×

தவம் செய்வோர் வாக்கின் வலிமை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

தவம் செய்வோர் சொல் மாபெரும் வலிமை பெற்றுவிடுகிறது. காலத்தை வென்றுநிற்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் நடக்கிறது. முனிவர்களின் சொல், ஆக்கவும் செய்யும். அழிக்கவும் செய்யும். அவர்கள் யாரையும் அழிக்க நினைக்கமாட்டார்கள். ஆயினும், அளவுக்கு மீறி அவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தால் அவர்களறியாமல் அவர்களிடமிருந்து பிறக்கும் சொல், துன்பம் கொடுத்தவரைத் தாக்கும்.இவற்றையெல்லாம் திருக்குறள் பேசுகிறது.

மந்திரம் என்பதுதான் என்ன? துறவியர் சொன்ன சொல்தான் மந்திரம். அவர்களின் தவச்சக்தி, அந்தச் சொற்களில் ஊடுருவி அதை மந்திரமாக்குகிறது. நாம் அதைச் சொல்லும்போது அந்தச் சொற்களில் புதைந்திருக்கும் சக்தி காரணமாக, அது பலனளிக்கத் தொடங்குகிறது.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப

என்பது தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா.

நிறைமொழி என்றால் `சொல்லின் ஆற்றல் முழுமையாக வலிமையுடன் எந்த இடத்திலும் செல்லும் வகையில் அமைந்திருத்தல்’ என்று பொருள். அத்தகைய சொல்லைச் சொல்லும் ஆற்றல் மிக்கவர்களே முனிவர்கள். அவர்கள் சொன்னால் அது ஓர் ஆணை போல. அந்த மறைமொழிதான் மந்திரமாகிறது என்கிறார் தமிழ் மொழியின் பழம்பெரும் இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியர். அவர் கருத்தையே வழிமொழிந்து ஒரு குறளைப் படைக்கிறார் வள்ளுவப் பேராசான்.

`நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.’


(குறள் எண் 28)

நிறைந்த வாக்குச் செல்வம் உடைய மேலான பெருமக்களின் பெருமையை, அவர்கள் சொன்ன மந்திரச் சொற்களே உணர்த்திவிடும்.

`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.’


(குறள் எண் 25)

அகன்ற வானத்தில் வாழும் இந்திரன் அடைந்த நிலை, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்த தவமுனிவரின் ஆற்றல் எத்தகையது என்பதற்குச் சான்று.
தான் இல்லாத நேரத்தில், பூனைபோல் பதுங்கி வந்து தன் மனைவி அகலிகையுடன் தகாத உறவுகொண்ட இந்திரனைச் சபித்தார் கெளதமர். `உன் மேனியெல்லாம் யோனியாகட்டும்` என அவர் சொல்லால் இட்ட சாபம் இந்திரனைத் தாக்கி அவன் உடலை மாற்றியது.

பதறிய இந்திரன், சாப விமோசனம் வேண்டினான். `மற்றவர்க்கு அவை கண்களாய்த் தெரியும்’ என மனமிரங்கிச் சாப விமோசனம் அருளினார் முனிவர். தவ முனிவரின் சொல் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதற்கு இந்திரன் சரிதம் ஒரு சான்று.

`ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்.’


(குறள் எண் 264)

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பர்களை உயர்த்துதலும் சாத்தியமா என எண்ணிப் பார்த்தால், சாத்தியம்தான். தவத்தால் அதைச் செய்ய முடியும். தவத்தில் சிறந்த முனிவர்கள் பகைவர்களை அழிக்கவும் நண்பர்களைக் காக்கவும் இயலக் கூடியவர்கள் என்பதையே இக்குறள் மூலம் வள்ளுவம் சுட்டுகிறது. இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? ஆக்கவும் அழிக்கவும் வல்ல சொல்லைச் சொல்லக் கூடிய தவ முனிவர்களிடம், நாம் எச்சரிக்கையோடு மரியாதையாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.  

`குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.’


(குறள் எண் 264)

தவ முனிவர்கள் குணக் குன்றாக விளங்குபவர்கள். எளிதில் சீற்றம் கொள்ளமாட்டார்கள். ஆனால், சீற்றம் வருமாறு செய்துவிட்டால், அவர்களின் சீற்றத்திலிருந்து ஒருவரை ஒரு கணம்கூட யாரும் காக்க இயலாது.இந்தக் குறட்பாக்கள் அனைத்துமே தவம் செய்வோரது வாக்கின் வலிமை பற்றித்தான் பேசுகின்றன.நமது இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களும் தவமுனிவர்களின் சொல் வலிமை குறித்து நிறையச் சொல்கின்றன. சாபங்களும், சாப விமோசனங்களும் புராணங்களில் நிறையக் காணப்படுகின்றன. ராமனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயி மேல் வசிஷ்டரின் மனைவி அருந்ததி கடும் கோபம் கொண்டாள். தவமுனிவரின் மனைவியான அவளுக்கும் தவச் சக்தி உண்டல்லவா? அவள் கைகேயியைச் சபித்தாள்.

எப்படித் தெரியுமா? பாரத தேசத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு கெளசல்யா என்றும் சுமித்ரா என்றும் தசரதரின் மற்ற இரு மனைவி பெயர்களை வைப்பார்கள். ஆனால், யாரும் தங்கள் பெண்குழந்தைக்கு கைகேயி எனப் பெயரிட மாட்டார்கள் எனச் சபித்தாள் அருந்ததி என்கிறது ஓர் அபூர்வராமாயணம். அந்தச் சாபம் இன்றளவும் நிலைபெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.
கைகேயி என்ற பெயரை எந்தப் பெண்ணுக்கும் யாரும் வைக்கக் காணோம். தசரதரின் மரணத்திற்குக் காரணமும் ஒரு சாபம்தான். சிரவணன் என்ற சிறுவன் தாய் தந்தையர்க்காக நதியில் குடத்தில் நீர்சேந்தும் ஒலிகேட்டு யானை நீர் அருந்துவதாகத் தவறாகக் கணித்தார் தசரதர். ஒலியை நோக்கிச் செல்லும் சப்தவேதி என்ற அம்பைச் செலுத்த சிரவணன் மாண்டுபோனான்.

அவனது தாய்தந்தையர் தீப்பாய்ந்து உயிர்விட்டனர். உயிர்விடும்போது, தங்களைப் போலவே புத்திர சோகத்தால் தசரதன் இறப்பான் என அவர்கள் சபித்தனர். அந்த சாபத்தைக் கேட்டுத் துயரமும் மகிழ்ச்சியும் தசரதனிடம் தோன்றின என்கிறது ராமாயணம். துயரம், புத்திரசோகம் நிகழப் போவதை எண்ணி, மகிழ்ச்சி, புத்திர பாக்கியம் இல்லாத தனக்குப் புத்திரன் பிறப்பான் என்பதை எண்ணி, சாபமே வரமாய் மாறிய சந்தர்ப்பங்கள், இப்படிச் சில நமது இதிகாசங்களில் உண்டு.

தான் பூஜைசெய்த சாளக்கிராம வடிவங்களைக் கிணற்றில் கொண்டு போட்ட நளன் என்ற வானரத்தின் மீது கோபம் கொண்டார் மாதவேந்திரர் என்ற முனிவர். கிணற்றில் மூழ்கிய சாளக்கிராமங்களை எடுப்பது சிரமமாக இருந்ததால், `இனி நீ தண்ணீரில் எதைப் போட்டாலும் அது மூழ்காமல் மிதக்கக் கடவது’ எனச் சபித்தார்.அந்தச் சாபம், பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் வரமாக மாறிற்று. சேதுபந்தனத்தின்போது கடல் நீரில் நளன் போட்ட கல்லெல்லாம் மிதக்கத் தொடங்கின. அதனால், மிக எளிதாகப் பாலம் கட்ட முடிந்தது என்பதை விவரிக்கிறது ராமாயணம். திருமாலைக் குறித்துத் தவம் நிகழ்த்திக் கொண்டிருந்த புஞ்சிகஸ்தலை என்ற பெண்மேல், ராவணன் ஆசைகொள்ள, அவள் சீற்றமடைந்தாள்.

பெண்ணாலேயே ராவணன் அழிவான் என்று அந்தத் தவச்செல்வி சபித்த சாபத்தால்தான், ராவணன் சீதையால் அழிந்தான் என்கிறது ராமாயணம். தவம் செய்வோர் வாக்கின் வலிமையைப் புலப்படுத்தும் தகவல்கள் மகாபாரதத்திலும் உண்டு. பாண்டு இறந்தது ஒரு முனிவரின் சாபத்தால்தான்.

கிண்டமா என்ற முனிவர், மான் வடிவெடுத்து தன் மனைவியையும் மான் வடிவெடுக்க வைத்து, இல்லற இன்பத்தில் ஈடுபட்டிருந்தார். பொதுவாக இணைப் பறவைகளையோ இணை விலங்குகளையோ கொல்வது அறமல்ல. ஆனால் பாண்டு அந்த முனிவரின் மான் வடிவத்தை உணராது, அவரை மான் எனவே கருதி, அறம் மீறி அவர் மீது அம்பெய்தான். மரணம் சம்பவிக்கும் தருணத்தில் கிண்டமா முனிவர், `பாண்டு எந்தப் பெண்ணை இச்சையுடன் தொட்டாலும், அக்கணமே அவன் மாண்டுபோவான்’ எனச் சபித்தார்.

இதையறிந்த பாண்டுவின் முதல் மனைவி குந்தி எச்சரிக்கையாக இருந்தாள். இரண்டாம் மனைவி மாதுரி அத்தகு எச்சரிக்கையைப் பின்பற்றவில்லை. பாண்டு உணர்ச்சி மேலீட்டால் அவளை ஒருநாள் தொட முயன்றபோது மரணமடைந்தான் என்கிறது மகாபாரதம். கிண்டமா முனிவரின் தவம் அவரது வாக்கில் வந்த சொற்களை நிறைவேற்றி அவர் பேசியதைச் சாபமாக மாற்றிவிட்டது.சமண சமயத்தைச் சார்ந்த பெண் துறவியான கவுந்தி அடிகளின் தவ ஆற்றலையும், அதனால் அவர் வாக்கிற்குச் சக்தி இருந்ததையும் சிலப்பதிகாரம் பேசுகிறது.

கண்ணகியையும் கோவலனையும் அழைத்துக் கொண்டு மதுரை நோக்கிக் கானகத்தின் வழியே நடக்கிறார் கவுந்தி அடிகள். அவரிடம் `உடன் வருவோர் யார்?’ என இருவர் வினவ `அவர்கள் தம் மக்கள்’ எனப் பதில் சொல்கிறார் கவுந்தி அடிகள்.

`ஒரே வயிற்றில் பிறந்தோர் மண முடிப்பரோ?’ என அவர்கள் கேலி பேசவும், அடிகள் கடும் சீற்றம் கொள்கிறார். `முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக!’ என அவர் அவர்களைச் சபித்ததாகவும், கேலி பேசிய இருவரும் உடனே நரிகளாக மாறினார்கள் எனவும் சிலம்பு கூறுகிறது. கண்ணகியின் வேண்டுகோளின்படி பின்னர் அவர்களுக்குச் சாப விமோசனம் அருளினார். கவுந்தி அடிகள் எனவும் சிலம்பு சொல்லிச் செல்கிறது. இவ்விதம் ஒரு பெண் துறவியின் வாக்கு வலிமைக்குச் சிலம்பு சான்று தருகிறது.

