×

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!

நன்றி குங்குமம் ஆன்மீகம்

இது இயல்பானதுதான்’ என்று எல்லோராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற்பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார். இத்தகு வள்ளற்குணம், தன் பாசப்பற்று மிகுந்த இவ்வுலகியலுக்குப் பகையாக இருந்ததால் இவரின் இயற்பெயர் மறைந்து ‘இயற்பகையார்’ என்னும் பெயரே வழங்கலாயிற்று. இவரின் காலம் கி.பி. 630 முதல் கி.பி. 810 வரை இருக்கலாம் என்பது சான்றோர் துணிவு.

இவரின் அருந்தொண்டை உலகறியச் செய்ய எண்ணிய உமையொருபாகன், ஒருநாள் பொய்யாக காமவுள்ளம் கொண்டு நெற்றியில் நீறுதுலங்க அடியார் வேடத்தில் இயற்பகையார் பால் அணைந்து, இதுதான் வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்காமல், ‘‘நீர் அடியார்கள் எதைக் கேட்டாலும் தருவீர் என்பதை அறிந்து வந்தேன். அதன்படி நான் வேண்டுவதைத் தருவீராயின், அதை உம்மிடம் கேட்பேன்’’ என்கிறார். அதற்கு இயற்பகையார்,

‘‘யாதும் ஒன்றும் என்பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை”


என்று ‘‘என்னிடம் தாங்கள் வேண்டும் பொருள் இருக்குமாயின் அது தங்களின் உடைமை” என்று கூறுகிறார். உடனே அடியவர், ‘உன் காதல் மனைவியை வேண்டி வந்தேன்’ என்று கூற, இயற்பகையார் சற்று கூட சிந்திக்காமல் தன் அகத்தாளை அடியவரின் உடைமையாக்கி, ஊரின் எல்லை வரை உறுதுணையாகச் சென்று வழியனுப்பினார். அப்போது அவரை எதிர்த்த உறவினர்
களின் உயிரையும் மாய்த்து, இருவரையும் வழியனுப்பிவிட்டுத் திரும்பினார்.

சற்று நேரத்தில் ‘‘இயற்பகை முனிவா ஓலம்’’ என்ற சத்தம் கேட்டது, அடியவருக்கு ஏதேனும் தடை வந்ததோ என்று அடியவரை நோக்கிச் சென்றபோது, அங்கு அடியவர் மறைந்து, இயற்பகையாரின் மனைவியார் மட்டுமே நின்றிருந்தார். இவ்வாறு இறைவன் இவர்களையும் சுற்றத்தாரையும் ஆட்கொண்டார் என்பது வரலாறு.இந்த வரலாற்றை எடுத்துக்கொண்டு, ‘ஒருவர் தன்னையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் தன் மனைவியை இன்னொருவருக்கு வழங்கலாமா? என்றும்’ இது பெண்ணடிமைத் தனம் அல்லவா? என்றும் ‘ஒருவரின் மனைவியைக் கேட்பது சிவபெருமானின் கடவுட்தன்மைக்குக் களங்கமல்லவா? என்றும் வாதிப்பார் உளர். ஏன் நமக்கே வாதம் தோன்றும்.

இதற்கு இவ்வரலாற்றை வெறுமனே கதையாகக் காணாமல் சேக்கிழாரின் செய்யுட்களின் வழிநின்று கற்று சிந்தித்தால்தான் தேவையான தெளிவு கிடைக்கும்.இயற்பகையார் தன் வாழ்க்கையில் முதன்மைக் கொள்கையாக ஒன்றைக் கடைப்பிடித்து வந்தார். அது, ‘அடியவர்கள் தம்மிடமுள்ள எதை வேண்டினாலும் அதை, இல்லையென்று எண்ணாமல் வழங்குவதாகும். சிலர் தருவார்கள்; மனமாரத் தர மாட்டார்கள். ஒன்றைக் கொடுத்து விட்டு, ‘கொடுத்து விட்டோமே?’ என்று ஏங்கிக் கொண்டு இருப்பார்கள். எதைக் கொடுத்தாலும் மனதாரக் கொடுக்க வேண்டும்.

அதனால் தான் ‘‘அறம் செய்’’ என்று சொல்லாமல் ‘‘அறம் செய விரும்பு’’ என்றார் ஔவையார். இயற்பகை நாயனாரிடம் அடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று மனத்தளவிலும் கூட நினைக்க மாட்டாராம். அதனால் தான் சுந்தரர் இவரை, ‘‘இல்லையே சொல்லாத இயற்பகையார்’’ என்று சொல்லாமல் ‘‘இல்லையே என்னாத இயற்பகையார்’’ என்று குறிப்பிட்டார்.
இக்கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாமல் வாழும் இவரிடம், இயற்பகையாருக்கே உரிய பந்தமாகிய அவரின் வாழ்க்கைத் துணை நலத்தை இறைவன் வேண்டிய காலத்து, சாக்குப் போக்குகள் சொல்லி தப்பித்துக்கொள்வது கொள்கைக்கு இழிவாகும்.

மேலும், அடியார் இயற்பகையாரிடம் முதலில் ‘இதுதான் வேண்டும்’ என்று வெளிப்படையாகக் கேட்காமல் ‘ஒரு பொருள்’ என்று குறிப்பாகக் கேட்ட போது இயற்பகையார் மறுமொழியாக, ‘‘யாதும் ஒன்றும் என்பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை’’ என்கிறார்.  இதில் முதலடியில் ‘ஒன்றும் உண்டாகில்’ என்ற சொல் சற்று சிந்திப்பதற்கு உரியது. தன்னிடமுள்ள இயங்கும் பொருள் இயங்காப்பொருள், அஃறிணை, உயர்திணை என அனைத்துப் பொருட்களும் தனது உடைமைகள் அல்ல. அவை அடியார் உடமை. அதை மீறி எது என்னிடமிருப்பினும் அதுவும் அடியாரின் உடைமைகள் என்று பாசப் பற்றகளினின்று நீங்கி வாழ்ந்தார் என்பதும் எண்ணத்தக்கது.

ஒருவனுடைய வாழ்வில் ஒவ்வொரு பந்தங்கள் பிரியும் போதும் ஏற்படும் இழப்பை ஒளவையார், ‘‘தாயோடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்;சேயோடு தான் பெற்ற செல்வம்போம் - ஆயவாழ்வு உற்றாருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம் பொற்றாலியோடு எவையும் போம்’’ என்ற பாடலில் தாயுடன் அஞ்சுவையுணவும், தந்தையுடன் கல்வியும், குழந்தையுடன் செல்வமும், உறவினர்களுடன் நல்ல வாழ்க்கையும், உடன்பிறப்புடன் வலிமையும் போய்விடும் என்று பட்டியலிட்டுவிட்டு இவற்றுக்கெல்லாம் மேலாக, மனைவி என்ற உறவு போய்விட்டால் அனைத்துமே போய்விடும் என்கிறார்.

இவ்வகையில் அனைத்துமாக விளங்கும் மனைவியையே இயற்பகையார் வழங்குகிறார் எனில், தன்னையும் தன் வாழ்வையும் சேர்த்து அடியவருக்கு வழங்கினார் என்பது பொருள். மேற்கண்ட ஔவையாரின் பாடல்களின் வழி சிந்தித்தால் மனைவியை வழங்கிய பிறகு இயற் பகையார் வாழ்வில் அனைத்துமே போய்விட்டது என்பது பொருள். ஆகவே, இயற்கையாருக்கு என்று இனி தனி வாழ்வு கிடையாது. வாழ்க்கைத் துணைநலமாகிய மனைவியை அடியார்க்கு இயற்பகையார் வழங்கியபோதே தன்னையும் வழங்கினார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லறத்தில் மனைவியின் இறப்பிற்குப் பிறகு ஆண்மகனுக்கு அருந்துணையில்லாமல் போகும் என்பதால், சில பெண்கள் வேண்டுவது தனக்கு முன் தன் கணவர் இயற்கை எய்த வேண்டும் என்பதைத்தான்.

ஆகவே, தன் மனைவியை வழங்கியதுடன் தன்னையும் சேர்த்தே வழங்கினார் என்க. இப்படி வழங்குவது என்பது யான், எனது என்கின்ற பற்றுகளற்று இருக்கின்ற நிலையேயாகும். இத்தகு பற்றற்ற குணமுடையவர் இயற்பகையார்.‘தான்’ என்ற எண்ணம் உடையவர்களுக்கே ‘தனது’ என்கின்ற உடைமைப் பற்று மேலோங்கும். இயற்பகையார் ‘தான்’ என்கின்ற எண்ணம் இல்லாதவர் என்பதை அடியவர் மனைவியை வேண்டியதும் அவரிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கொண்டு அறியலாம்.

 உலக வாழ்வில் இந்த அடியார் வேண்டியதை எந்த ஆண்மகனும் ஏற்க மாட்டான். அது தன் கௌரவப் பிரச்சனை என்று கோபப்படுவான். ஆனால் இயற்பகையார் கோபப்படவில்லை. இதுவே, அவர் ‘தான்’ என்ற எண்ணமற்றவர் என்பதற்குச் சான்றாகும். இப்படி ‘தான்’ என்கின்ற எண்ணமே இல்லாத இவரிடம் ‘தனது’ என்கின்ற பற்று ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆகவே, இவர் தன் மனைவி, மக்கள், உடைமை என எதன் மீதும் பற்றற்றவர் ஆகினார்.

அவரைப் பொறுத்தமட்டில் ‘தன்னுடைய மனைவி’ என்று சிந்திக்கும் தன்மையை விடுத்து, கொடுத்தல் என்கின்ற செயலையே முன்னிறுத்தினார். ஆகவே அடியார் அவரிடம்  உயிரினைக் கேட்டாலும்கூட தந்திருப்பார் என்பதே உண்மை. மற்றொருவரின் மனைவியை சிவபெருமான் கேட்பது என்பது அவரின் கடவுள் தன்மைக்குக் களங்கம் ஏற்படுத்துமல்லவா என்கிற கேள்வி எழுகிறது.

இக்கேள்விக்கு சேக்கிழாரின் துணையுடன் விடை காண முற்பட வேண்டும். பெரியபுராணத்தில் எந்த இடத்திலும் சிவபெருமான் இயற்பகையாரின் மனைவியை கேட்டு வந்ததாகப் பதிவில்லை; மாறாக, வேண்டி வந்ததாகத்தான் குறிப்பிடுகிறார் என்பார் பேராசிரியர் சாமி. தியாகராசனார். ‘‘மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தனம்’’ என்பது புராணம்.

‘வேண்டுதல்’ என்பது வேறு; ‘கேட்டல்’ என்பது வேறு; வேண்டுதல் என்பது இவ்விடத்தில் வரம் வேண்டலைப் போலாகும். வேண்டுதல் வேண்டாமை இலானாகிய இறைவன், இங்கு வேண்டி வந்த காரணம் தொண்டரின் தொண்டை வெளிப்படுத்தவே ஆகும். மேலும் இப்படி இறங்கி வந்த தன்மை இறைவனின் தியாகத்தையும் அடியார்க்கு எளியவனாகும் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், அடியவர் அம்மையாரை வேண்டினாரே தவிர, அவரைத் தவறாக ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது எண்ணத்தக்கது.

இவ்வரலாற்றில் இன்னும் சிந்திக்க வேண்டிய பகுதிகள், இயற்பகையாரின் மனைவியாரின் மனநிலை மற்றும் இயற்பகையாரின் செய்கையும் ஆகும். இயற்பகையார் தம் மனைவியாரை அடியவருக்கு அளித்தபோது, ‘‘என்னுயிர்க்கு ஒரு நாதா! நீர் உரைத்த ஒன்றை நான் செய்யும் அத்தனை அல்லாம் உரிமை வேறுளதோ எனக்கு’’ என்ற அடிகளில் தன் உயிருக்கு நாதர் நீர்தான் என்றும், தாங்கள் இப்படி என்னை வழங்கியதற்கு நான் உடன்படுவது என்பது எனது உரிமை என்கிறார். இதன்மூலம் இயற்பகையாரும் அவருடைய மனைவியாரும் உடல், பொருள், ஆவி ஆகிய பற்றுக்களிலிருந்து நீங்கி வாழ்ந்தனர் என்பது புலப்படுகிறது.

மேலும், தன்னை அடியவருக்குக் கொடுத்தபோது இயற்பகையாரின் மனைவியார் தன் கணவரின் பாதத்தைப் பணிகிறார். இச்செய்கையின் மூலம் அவர் மனமுகந்துதான் தன் கணவரின் செயலுக்கு உடன்பட்டார் என்பது தெளிவாகிறது. அப்படி அவர் வணங்கியதும் இயற்பகையார் தன் மனைவியின் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார். இவரின் இச்செயலானது அவர் ‘தன் மனைவி’ என்கின்ற எண்ணம் சற்றும் இல்லாதவராய் மனைவியார் ஒரு சிவசம்பந்தமுடைய அடியார் என்றே கருதினார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

இவ்வரலாற்றில் கணவன் மனைவி இருவரும் ஒத்தே எந்தச் செயலையும் செய்ய வேண்டும் என்பது புலப்படுகிறது. கணவரின் கொள்கைக்கு மனைவி உடன்பட்டவராக இருக்க வேண்டியதைப் பெண் விடுதலைக்காகப் பல பாடல்கள் பாடிய பாரதியாரின், ‘‘காதல் ஒருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து’’ என்ற அடிகள் வெளிப்படுத்துகின்றன.
ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு அக்கொள்கை தன்னை பாதிப்பதாக இருந்தால் அக்கொள்கையைத் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளும் தற்கால வாழ்வில், எக்காரணம் கொண்டும் கொள்கையில் விதிவிலக்குகள் கொள்ளக்கூடாது என்பது புராணத்தில் இருந்து புலப்படுகிறது. எண்ணம்தான் சொல்லாகவும் செயலாகவும் மாறுகிறது. இயற்பகையார்
‘இல்லையே’ எண்ணாமல் வாழ்ந்தார்.

அதனால்தான் அது சொல்லாகவும் செயலாகவும் மாறியது. அதன்பொருட்டு இயற்பகை தம்பதியரின் திருவுருவச்சிலை காவிரிப் பூம்பட்டினத்துச் சாய்க்காடு திருத்தலத்தில் வழிபாட்டிற்குரியதாக இருக்கிறது. அவர்களை வழிபடுவோம்; அவர்கள் வழியில்படுவோம்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

Tags :
× RELATED சுந்தர வேடம்