×

சீலைக்காரி அம்மன்

வேப்பங்குடி, கரூர்

பகுதி - 1

கரூர் மாவட்டம் காணியாளன்பட்டிக்கு அருகில் உள்ளது வேப்பங்குடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டம்மா. பிறவியிலேயே வலதுகால் சற்று சரியில்லாமல் இருக்கும்.

பட்டம்மா பட்டியம்மானது

``தனது மகள் மாற்றுத்திறனாளியாக பிறந்திருந்தாலும் என்னை பொறுத்தவரை என் மகள் பட்டத்து இளவரசி. ஆம்பிளைங்களா பொறந்த அண்ணன்மார்கள், உங்களுக்கே அவ படியளக்கிற இடத்தில அவ இருப்பா. அதனால அவ நம்ம வீட்டு இளவரசி அதனாலதான் அவளுக்கு பட்டத்தம்மான்னு பெயரு வச்சிருக்கிறேன்.’’ என்று மகன்களிடம் பெருமைபட கூறியது மட்டுமல்லாமல் மகளுக்கு அந்த குறைகள் தெரியாத அளவிற்கு பாசம் காட்டி வளர்த்தார் அவரது தந்தை.

 எனவே, பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்தார்கள். பட்டம்மாளின் தங்கை பெயர் வீரம்மாள். பட்டம்மா என்ற பெயரே பின்னாளில் மருவி, பட்டியம்மா என்றாயிற்று. அன்புக்குரிய அண்ணன்கள், பாசத்தைக் கொட்டும் தங்கை... எனப் பட்டியம்மாவின் வாழ்க்கை இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது. பட்டியம்மா பருவம் எய்தியிருந்த நேரம். அந்தச் சமயத்தில் கரூர் கிராமத்திற்கு வணிகம் செய்ய அண்ணன், தம்பி இருவர் வந்தனர்.

 இவர்கள் பட்டு நூலைக்கொண்டு பட்டுச்சீலை நெய்து, வியாபாரம் செய்பவர்கள். அவர்களிடம் சென்ற பட்டியம்மாவின் சின்ன அண்ணன்கள் இரண்டு பேரும் சென்று என் தங்கைக்கு பட்டு சேலை, அவள் உடல்வாகுக்கும், வண்ணத்திற்கும் ஏற்றவாறு புதிதாக நெய்து தரவேண்டும் என்று கூறினர். அவர்கள், அணியும் நபரை நேரில் பார்த்தால் நல்ல முறையில் நெய்து தருகிறோம் என்று கூறியதன்பேரில், அந்த இரண்டு பேரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தனர் பட்டியம்மாவின் சின்ன அண்ணன்மார்கள்.  

அப்போது, பெரியவங்க வீட்டில் இல்லை. வந்த நெசவாளர்கள் இருவரின் பெரிய அவினாசி வீட்டின் வெளியே நிற்க, சின்ன அவினாசி மட்டும் பட்டியம்மாவின் சின்ன அண்ணனுடன் சென்று பட்டியம்மாவை பார்க்க செல்கிறார். அண்ணன் அழைப்பை ஏற்று அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள் பட்டியம்மா. சின்ன அவினாசியைக் கண்டார். அப்போது பட்டியம்மாவின் பெரிய அண்ணனும், அண்ணியும் வந்துவிட்டனர். ``யாருங்க நீங்க எங்க வீட்டுல’’? என்று கேட்க, பட்டியம்மா வாய் திறந்து பேசும் முன், அவளது சின்ன அண்ணன் பதில் கூறினார். சின்ன அவினாசி யார் என்பதையும், எதற்காக அழைத்து வந்ததையும் பற்றி விளக்கி கூறினார்.

உடனே அண்ணி கூறினாள், ``பூப்பெய்தி இருப்பவள் முதலில் பார்க்க வேண்டிய ஆண் யார் என்றால், ஒண்ணு தாய்மாமன் முகத்தை அல்லது அவள கட்டிக்க போறவன, நீங்க இப்படி பண்ணிட்டீங்களே கொழுந்தானரே’’ என்று கூறியதோடு, ``சரி விடுங்க’’ என்று கூறிவிட்டு அவர்கள் வேலையை பார்க்கச் சென்று விட்டனர். பட்டியம்மா மனதில் தவறு இழைத்துவிட்டோமோ என்ற அச்ச உணர்வோடு இருக்க, சின்ன அவினாசிக்கும், ஒரு பெண்ணோட வாழ்க்கையில் முதற்கட்ட சபலத்துக்கு நாம் ஆளாகிவிட்டோம். நாமே அவளை திருமணம் செய்தால் எப்படி என்று எண்ணினார். அதை தனது அண்ணன் பெரிய அவினாசியிடம் எடுத்துக் கூறினார்.

பார்வை பட்டவரோடு பட்டியம்மாவிற்கு திருமணம்


அண்ணன் பெரிய அவினாசி, பட்டியம்மாள் வீட்டில் பேச, பட்டியம்மாள் குடும்பத்தினரும், திருமணத்துக்கு சம்மதித்தார்கள். பட்டியம்மாளின் அண்ணன்மார், தங்கள் பார்த்து வந்த கடவூர் ஜமீன் அரண்மனைக் காவலாள் பணியை தங்கையின் கணவருக்கு சீதனமாக கொடுத்தனர். மேலும், பொன்னும் பொருளும் தந்து தங்கையை மணமுடித்து வைத்தனர். சின்ன அவினாசி மனைவியோடு பாளையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள கோட்டாநத்தம் கிராமத்தில் குடியேறினார். தம்பியுடன் பெரிய அவினாசியும் வாழ்ந்து வந்தார். சின்ன அவினாசி, தான் பார்க்கும் காவல் பணியைப் பெரிய அவினாசியோடு பகிர்ந்துகொண்டார்.

இருவரும் சேர்ந்து ஜமீன் காவல் பணியைச் செய்துவந்தார்கள். நாட்கள் நகர்ந்தன. சீதனமாக வந்த தம்பியின் பொன், பொருள், சொத்துக்கள் மீது பெரிய அவினாசிக்கு ஆசை வந்தது. தம்பி மீது வீண்பழி சுமத்தி, ஜமீனின் கோபத்துக்கு ஆளாக்கி, தண்டனை பெற்று, தம்பி மாண்டு போனால் சொத்துக்கள் தனக்கு வந்து விடும் என்று எண்ணினார். ஒரு நாள், ஜமீன் அரண்மனையில் இருந்த ஒரு குதிரையை இரவோடு இரவாகத் திருடி, வேறு ஊரு நபருக்கு விற்றுவிட்டார் பெரிய அவினாசி.

அப்போது, சின்ன அவினாசி காவல் பணியில் இருந்த நேரம். காலையில் சின்ன அவினாசி எழுந்து பார்த்தபோது குதிரையைக் காணவில்லை என்பது தெரியவந்தது. செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனாலும், நடந்ததை ஜமீனிடம் தெரிவித்தாக வேண்டுமே! நேரே ஜமீன்தாரிடம் போனார். ‘‘ஐயா... நம் ஜமீனில் ஒரு குதிரையைக் காணவில்லை. அரண்மனை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன்’’ என்று பதற்றத்துடன் சொன்னார். என்ன சமாதானம் சொன்னாலும் ஜமீன் மனம் இரங்கவில்லை. ‘‘இன்று மாலைக்குள் அந்தக் குதிரையுடன் நீ வரவில்லையென்றால், உனக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’’ என எச்சரித்து அனுப்பினார்.

சின்ன அவினாசிக்கு மரண தண்டனை

சின்ன அவினாசி நொந்துபோய் வீடு திரும்பினார். நடந்ததை பட்டியம்மாளிடம் சொல்லிவிட்டு, ஊர் முழுக்கத் தேடினார். எங்கு தேடியும் குதிரை கிடைக்கவில்லை. சோர்ந்து, களைத்து அரண்மனைக்கு வந்தார் சின்ன அவனாசி. ஜமீனிடம் குதிரை கிடைக்கவில்லை என்ற விவரத்தைக் கூறினார். ஜமீன்தார் உடனே அரசவையைக் கூட்டினார். சின்ன அவினாசிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கணவருக்கு மரண தண்டனை கிடைத்த செய்தி, பட்டியம்மாளுக்கு இடியாக விழுந்தது. அப்போது, பட்டியம்மாள் மூன்று மாத கர்ப்பிணி.

(அடுத்த இதழில் தொடரும்..)

தொகுப்பு: சு. இளங் கலைமாறன்

Tags : seaman amman ,
× RELATED காமதகனமூர்த்தி