×

பழனி: அறிந்த தலம் அறியாத தகவல்கள்

பழனி

பழனி- திருவிழா நகரம்

முருகப் பெருமான் விரும்பி வந்தமர்ந்த இடம் பழநி. நக்கீரர் வந்து பாடியத் திருத்தலம். தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடு. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் வந்து சண்முகநதியில் நீராடி இங்கு கொலுவீற்றிருக்கும் முருகனிடம் அருள்பெற்றுச் சென்றனர். இங்கே ஆண்டுதோறும் புகழ்பெற்ற திருவிழாக்கள் நடைபெறுவதால், பழநிமலையை ஆன்மிகத் திருவிழா நகரம் என்று கூறுகின்றனர். அவற்றுள் குறிப்பிடத்தக்க இரண்டு: தைப்பூசத்திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா.

கையில் தண்டம் வைத்து ஆண்டிக் கோலத்தில் முருகன் இருப்பதால் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறார். பழநியில் சந்தனமும் கௌபீனமும் சிறப்பு பிரசாதங்களாகக் கருதப்படுகின்றன. நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு தினசரி இரவில் சாத்தப்படும் இவை, அனைத்துப் பிணிகளையும் நீக்கவல்லவை என்பார்கள்.

காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர் மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசித்தால் குடும்பத்தில் மங்கலம் நிலைக்கும் என நம்பப்படுகிறது. முருகனை சமாதானப்படுத்த வந்த பார்வதி, பெரியநாயகி அம்மனாக நகருக்குள்ளும், சற்று தள்ளி நின்ற சிவன், பெரியாவுடையாராக வடக்கில் 5 கி.மீ தூரம் தள்ளியும் கோயில் கொண்டுள்ளார்கள். மலைகளைக் காவடியாக சுமந்து வந்த இடும்பாசுரனுக்கு சக்திகிரியில் தனிக்கோயில் உள்ளது. இங்கு பிரம்மா வில், அம்போடு வேடுவவடிவத்தில் அருள்கிறார்.

பழனியும் ஜோதியும்

கேரளாவில் இருந்து நம்பூதிரி ஒருவர், பழனிமலைக்கு வந்து பழனியாண்டவரைத் தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் அவ்வாறு தரிசனத்திற்காகப் பழனிமலை வந்தபோது, ஔி வெள்ளத்தின் நடுவே பழனிமலைப்பரமன் தரிசனம் தந்து, ‘‘யாம் விக்கிரக வடிவாகக் கொடுந்துறை ஆற்றில் இருக்கிறோம். அதை எடுத்துப் பிரதிஷ்டை செய்து வழிபாடுகளைச் செய்! இங்கே பழனிமலையில் வந்து தரிசித்த பலன் கிடைக்கும்’’ என்றார்.

பழனியாண்டவர் உத்தரவின்படி உருவான அந்த கோயில் கேரளா - சங்கனாச்சேரியில் உள்ள `பெருநா சுப்பிரமணியர் கோவில்’. இங்கே பங்குனி மாதம் 16-ஆம் நாள் மூலவரான முருகனின் திருமுடி முதல் திருவடி வரை, ஒரு நிமிடநேரம் சூரிய ஔி முழுமையாகத் தழுவும் காட்சியைத் தரிசிக்கலாம்.

அருணகிரிநாதர் பெற்றது

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு இங்கே, திருவாவினன் குடி முருகப்பெருமான், ஜபமாலை தந்து அருள் புரிந்தார். ‘ஜபமாலை தந்த சற்குருநாதா! திருவாவினன்குடி பெருமாளே!’ என அருணகிரிநாதர் இந்த தகவலைத் திருப்புகழில் பதிவு செய்திருக்கிறார்.

போகர் உருவாக்கியது

பழனியாண்டவர் விக்கிரகத்தை உருவாக்கியவர் சித்தரான போகர். உருவாக்க ஒன்பது வருடங்கள் ஆனது. மிகவும் சக்தி வாய்ந்தது.

81 சித்தர்கள்

பழனியாண்டவர் விக்கிரகத்தை, அம்பாள் - முருகன் - அகத்தியர் ஆகியோரின் உத்தரவுப்படியே தயாரித்தார் போகர். மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருவுருவை உருவாக்க நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அபூர்வ மூலிகைகளைத் தேர்வு செய்தார். அவருடைய சொற்படி 81 சித்தர்கள் நவபாஷாணத்தைத் தயாரித்தார்கள்.

மேற்கு நோக்கி?

போகர் இல்லறவாசியாக இருந்தபோது, தன் மனைவியின் விருப்பத்திற்காக அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி, பழனியாண்டவர் திருவடிவை மேற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தார். இதன் காரணமாக மலைநாட்டில் கேரளாவில் உள்ள பலருக்கும் பழனியாண்டவர் குலதெய்வமாக இருக்கிறார்.

மரகத லிங்கம்

போகரின் சமாதியின் மேல், மரகதலிங்கம் உள்ளது. போகரால் பூஜை செய்யப்பட்டது. நறுமண நாயகர் இங்கே மூலவரைச் சுற்றி எப்போதும் ஒரு இனிமையான நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். வெளியில் வேறு எங்கும் உணர இயலாத நறுமணம் அது.

தெளிவு தரும் தெளிவான திருமேனி

இங்கே மூலவரின் நெற்றியில் ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள்கள், கைகள், கை விரல்கள் என அனைத்தும், உளி கொண்டு செதுக்கியதைப் போலப் போகரால் அற்புதமான முறையில் உருவாக்கப் பட்டிருக்கின்றன. தெளிவு தரும் தெளிவான தெய்வம்.

தீர்த்தப் பிரசாதம்

மிகுந்த சூடான இந்த விக்கிரகத்திலிருந்து, இரவு முழுதும் நீர் கசிந்து கொண்டே இருக்கும். இந்த நீரை, மறுநாள் காலையில் அபிஷேகத் தீர்த்தத்துடன் கலந்து, அடியார்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்கள்.

இடைவேளை

அபிஷேகம் முடிந்து அலங்காரமும் முடிந்து விட்டால், அடுத்த அபிஷேகம் வரையில் மாலை சாற்றுவதோ, அர்ச்சனை செய்வதோ கிடையாது.

நான்கும் இரண்டும்

இங்கே சுவாமிக்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி எனும் அந்த நான்கு விதமான அபிஷேகப் பொருட்களுடன், மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீரும் சேர்ப்பார்கள். முன் சொன்னவற்றில், பன்னீர், சந்தனம் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை சுவாமியின் திருமுடி மீது வைத்து, உடனே எடுத்துவிடுவார்கள். திருமுடி முதல் திருவடிவரை முழு அபிஷேகமும் சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் மட்டுமே. சிரசில் வைக்கப்பட்ட விபூதி என்பது, சித்தர் உத்தரவால் அடியார்களுக்கு வழங்கப்படும் பிரசாதம். கிடைப்பதற்கு அரிதானது இது.

பி.என். பரசுராமன்

Tags : Palani ,
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு