ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்

கடவுளை நாம் ஏன் போற்ற வேண்டும்? கடவுளைப் போற்றுவதற்குக் காரணம் தேவையா? அவர் நம் கடவுளாகவும் நாம் அவருடைய மக்களாகவும் இருப்பது போதாதா அவரைப் போற்றுவதற்கு? திருப்பாடல்களில் ‘‘ஆண்டவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’’ என்று பல இடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவுள் நல்லவராக மட்டுமல்ல பேரன்பு கொண்டவராகவும் இருக்கிறார். அவர் நல்லவர்க்கு மட்டுமல்ல தீயோர்க்கும் நல்லவராகவும் அவர்கள் மீதும் பேரன்பு கொண்டவராகவும் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார். கடவுளை தண்டிப்பவராகவும் பழிவாங்குபவராகவும் புரிந்து கொள்வது கடவுளைப்பற்றிய தவறான ஒரு புரிதலாகும். மனித பலவீனத்தின் காரணமாக அகால மரணங்கள், விபத்துகள், இழப்புகள், பேரிடர்களினால் ஏற்படும் அழிவுகள் முதலிய வற்றைக் கடவுள் அளிக்கும் தண்டனை எனப் புரிந்துகொள்கிறோம்.

இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நாம் கடவுளைப் பற்றிய உயரிய சிந்தனைகளுக்கு மட்டும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் பற்றிய நமது தவறான மற்றும் குறைவுடையப் புரிதல்கள் கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கக் கூடாது. திருப்பாடல்கள் 34 இல் இருந்து கடவுளை நாம் எக்காலமும் ஏன் போற்ற வேண்டும் என்பதற்கு மூன்று காரணங்களை எடுத்துக்கொள்வோம்.

1) ‘‘துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்’’ (34:4). நாம் துணையின்றியும், கைவிடப்பட்டும், தனிமையை உணர்ந்து பலவித அச்சங்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். ஒரு மனிதரை அச்ச உணர்வுகள் ஆட்டிப்படைக்கிறது. தூங்கவிடாமல் செய்கிறது. நமது இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கச் செய்கிறது. அது மனதை மட்டுமல்ல உடலையும்கூட பாதிக்கிறது. இத்தகைய சூழல்களில் கடவுள் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை நம்மை அச்சத்தினின்று விடுவிக்கிறது.

2) ‘‘இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்’’ (34:6). மனிதர்களுக்குக் குறிப்பாக ஏழைகளுக்கு வாய்விட்டுப் புலம்பும் அளவுக்கு நெருக்கடிகள் வருவதுண்டு. சிலவற்றிற்குத் தீர்வுகள் தொலைவில் இருக்கும் பலவற்றிற்குத் தீர்வுகளே தென்படாது. அப்படிப்பட்ட சூழல்களில் நம்பிக்கை இழக்காமல் கடவுளைச் சார்ந்து கடவுளிடம் வாய்விட்டுப் புலம்பி, மன்றாடி அவரது ஆற்றலோடு நெருக்கடிகளைக் கடப்போம்.

3) ‘‘உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகிறார்’’ (34:18). பெருவாரியான மனிதர்களின் வாழ்க்கையில் உள்ளம் உடைந்து போவதும், நெஞ்சம் நைந்து போவதும் தவிர்க்க முடியாத அனுபவமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சிலர் தமக்கு யாரும் இல்லையென தவறானமுடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் அப்படி உள்ளம் உடைந்திருப்பவரின் அருகில் கடவுள் இருக்கின்றார். அவர்களின் கரம் பற்றியும் தமது தோள்களில் சாய்த்தும் அவர்களைத் தேற்றுகிறார், நம்பிக்கையளிக்கிறார், ஆற்றல்படுத்துகிறார் அவர்களுடன் பயணிக்கிறார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related Stories: