் (வாமனராக), தேவர்களின் துயர் தீர்க்க மாவலியிடம் மூவடி மண் கேட்டு உலகளந்து நின்றது, நாம் அறிந்த சரிதம்தான். தர்மத்தை இரட்சிக்க ஸ்ரீமன் நாராயணன், மாவலியின் சிறத்தில் பாதம் வைத்து, அவனை பாதாளத்திற்கு அனுப்பினார். இருந்தாலும், தீராத பழியாலும் தோஷத்தாலும் நாராயணன் அல்லல்பட்டார். தனது துயர்தீர்க்க வேண்டி, கெடில நதிக்கரையில் ஈசனை மனமுருக பூஜித்து வந்தார்.

அவரது பக்தியால் மகிழ்ந்த ஈசன், திருமாலுக்கு அருட்காட்சி தந்தார். மறைகளும் காணா மறையவனை, வானவர்கள் தொழும் பிறை சூடியை, ஞானிகளின் உள்ளத்தில் நிறைந்தவனை, உமை ஒரு பாகனை, வேண்டித் துதித்து, போற்றிப் புகழ்ந்து, துதித்து வணங்கி, பாதம் பணிந்தார் திருமால். மனமுவந்து மாவலுக்கு அருளினார் பரமன். ‘‘மாலே! மணிவண்ணா! மாயவனே! திருமகள் நாயகனே! வேண்டும் வரம் யாது? எதுவானாலும் தருவதற்கு சித்தமாக உள்ளோம்” என்று விடையேறி உமையோடு வந்த விண்ணவர் தலைவன் வாய் மலர்ந்து அருளினான்.

‘‘சம்போ மகாதேவா! பார்வதி பதே! உன் அருள் இல்லாதவர்கள் உன்னை வணங்க முடியாது. தங்களது கிருபையால், தங்களை வணங்கிய மாத்திரத்தில் மாவலியை வஞ்சித்ததால் வந்த தோஷம் நீங்கப் பெற்றேன். பெரும் பேறு செய்த புண்ணியன் ஆனேன். எனது இன்னல் அனைத்தும் தீர தங்கள் திருவருளே காரணம் அல்லவா? ஆகவே, அந்த தங்களது திருவருளை வியந்தபடியே எப்போதும் தங்களை பூஜித்தபடியே இருக்க விரும்புகிறேன். இமைப்பொழுதும் நான் இனி தங்களை பூஜிக்காமல் இருக்கக்கூடாது.

எனது பூஜைக்கு எந்த தடையும் வரக்கூடாது. பரம்பொருளே, அதற்கு அருள் புரியுங்கள் ‘‘கைகூப்பி கண்ணீர் மல்க வணங்கி வரம் வேண்டி ஈசன் திருவடியில் விழுந்தார், வாமன மூர்த்தி. மாலின் பக்தி கண்டு உள்ளம் உவந்தார், உமை ஒரு பாகன்.“மாலே! கவலை வேண்டாம். நீர் எப்போதும் இங்கேயே என்னை பூஜித்து கொண்டிருக்கலாம்! பிரம்மச்சாரியாக, வாமன அவதாரம் எடுத்து நீர் எம்மை பூஜித்ததால், இத்தலம் திருமாணிக்குழி (மாணி என்றால் பிரம்மச்சாரி என்று பொருள்). உனது பூஜையை யாரும் பார்க்கவும் முடியாது தொந்தரவும் செய்ய முடியாது. எனது வாகனமான நந்தி கூட இதில் அடக்கம்” உமையொரு பாகன் உள்ளம் மகிழ, வரங்கள் தர ஆரம்பித்தார்.

“புரியவில்லையே மகாதேவா!” மாலவன் குழம்பினார். அதைக் கண்டு ஈசன் இளநகை பூத்தார். தனது ஜடையை சற்றே சிலுப்பி அசைத்தார். அந்த அசைவில் ஈசனை போலவே வடிவம் கொண்ட ஒருவர் தோன்றினார். அறையில் புலி ஆடையும், முடியில் பிறையணியும் கொண்டு முக்கண் தரித்திருந்தார் அவர். அவர் பதினொரு ருத்திரர்களில் ஒருவரான ``குபேர பீம ருத்திரர்’’ ஆவார். அவரை பார்த்து புன்னகைத்த ஈசன், கட்டளை இட ஆரம்பித்தார்.

“பீம ருத்திரா! நீ திரையாக மாறி இந்த தலத்தில் எனது சந்நதியை எந்நேரமும் மறைத்துக் கொண்டிருக்க வேண்டும். சந்நதியின் உள்ளே வாமனர் எம்மை பூஜித்துக் கொண்டே இருப்பார். நந்திக்குகூட எமது தரிசனம் தராமல் நீ எம்மை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும். எம்மை தரிசிக்க வரும் அடியவர்கள் உம்மை பூஜித்து உன் அனுமதி பெற்ற பின்பே, திரையை நீக்கி என் தரிசனம் பெற வேண்டும். அதுவும் இரண்டொரு நொடிகளுக்கு மட்டும்தான். பின்பு திரை மூடப்பட வேண்டும். என் ஆணையை ஏற்று இன்று முதல் இந்த தலத்தில் சந்நதியின் முன்பு திரையாக மாறுவாயாக” என்று அபயகரம் காட்டி பீம ருத்திரருக்கு கட்டளை இட்டார். அன்று முதல் திரைவடிவில் ஈசன் சந்நதியை பீம ருத்திரர் காவல் காக்கிறார். இந்த வரலாறு கோயில் சந்நதியின் சுவரில் சிற்பமாக இருப்பதை நிச்சயம் கண்டு களிக்க வேண்டும்.

இன்றும், ஈசனை தரிசிக்க வேண்டும் என்றால், திரை வடிவில் அருளும், பீம ருத்திரருக்கு பூஜைகள் செய்து, அவர் அனுமதி பெற்று, திரையை விலக்குவார்கள். திரையை விலக்கிய, அந்த இரண்டொரு நொடிகளில் கிடைக்கும் ஈசன் தரிசனத்தை காண கண் கோடி வேண்டும்.நந்தி எம்பெருமான் மற்ற கோயில்களில் சற்றே தலையை சாய்த்த கோலத்தில் இருப்பார். ஆனால், இந்த தலத்தில் நேரே ஈசனை நோக்கியபடி இருப்பார். நாம் ஈசன் தரிசனம் பெற ருத்திரருக்கு பூஜை செய்து வணங்கி அவர் அனுமதி பெற்ற பின்பு தானே ஈசனை தரிசனம் செய்ய முடியும். நாம் தரிசனம் செய்யும் சில மணித்துளிகளில்தான் நந்திக்கும் ஈசன் தரிசனம் கிடைக்கும். ஆதலால், எங்கே தலையை திருப்பி இருந்தால் கிடைக்கும் தரிசனத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் நந்தி நேரே தலையை சாய்க்காமல் ஈசன் தரிசனத்துக்காக நம்மோடு காத்திருக்கிறார்.

மேலும் இத்தலத்து ஈசன் சந்நதியில் அம்மையும் அப்பனும் எப்போதும் சேர்ந்தே இருப்பதால், சந்நதியை பீமருத்திரர் பாதுகாக்கிறார். பீமருத்திரர் திருவுருவம் சந்நதியின் திரையில் பொரிக்கப் பட்டிருக்கிறது. இவருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.சந்நதியே பள்ளியறையாக இருப்பதால், இந்தக் கோயிலில் தனியாக பள்ளியறை கிடையாது. மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நாகையில் நீலாயதாட்சியாகவும் இருக்கும் அம்பிகை, இத்தலத்தில் அஞ்சனாட்சியாக அருள்பாலிப்பதால், அம்பிகையின் ஆட்சி பீடமாக இது கருதப்படுகிறது. அதாவது, அம்பிகைக்குதான் அனைத்து ஆட்சியும் பெருமையும். இத்தலத்தில் அம்பிகை, பகல் நேரத்தை தாமரைப் பூவாகவும், இரவு நேரத்தை, நீலோத்பல மலராகவும் கையில் ஏந்தி காட்சி தருகிறாள். அதாவது, காலத்தை அடக்கி ஆளும் சக்தியாக அம்பிகை இங்கு விளங்குவது சிறப்பு.

நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக மாறி ஈசன் சந்நதியை சுமப்பது மற்றொரு சிறப்பு.மகிஷனை வதம் செய்வதற்கு முன்பிருந்தே இங்கு துர்கை அருள்வதால், துர்க்கையின் பாதங்களுக்கு கீழே மகிஷாசுரன் சிரம் இல்லை. அனைத்து தலங்களிலும், விநாயகர் முன் நிற்கும் மூஷிக வாகனம் இந்த தலத்தில் மட்டும் ஆணை முகவன் அருகிலேயே இருப்பது மற்றொரு சிறப்பு. அருணகிரிநாதர் பாடிப் பரவிய ஆறுமுகனை காண கண் கோடி வேண்டும். ஆலய பைரவராக ஸ்வர்ணாகர்ஷன பைரவர் இருப்பது மற்றொரு சிறப்பு. திருவண்ணாமலையில், பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், இங்கு ரோகிணி நட்சத்திரத்தில் (கார்த்திகை) தீபம் ஏற்றுகிறார்கள். சம்பந்தர் பாடி பரவிய அற்புத ஈசன் இவர்.

குபேர பீம ருத்திரர் திரையாக அருள்பாலிக்கிறார், அவரை வணங்கி உத்தரவு வாங்கிய பின் ஈசனை சேவிக்கிறோம். ஆவே, இந்த தலத்து இறைவனை வணங்கினால், வறுமையும் கடனும் ஒழியும். அம்மையும் அப்பனும் எப்போதும் இங்கு சேர்ந்தே இருப்பதால், இவரை வணங்கினால் கணவன் மனைவி இடையில் ஒற்றுமை ஓங்கும். குழந்தை வரம் வேண்டி இத்தல அம்மனுக்கு வெண்ணெய் நிவேதனம் செய்து உண்டுவந்தால், சீக்கிரம் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது. இப்படி இந்த தலத்திற்கு பல பெருமை இருக்கிறது. அவை அனைத்தும் சொல்லிமாளாது.

கடலூரில் இருந்து 15.கிமீ., தொலைவில், இந்த அற்புத ஆலயம் அமைந்திருக்கிறது. கடலூரில் இருந்தும், பண்ருட்டியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. நமது வாழ்வில் ஒருமுறையாவது இந்த திருமாணிக்குழி ஈசனை கண்டு தரிசனம் செய்யவேண்டும். மாணிக்குழி ஈசனை வணங்கி வாழ்வில் பல நன்மைகள் பெறுவோம்.

Related Stories: