கிடைத்த வாழ்க்கையை கிரமமாக வாழ்வதே ஆன்மிக இல்லறம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வள

நகர்ப்பெண்ணின் நல்லாளொடும்

பெருந்தகை இருந்ததே

திருமணம் செய்து முடித்தவுடன் சைவ மரபில் வாழ்த்துப் பாடலாக இந்த தேவாரத்தை ஓதுவர். இல்லறத்தின் மாண்பினை எடுத்துச் சொல்லும் பாட்டு இது. ஆனால், இன்றைய திருமணப் பந்தங்கள் எப்படி இருக்கின்றன?

இராமாயணத்தில் சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் ஆகின்ற ஒரு நிகழ்வு. ஜனகமகாராஜா சீதையின் திருக்கரத்தை எடுத்து இராமனிடம் கொடுத்து `இந்தக் கரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்’ என்று சொல்லித்தருகிறார். பாணிக்கிரகணம் என்பார்கள். இது முடிந்தால்தான் திருமணம் முடிந்ததாகப்பொருள். அப்பொழுது, ஒரு அருமையான சுலோகத்தை வால்மீகி எழுதுகின்றார். ``இயம் சீதா மமசு தா ஸகதர்ம ஸரீதவா’’ என்ற ஆரம்பிக்கின்ற அந்தச் சுலோகம் பற்பல நுட்பமான அர்த்தங்களைக் கொண்டது. இந்த சீதை உன்னுடைய இன்ப துன்பங்களில் உனக்குத் துணையாக சமமாக இருப்பதோடு, உன்னுடைய இல்லற தர்மத்தை உன்னோடு சேர்ந்து இவள் காப்பாற்றுவாள். எனவே,  இவளுடைய திருக்கையை உறுதியாகப் பற்றிக்கொள். இதற்கு பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் பற்பல பொருளைப் படிக்க வேண்டும்.

திருமணம் என்கிற பந்தத்தின் அடிப்படையை விளக்குகின்ற அருமையான இந்தச் சுலோகம் நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் திருமண உறவுகள் எல்லாம் எப்படி இருக்கின்றன என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற இலக்கணத்தையும் காட்டுகின்றன. கிட்டத்தட்ட சில ஆண்டுகள் வரையில் இந்த இலக்கணப்படிதான் இந்தியாவின் காஷ்மீரத்தில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை உள்ள பலதரப்பட்ட மக்களும் பின்பற்றினர். இல்லறம் என்பது ஒரு நல்லறம். ஒரு தர்மம். அது அப்படித்தான் கடைபிடிக்கப்பட்டது. சுயநலத்தைவிட பொதுநலன் அதில் அதிக சதவீதம் இருக்கும்.

ஆணும், பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து உயர்ந்த வாழ்க்கையை வாழுகின்ற உன்னத நிகழ்வாகவே திருமணம் என்பது ஒரு சடங்காக (சம்ஸ்காரம் என்கிற பெயரில்) நிகழ்த்தப்பட்டது. திருமணம் என்பது ஒழுக்கம் சார்ந்த உயர்ந்த தர்மம். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்டபோதுகூட இதிலிருந்து யாரும் மாறவில்லை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக நாம் கேள்விப்படுகின்ற செய்திகள், படிக்கின்ற செய்திகள், அனுபவிக்கின்ற சில நிகழ்வுகள், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இந்த தர்ம நெறியான இல்லற நெறியானது, தடம் மாறிப்போய்க் கொண்டிருக்கிறதோ? என்று நினைக்கும்படி இருக்கிறது.

ஆணும், பெண்ணும் படிக்கிறார்கள். ஆணும், பெண்ணும் வேலைக்குப் போகிறார்கள். ஆணும், பெண்ணும் சம்பாதிக்கிறார்கள். ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், அவர்கள் இணைந்து மகிழ்ச்சியாக அதற்குப்பிறகு வாழ்கிறார்களா என்கிற கேள்வியை கேட்டுக்கொள்ளவேண்டி இருக்கிறது. புனிதமான திருமணப் பந்தங்கள் எல்லாம் இப்பொழுது சட்ட ஒப்பந்தங்கள் போல் மாறிவிட்டன என்று தோன்றுகின்றன.