மகாபாரதத்தில் வரும் கிளைக்கதையான சாகுந்தலம், துர்வாச முனிவரின் வாக்கு வலிமை பற்றிப் பேசுகிறது. தன்னைக் காந்தர்வ விவாகம் செய்து, பின்னர் அழைத்துச் செல்வதாகச் சொல்லி, ஆசிரமத்திலேயே விட்டுச் சென்ற துஷ்யந்தனை நினைத்துக்கொண்டிருக்கிறாள் சகுந்தலை.அப்போது அங்கு வந்த துர்வாச முனிவரை மரியாதை செய்து உபசரிக்க மறக்கிறாள். அவள் மனத்தில் யார் உள்ளார் என்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்த துர்வாசர், `துஷ்யந்தா! நீ இவளை மறந்துபோ!’ எனச் சபிக்கிறார். அதன்படியே துஷ்யந்தன் அவளை முற்றிலுமாக மறந்தான் என வளர்கிறது சகுந்தலையின் கதை.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தன்னை ஆதரித்த மதுர்பாபுவிடம் `உன்னை எனக்கு வக்காலத்து கொடுத்துவிடு!’ எனச் சொன்னதாக பரமஹம்சரின் திருச்சரிதம் சொல்கிறது. `வக்காலத்து கொடுத்தல்’ என்றால் முழுமையாக ஒப்புக் கொடுத்தல். ஒரு பக்தன் தன்னை முழுமையாக தன் குருவிடம் ஒப்புக் கொடுத்துவிட்டால், அந்த பக்தனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை குரு ஏற்றுக் கொள்கிறார். பக்தரது பாவங்களின் பலனைக் கூடத் தான் ஏற்று, பக்தனைக் காப்பாற்றுகிறார் உத்தமகுரு என்று சொல்வதுண்டு.

ராமகிருஷ்ணர், ரமணர் போன்றோருக்குப் புற்றுநோய் வரக் காரணம் என்ன என்பது பற்றி இருவகையான கருத்துக்கள் நிலவுகின்றன. அது `பூர்வ ஜன்ம வினை’ என்று ஒருசாரார் சொல்கின்றனர். இன்னொரு சாரார் தம்மை முற்றிலும் சரணடைந்த அன்பர்களின் பாவங்களைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாலேயே இந்நிலை நேர்ந்தது என்கிறார்கள். எப்படியானாலும் உயர்ந்த தவமுனிவர்கள் தங்கள் அருள் திறத்தால் எதையும் ஆக்க வல்லவர்கள். சீற்றத்தால் எதையும் அழிக்கவும் வல்லவர்கள். இதைத்தான் `ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்` என்கிறது வள்ளுவம்.

`வாழ்க வளமுடன்!’ என்பது ஒரு தமிழ் மந்திரம். இதை வடிவமைத்தவர் வேதாத்ரி மகரிஷி. அவரது பல்லாண்டு காலத் தவ ஆற்றல் அந்தத் தமிழ் மந்திரத்தில் ஊடுருவியுள்ளது. `வாழ்க வளமுடன்!’ என்று மனப்பூர்வமாகச் சொல்பவர்களையும், கேட்பவர்களையும் அது வளத்தோடு வாழவைக்கிறது.நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரம் ஆகிய அனைத்தும் மந்திரங்களே. பாடியவர்களின் தவச்சக்தி அவர்களால் பாடப்பட்ட பாடல்களின் சொற்களில் ஊடுருவியுள்ளது. அவற்றைப் பாராயணம் செய்யும்போது, அந்தத் தவச்சக்தி மேலெழுந்து பாராயணம் செய்வோரின் நலனைப் பாதுகாக்கிறது.

தவசீலர்களின் சொற்களில் பொதிந்துள்ள மாபெரும் சக்தியைப் பற்றி வள்ளுவர் போற்றிப் பேசுகிறார். அவ்விதம் அவர் போற்றிப் பேசும் சொற்களும் பெரும் மந்திரசக்தி கொண்டவையே. காரணம், திருவள்ளுவரே ஒரு மாபெரும் தவசீலரல்லவா?

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED சுந்தர வேடம்