×

அனுமன் என்ற ராம ரதம்

ராமனுடைய அணுக்கத் தொண்டன் அனுமன். கிஷ்கிந்தைக்குள் ராமன், லட்சுமணனுடன் நுழைந்தபோதே அவனைக் கண்ட அந்த முதல் பார்வையிலேயே அவன் மீது பக்தி மரியாதையை வளர்த்துக் கொண்டவன். தன் தலைவனான சுக்ரீவனுக்கு வாலியின் கொடுங்கோன்மையிலிருந்து நிரந்தர விடுதலை வாங்கித் தந்த ராமனே அவனுடைய கண்கண்ட தெய்வம்.

அனுமன் எந்தவகையில் எல்லாம் ராமனுக்கு உதவியிருக்கிறான்?

ஒரு உதாரணம் - ராவணனுடனான ராமனின் போர் ஆரம்பித்த முதல் நாள் அது. கடலையும் மறைக்கும் அளவுக்கான தன் அரக்கர் சேனையுடன் ராமனையும், வானரப் படைகளையும் எதிர்கொண்டான் ராவணன். நெடிதுயர்ந்த ஒரு தேரில் ஏறி வந்திருந்த அவன், முதலில் எதிர்ப்பட்ட இலக்குவன், சுக்ரீவன் இருவருடனும் போரிட்டான். ஆர்ப்பரித்து எழுந்த அவன், மிகப்பெரிய மலைபோல நின்றான். அப்போது அனுமன் அந்த இடத்துக்கு வந்தான். ராவணனுக்கு இணையாகத் தானும் பெரிய உருவம் கொண்டான்.

அவனை எதிர்த்து வீராவேசம் பேசினான். தன் முஷ்டியை உயர்த்தி ராவணனை நோக்கி ஒரு குத்து விட்டான். அவ்வளவுதான், கதிகலங்கிப் போனான் ராவணன். உடல், உள்ளம் இரண்டும் ஒருசேர சோர்ந்தன. நேருக்கு நேராக இப்படி ஒரு பலசாலியின் மோதல் தன்னை ஒரேயடியாக நிலை குலைய வைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தள்ளாடினான். சரிந்து சாய்ந்தான். மூர்ச்சையும் ஆனான்.

பிறகு ஒருவாறு மூர்ச்சை தெளிந்து எழுந்தான். அனுமனைப் பார்த்து உள்ளம் நடுங்கிப் பேசினான். ‘‘வீரனே, வலிமையென்றால் அது நீதான். உன்னை ஒப்பிடும்போது, மற்றவர்களின் வலிமையெல்லாம் ஒன்றுமில்லை. யார் எதிர்ப்பையும் துச்சமாக மதிப்பவன் நான். பிரம்ம தேவனையே திணற அடித்தவன். ஆனால், உன்னுடைய வீர தீரத்துக்கு முன்னால் என்னுடைய எத்தகைய வலிமையும் மிகவும் அற்பமானது தான் என்பதை உணர வைத்துவிட்டாய். உண்மையில் என்னை வென்றவன் என்றால் அது நீதான்,’’ என்று பலவாறாகப் புகழ்ந்தான் ராவணன்.

ஏற்கெனவே, சீதையைத் தேடி வந்து ராவணனின் நாட்டையே நிர்மூலமாக்கிய பராக்கிரமசாலி அல்லவா இந்த அனுமன்! ஒரு கைதியாக ராவணன் ராஜசபைக்கு அவனைக் கொண்டு வந்து நிறுத்தியபோது, அவனுக்குச் சரியாசனமாக அனுமன் தன் வாலாலேயே ராவணனுக்கும் உயரமான சிம்மாசனம் அமைத்து அதில் ஆரோகணித்து அவனை எதிர் கொண்டவன்தானே! அப்போதே அனுமனின் அளப்பரிய ஆற்றலை நேருக்கு நேர் கண்ட ராவணன்,  இப்போது நேரடித் தாக்குதலால் அனுபவிக்கவும் நேர்ந்தது!

ஆனாலும், தன் வீம்பு நிலையிலிருந்து மீள முடியாத அவன், லட்சுமணனுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டு, ஒரு வேலாயுதத்தை எறிந்தான். அது லட்சுமணனைத் தாக்க, அவன் மூர்ச்சையாகித் தரையில் வீழ்ந்தான். உடனே அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய்விட நினைத்தான் ராவணன். நெருங்கிப் பழகிய உடன்பிறப்பு தன்னைவிட்டு நீங்கியதென்றால் ராமனின் உள்ளம் சோர்வுற்று, பலமும் குன்றிவிடும் என்று நினைத்தான் அவன். ஆகவே, வீழ்ந்து கிடந்த லட்சுமணனைத் தன் கைகளால் தூக்க முயன்றான்.

அதற்குள் அங்கே ஓடோடி வந்தான் ஆஞ்சநேயன். ராவணனுடைய முயற்சிகளைக் கண்டு அச்சமுற்றான். லட்சுமணனைத் தூக்கிச் சென்று ராமனைப் பலவீனப்படுத்த அவன் மேற்கொள்ளும் தந்திரம்தான் அது என்பதைப் புரிந்து கொண்டான். உடனே அவனுக்கு முன்னால் லட்சுமணனை அப்படியே பற்றித் தூக்கி, கைகளில் சுமந்து எடுத்துச் சென்றான். லட்சுமணனை அவன் தூக்கும்போது, ராவணனுடைய நோக்கம் நிறைவேறிவிடக் கூடாதே என்ற வேகமும் துடிப்பும் இருந்தாலும், அந்தப் பரபரப்பைச் சிறிதும் கைகளில் பிரதிபலிக்க விடாமல், லட்சுமணனுக்கு எந்தச் சிறு வலியும் தோன்றி விடாதபடி லாகவமாகத் தூக்கினான்.

தன்னைப் பற்றியிருக்கும் குழந்தையின் பிடிப்பு விலகா வண்ணமும் அதேசமயம் தன் குழந்தையுடன் மரத்துக்கு மரம் தாவும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளாமலும் இயங்கும் குரங்கைப் போல அனுமன் செயல்பட்டான். தன் தம்பியை மூர்ச்சித்து விழச் செய்த ராவணன் மீது கடுங்கோபம் கொண்டான் ராமன். உடனே பாய்ந்து முன்னே வந்து அவனுடன் போரிடத் தொடங்கினான். ராவணன் தன்னுடைய தேர்மீது நின்றவாறு கம்பீரமாகப் போரிட, ராமன் தரையில் நின்றபடிதான் போரிட வேண்டியிருந்தது.

இதைப்பார்த்த அனுமன், மனம் வெதும்பினான். தன் தலைவன் வெறும் தரைமீது கால் ஊன்றிப் போரிட வேண்டியிருப்பது கண்டு வருந்தினான்.
ராவணனின் குதிரைகள் பூட்டிய தேரையும் அதன்மீது அவன் கம்பீரமாக நின்றபடி, பொருத முற்படும் வசதியையும் கண்டும், தன் தலைவனான ராமனுக்கு அப்படி ஒரு பாக்கியம் நேராதது குறித்தும் மனம் வெதும்பினான். ராவணனை விட பராக்கிரமசாலி, வெற்றுக்காலுடன் தரைமீது நின்று போரிடுவதா என்று பதைபதைத்தான். உடனே அவன் முன் பணிந்தான். ‘‘ஐயனே, என் தோள்மீது ஏறிக் கொள்ளுங்கள். நானே உங்களுக்கு ரதமாவேன்,’’ என்று வேண்டிக்கொண்டான்.

அவனுடைய வேண்டுகோளை ராமன் ஏற்றுக் கொண்டான். ‘‘நல்லது சொன்னாய், அனுமனே, உன் தோள்மீது நான் ஏறிக்கொள்கிறேன். நீயாகிய தேர் எனக்குப் பலவகையிலும் பாதுகாப்புதான். உன்னைப் போன்றதொரு அப்பழுக்கில்லாத வீரன் மற்றும் முழு மன விசுவாசியின் தோள்மீது அமர்ந்தபடி போர் தொடுப்பது என்பது என் வெற்றியின் முதல்படி என்றே நான் கருதுகிறேன்,’’ என்றெல்லாம் மகிழ்ச்சியுடன் கூறி அனுமனின் தோள்மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

அவ்வாறு தன் யோசனையை உடனே செயலாற்றிய ராமனைக் கண்டு உளம் நெகிழ்ந்தான் அனுமன். மேலுலகத்தோர் மலர் தூவி ஆசியளிக்க, தன் குழந்தையைத் தோள்மீது வீற்றிருக்கச் செய்து, அதன் பாதுகாப்புக்கும் உறுதி செய்யும் அன்புத் தந்தை போல அனுமன் மகிழ்வெய்தினான்.
வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல, ராமனுக்குத் தன் உடலசைவுகள் மூலம், அவன் போர் முறைக்கு உதவியும் செய்தான். ராமனுடைய கோணத்திலிருந்து தான் பார்த்து, அதற்கேற்றாற்போல அக்கம் பக்கத்திலோ, முன் பின்னாகவோ அசைந்து, விரைந்து, போர் நடத்த ஈடுகொடுக்கும் தேரோட்டமாக விளங்கினான் அனுமன்.

ராமனுடைய குறிப்பறிந்து அவன் கோணம் பார்த்து நின்று, நகர்ந்ததால், அவனுடைய பாணத்தால் உயிரைப் பறிகொடுத்த எதிரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போயிற்று. எதிரே ராவணன் பத்துத் தலைகளுடன் உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். அதற்கு ஈடுகொடுக்கும், வகையில் இரு பக்கங்களிலும் அனுமன் அசைந்து அசைந்து போர்த் தடத்தை மாற்றிக் கொண்ட விதமானது ராமனுக்கும் பத்துத் தலையோ என பார்ப்பவர்களை அதிசயிக்க வைத்தது. ராமபாணத்தின் வேகத்துக்கும், அதன் வீச்சுக்கும், எறியப்படும் கோணத்துக்கும் ஈடு செய்தவாரே, அவற்றின் தாக்குதல் வீணாகிவிடாதவாறு ராமனைச் சுமந்து வழி நடத்தினான் அனுமன்.

இயல்பாகவே ஒரு தேரின் மீது நின்று போரிடும் உணர்வுடனேயே ராமன், ராவணனை எதிர்த்தான். அவன் அவ்வாறு வில்லில் நாணேற்றிப் பொருத்தும்போது அவனுடைய இரு கால்களையும் பற்றிக்கொண்டு, அவன் நிலை தடுமாறாதவாறு பார்த்துக் கொண்டான் அனுமன். அதேபோல, உயர்நிலை கோணம் பார்த்து அம்பு எய்யும் கட்டங்களில் அவன் நிமிர்ந்து எழுந்தபோது, அவனுடைய இரு பாதங்களைத் தன் இரு உள்ளங்கைகளால் தாங்கி உயர்த்திப் பிடித்துக் கொண்டான். இதனால் உறுதியாகக் காலூன்றி, இலக்கு நோக்கிச் சரியாக அம்பெய்ய முடிந்தது ராமனால்.

இப்படி அமர்ந்த நிலையிலும் சரி, நின்ற நிலையிலும் சரி, ஒரே சீராகத் தன் போர்த் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் ராமன். அவன் உடலசைவுகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்றாற்போல தன் உடலையும் திருத்திக்கொண்டு, ராமனுக்குப் பேருதவி புரிந்தான் அனுமன்.

அனுமனுடைய ஒத்துழைப்பால், ராவணனை அஸ்திரங்களால் நிலைகுலையச் செய்த ராமன், ராவணனின் அனைத்து ஆயுதங்களையும் சிதறடித்தான். ராவணனை நிராயுதபாணியாக்கினான்.

தொகுப்பு: பிரபு சங்கர்

Tags : Rama ,Hanuman ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்