×

நேரத்தை எப்படிச் செலவு செய்தாய்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பெரும்பாலான மக்கள் இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். ஒன்று உடல் நலம். மற்றொன்று ஓய்வு.’’நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மனிதன் பணிகளின் குறுக்கீடு இன்றி, ஓய்வாக இருக்கும்போது தன் மறுமை வாழ்வைச் சீராக்கும் முயற்சி களில் ஈடுபட வேண்டும். இல்லையேல் அவன் நிச்சயம் இழப்புக்குரியவன் ஆகிவிடுவான்.

நமக்கு நாள்தோறும் இரண்டு மணிநேரம் ஓய்வு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஓய்வுநேரத்தை எப்படிச் செலவிடுவது?
தவறான வழிகளிலும், மன இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் வழிகளிலும் செலவிடலாம். அல்லது சமூக சேவைப் பணிகளிலும் இறை வழிபாடுகளிலும் நல்லநூல்களை வாசிப் பதிலும் செலவிடலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாய் ஆக்கிக்கொள்வதும், பாழ்படுத்திக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், ஒன்று.

நேரத்தை எப்படிச் செலவு செய்தாய் என்று இறைவன் மறுமையில் நிச்சயம் கேட்பான். அதேபோலத்தான் உடல்நலமும். உடலில் நல்ல வலிமையும் ஆரோக்கியமும் இருக்கும் போதே நற்பணிகளில் ஈடுபடவேண்டும். குறிப்பாக, இளமைக்காலம் என்பது இறைவனின் மகத்தான ஓர் அருட்கொடை. அதை எந்தப் பயனுமின்றி கழிப்பது பெரும் ஏமாற்றத்தில் முடியும்.

இளமைக் காலம்தான் மனிதனின் உச்ச நிலையாகும். இந்தப் பருவம்தான் மனிதனின் வாழ்வையும் அவனது அறிவு, திறமை, வலிமை அனைத்தையும் ஒரு நிறைவான நிலைக்குக் கொண்டுவரும் பருவம். ஆகவேதான் நபிகள் நாயகம் அவர்கள், ‘‘ஒட்டுமொத்த வாழ்நாளையும் எப்படிக் கழித்தாய் எனும் இறைவனின் கேள்விக்குப் பதில் சொல்வதுடன், குறிப்பாக இளமைக் காலத்தை எப்படிக் கழித்தாய் எனும் கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும்’’ என்று எச்சரித்துள்ளார்கள்.

ஆனால், உடல்நலமும் ஓய்வும் இருப்பவர்கள் தங்களின் பொன்னான நேரத்தைப் பெரும்பாலும் வீணாகத்தான் கழிக்கிறார்கள். கடைத்தெருக்களில் திரிவது, இலக்கின்றி ஊர்சுற்றுவது, கண்றாவி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது, கிளப்புகளுக்குச் சென்று சூதாடுவது என்று அவர்களின் நேரம் போகிறது.

இறைவனின் மகத்தான அருட் கொடைகள் குறித்து எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம். இப்படி நேரத்தைப் பாழடிப்பதைவிட மறுமைக்குத் தேவையான பணிகளில் ஈடுபடலாம்தானே? குர்ஆன் ஓதுதல், அதன் விளக்கத்தைப் புரிந்துகொள்ளல், தொழுகையை முறையாக நிறைவேற்றுதல், இறைத் தியானத்தில் ஈடுபடுதல், நல்ல சொற்பொழிவுகள் அடங்கிய ஒலிப்பேழைகளைக் கேட்டல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் என்ன?

காலம் விரைவாகக் கைநழுவிப்போய்விடும். உலகச் செல்வங்களை எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் கடந்துபோன ஒரு நொடியைக் கூட நாம் திரும்பப் பெற முடியாது. காலம் கடக்கும் முன்பே கடமைகளை ஒழுங்காகச் செய்வோம்.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘வறுமைக்கு முன் செல்வத்தையும் நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும் பணிக்கு முன் ஓய்வையும் முதுமைக்கு முன் இளமையையும் மரணத்திற்கு முன் வாழ்வையும் அருட்கொடைகளாய்க் கருதுங்கள்.’’

(நபிமொழி)

Tags :
× RELATED ஸ்ரீ ஸாயி கராவலம்பம்!