அலிடா : பேட்டில் ஏஞ்சல்

ஜேம்ஸ் கேமரூன் படம் இயக்கினாலும் சரி, தயாரித்தாலும் சரி, அந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியொரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், அலிடா. சில மாதங்களுக்கு முன்பு டிரைலர் வெளியிட்ட பிறகு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதை 100 சதவிகிதம் பூர்த்தி செய்திருக்கிறாள், அலிடா. 2563 ஆண்டில் நடக்கும் கதை இது. உலக அழிவுப்போர் நடந்து முடிந்ததில், ஷாலம் என்ற மிதக்கும் நகரமும், அயர்ன் சிட்டி என்ற பூமி நகரமும் மட்டுமே தப்பித்து இருக்கிறது. ஷாலமில் எல்லா வசதியும் இருக்கிறது. அங்குள்ள மக்கள் சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழ்கின்றனர். அதை ஆட்சி செய்பவன், வில்லன் நோவா.

அவன் அயர்ன் சிட்டியையே அடிமையாக வைத்திருக்கிறான். இதனால், அயர்ன்ட் சிட்டியில் இருக்கும் எட்வர்டின் உடலுக்குள் புகுந்து, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான். அயர்ன் சிட்டியில் வாழும் விஞ்ஞானி டாக்டர் டைசன். அவர் ஒருநாள், ஷாலம் நகர் கொட்டும் குப்பையை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு பெண் தலை மட்டும் கிடைக்கிறது. அவளது மூளை சாகாமல் இருக்கிறது. அதைக் கொண்டு வந்து, அதற்கு உடல் கொடுத்து மீண்டும் உயிர்ப்பிக்கிறார். அவளுக்கு தன் மகளின் பெயரைச் சூட்டி, அலிடா என்று பாசத்துடன் அழைக்கிறார். மனித தலையும், எந்திர உடலும் கொண்ட அலிடா, மிகப் பெரிய சக்தி படைத்தவளாக இருக்கிறாள்.

அயர்ன் சிட்டியில் நோவா செய்யும் அக்கிரமங்களுக்கு எதிராக போராடுகிறாள். அங்கு நடக்கும் மோட்டார் பால் விளையாட்டில், எதிரிகளை வீழ்த்தி புகழ் பெறுகிறாள். இந்நிலையில், தான் ஒரு போராளி என்பதையும், நோவாவை வீழ்த்த நடந்த போராட்டத்தில் தான் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதையும் அறிகிறாள். பிறகு நோவாவை வென்று, ஷாலமை கைப்பற்ற போராட்டத்தை தொடங்குகிறாள். அதில் வென்றாளா என்பது கதை. ரோபோக்கள் வரிசையில் வந்துள்ள படமான இதில், ரோபோ ஒரு இளம்பெண்.

அவளது போர்க்குணம், திடீரென்று ஏற்படும் காதல், அப்பா பாசம் என சென்டிமென்ட் கலந்து கொடுத்துள்ளனர். கற்பனைக்கும் எட்டாத வகையில் உருவாக்கப்பட்ட அயர்ன் சிட்டி, அந்தரத்தில் தொங்கும் ஷாலம் நகரம் என, 3டியில் பிரமாண்டம் காட்டியுள்ளனர். லாரிக்கு அடியில் சிக்கிய நாயை காப்பாற்றுவதில் தொடங்கி, படா படா வில்லன்களையே போட்டுப் பொளக்கும் வரையில் அலிடாவின் வளர்ச்சியை, படத்தில் படிப்படியாக கொண்டு வந்துள்ளனர். காதலனுக்காக தன் விலைமதிக்க முடியாத இதயத்தை எடுத்துக் கொடுப்பது, முத்தத்தில் உருகி நிற்பது, ‘’நாம் இருவரும் எங்கேயாவது ஓடிப்போய் சந்தோஷமாக இருக்கலாம்’’ என்று சொல்லி, கோடம்பாக்கத்து சினிமா காதலையும், டைட்டானிக் காதலையும் கலந்து கொடுத்து இருக்கின்றனர்.

ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில், சயின்ஸ்பிக்‌ஷன் படம் என்பதையும் தாண்டி, இது உணர்வுப்பூர்வமான படமாக மாறியிருக்கிறது.
இரும்பு இதயம், எஃகு உடம்பு, பஞ்சு போன்ற கன்னம், பெரிய கண்கள் என, அலிடாவாகவே மாறியிருக்கிறார் ரோசா சலாசர். டாக்டர் டைசனாக கிறிஸ்டாப் வாட்ஸ் பக்குவமான நடிப்பை வழங்கி இருக்கிறார். டாம் ஹால்கென்போர்கின் இசையும், பில் போப்பின் ஒளிப்பதிவும் தரத்தின் உச்சம். அலிடா, பார்க்க வேண்டிய படம்.

× RELATED கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வேதிகா