திருமணப் பத்திரிக்கைகள் (ஒரு பத்திரிக்கை 130 ரூபாய் 140 ரூபாய் அளவுக்கு) ஆடம்பரமாக அச்சடிக்கப்படுகின்றன. பிரம்மாண்டமான மண்டபங்கள், திருமணத்திற்கு என்று ஏற்பாடு செய்து கொள்ளப்படுகின்றன. நன்றாக இருந்தாலும்கூட பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து வண்ண விளக்குகளாலும், மலர்களாலும், வகைவகையாக அம்மண்டபத்தை அலங்காரப்

படுத்துகின்றனர். மூன்றுவேளை ஆடம்பர உணவு, பரிசுப்பொருள் என்று மிகப்பெரிய தொகை செலவு செய்யப்படுகின்றது. இத்தனை ஆடம்பரமாக நடத்தப்படுகின்ற கல்யாணங்களில் பல சிக்கலிலும் திருப்தி இன்மையிலும் அதன் வெளிப்பாடாக உறவு விரிசலிலும், வழக்குகளிலும், விவாகரத்து முடிவுகளிலும் வந்து நிற்கின்றன என்பதுதான் சோகம்.

திருமண விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருப்பதாக வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சொல்லுகின்ற பேட்டிகளை நாம் பார்க்கின்றோம். பெண்ணும் ஆணும் படித்திருப்பதால், வேலையில் இருப்பதால், சம்பாதிப்பதால், இவற்றால் வருகின்ற ஈகோவோடு இருப்பதால், “என்னால் இனி உன்னோடு வாழ முடியாது” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று சொல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. கிராமங்களில் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், நகரங்களில் இது அதிகமாகவே இருப்பதாக சொல்லுகின்றார்கள்.

பெங்களூர் போன்ற பெருநகரங்களில் திருமண பந்தங்கள் மாறி சேர்ந்து வாழும் `லிவிங் டுகெதர்’ என்கிற மேற்கத்திய கலாச்சாரம் வந்துவிட்டதாக அங்கே பணிபுரியும் இளைஞர்களுடன் பேசும்பொழுது தெரியவருகின்றது.திருமணம் பற்றிய பிரக்ஞை இன்றைய பல குடும்பங்களில் இல்லை. வயதுக்கு வந்த ஆண்களும் பெண்களும் திருமண காலம் கடந்து எதற்காகவோ காத்திருப்பதையும் பார்க்க முடிகின்றது. பொருளாதாரக் கணக்கீடுகள் `பொருளே தாரம்’ என முடிவெடுக்க வைக்கின்றன. தெரிந்தவர்கள், உறவுகள் போன்றவர்களெல்லாம், இந்த குடும்பத்தில் நல்ல குணமுள்ள பெண் உண்டு, குணமுள்ள பையன் உண்டு, இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்ன காலம் போய், முகநூல், நட்பு, மேட்ரிமோனியல் காலங்கள் இன்றைக்கு திருமணங்களைத் தீர்மானிக்கின்ற இடமாக இருக்கின்றன.

முன் பின் அறியாதவர்கள், ஏதோ ஒரு மோகத்திலும், வேகத்திலும், கணக்கிலும், திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு, பின்னால் இது முன்னாலேயே தெரியாமல் போய்விட்டதே என்று தவிக்கிற தவிப்பு, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குடும்ப நிலைகள், ஒழுக்கம் பற்றிய விசாரிப்புகள் இன்றைக்கு இல்லை. குடும்பங்கள் சிதறுண்டு கிடப்பதால், அவர்களைப் பற்றிய முழு விபரங்களை ஒருவர்கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை.

அதனால்தான், சிலர் மூன்று நான்கு திருமணங்கள் செய்துகொள்ளும் சாமர்த்தியசாலிகளாக வலம் வந்து கொண்டிருப்பதை, செய்தித்தாள்களில் நாம் (அவர்கள் சிக்கும்போது) பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நவீன காலத்தில் இப்படி ஏமாந்திருக்கிறார்களே என்று தோன்றுகிறது. அதனால்தானே இரண்டு மூன்று ஊர்களில், தான்  உத்தியோகத்தில் இருக்கிறேன் என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

பெண்ணுக்கு உரியவர்களோ எப்படி விசாரிக்காமலேயே இருந்தார்கள்? யாரும் ஆலோசனை சொல்லவில்லையா? அந்த அலுவலகத்தில் சென்று விசாரிக்கவில்லையா போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. சம்பாதிக்கிறான், நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் என்பது ஒன்றே தகுதியாகி, பொய் சொன்னால்கூட பெண் தந்துவிடக் கூடிய நிலையும், ஆடம்பர வாழ்வுக்கனவில் பெண்ணும், அவனைத்திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலையும் வந்துவிட்டது.

குடும்ப ஒழுக்கம் என்பது பின்னால் போய்விட்டது. எது முக்கியமோ, எது விசாரிக்க வேண்டியதோ, அதைப்பற்றிய கவலை இல்லாமல், அந்தநேரப் பதவி, சம்பளம் மட்டும் கருதி, முடிவெடுப்பதால் வருகின்ற அவலம்தான் இது. இன்னொரு விஷயம் காலம் கடத்திக்கொண்டே இருப்பது. ஆம்.. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கும் 35 வயது பெண்ணும், அதே அளவு சம்பளம் வாங்கும் அதே வயது அல்லது அதைவிட கூடுதல் வயதுடைய ஆணும், தனக்குரிய துணையைத் தேடும் விவரத்தை இன்றைய திருமண விளம்பரங்களில் நாம் பார்க்கின்றோம். ஏன் இவர்களுக்கு இத்தனை ஆண்டு காலம் ஆகியும் பெண் கிடைக்க வில்லை அல்லது பையன் கிடைக்கவில்லை என்கிற கேள்வியை நாம் சிந்திப்பதே இல்லை.

அடுத்து திருமணத் தளங்களில் இருக்கக் கூடிய ஒரு விஷயம். விவாகரத்து ஆன 34 வயதான நன்கு சம்பாதிக்கும் என்கிற தொடரோடு பல விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. 22 அல்லது 23 வயதுக்குள் பெண்ணுக்கும், 25 வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்தால், இல்லறத்திற்கு சிறப்பாக இருக்கும் என்கின்ற கருத்துக்கள் மலையேறிவிட்டன.

25 அல்லது 26 வயதில்தான் ஓரளவுக்கு நல்ல வேலை கிடைக்கின்றது. அதிலிருந்து நான்கு ஐந்து வருடங்கள் சேமிக்கின்றனர். அடுத்து நான்கு ஐந்து வருடங்கள் அடைத்து விடலாம் என்று கடனை வாங்குகின்றனர். கிட்டத்தட்ட பத்து வருட சேமிப்பும் கடனும் சேர்ந்த தொகையை ஒரே நாளில் செலவாகச் செய்து பிரம்மாண்டமாக திருமணத்தைச் செய்து கொள்ளுகின்றனர். வண்ண விளக்குகள், லட்ச ரூபாயில் டெகரேஷன், இரண்டரை லட்ச ரூபாயில் ஏசி ஹால், 3 லட்ச ரூபாயில் சாப்பாடு என பணத்தைத் தண்ணீராகக் கொட்டி செய்யப்பட்ட திருமணங்கள் ஓரிரு வருடங்களில் கழித்து கசந்து போய் விடுவதோடு, திருமணத்திற்கு செய்த இத்தனைச் செலவுகளும் அர்த்த மற்றதாகிவிட்ட சோகமும் நேர்ந்துவிடுகிறது.

படிப்பும், வேலையும், பெண்ணுக்கும் - ஆணுக்கும் நடைமுறைக்கு ஒத்து வராத சில எதிர்கால அவதானிப்புகளை ஏற்படுத்தி, காக்க வைத்து ஏமாற்றுகின்றன என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் ஜாதகத்துக்கு மதிப்பு தருவார்கள். இப்பொழுது ஜாதகம் சாதகமாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜாதகம் என்பது மறைமுகமாக வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்லும் ஆயுதமாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பெண்ணுக்கும் பெண்ணின் பெற்றோருக்கும், ஆணுக்கும் ஆணினுடைய பெற்றோருக்கும் தான் எதிர்பார்த்த ஆண், ஆழ்ந்து பெண் இனி காத்திருந்தாலும் கிடைக்காது என்று தெரியவரும் பொழுது அவர்கள் உச்சிமுடியின் பெரும்பகுதி வெள்ளை

ஆகிவிடுகிறது.

கொஞ்சம் குழம்பு, ரசம், காய்கறிகளோடு கிடைத்தபோது வேண்டாம் என சொன்னவர்கள், கடைசியில் வேறு வழியின்றி, மோர் சாதத்தில் கைவைக்கும் நிலையில் வந்து முடிகிறது. வாழ்வின் உன்னதக் குறிக்கோளை உணராத வரையில் இந்த அவலங்கள் நீங்குவதற்கு வழி இல்லை. இந்தியாவின் கலாச்சாரங்களில் மிக முக்கியமானது இந்த திருமண உறவுகளும், அதன் வழியாக வருகின்ற இல்லறமாகிய நல்லறமே. தர்மங்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் வலியுறுத்துகின்றன. நினைத்த வாழ்க்கை கிடைக்காதா என்று நினைத்து ஏங்குவதை விட்டுவிட்டு கிடைத்த வாழ்க்கையை கிரமமாக வாழ்வதே இல்லறம் என்பதை உணராத வரையில், இந்த அவலங்கள் தொடரவே செய்யும்.

தொகுப்பு: பாரதிநாதன்

Related Stories: