×

நோய்கள் நீக்கும் பழ தல விருட்சங்கள்

ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.

* திருவையாற்றிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சங்கம க்ஷேத்திரம் எனும் திருக்கூடலூர். ஆடுதுறைப்பெருமாள் அருளும் இத்தலத்தின் தலவிருட்சம் பலாமரம்.

* ஜம்பு முனிவரால் வளர்க்கப்பட்ட வெண்நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது, ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்காவல். இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரரை நவகிரக ஜன்னல் என்ற அமைப்பின் மூலம் தரிசித்த பின்னரே ஆலய வலம் வருவது நடைமுறையில் உள்ளது.

* நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தல விருட்சமாகும்.

* காழிச்சீராம விண்ணகரம் எனும் சீர்காழி தாடாளன் ஆலயத்தின் தல விருட்சம் பலாமரம். இத்தல பெருமாளின் திருவடியின் கீழ் மகாபலியின் பேரன் நமுச்சியை தரிசிக்கலாம்.

* தஞ்சாவூர் திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயத்தில் கதலி வாழை மரமே தல விருட்சம். பங்குனி, புரட்டாசி மாத பவுர்ணமி தினங்களிலும் அதற்கு முன்பின் தினங்களிலும் சந்திரன் தன் கிரணங்களால் இத்தல ஆபத்சகாயரை ஆராதிக்கின்றார்.

* திருச்சி மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில், பெயருக்கேற்றபடி (‘வடமொழியில் ஆம் என்றால் மாம்பழம்) மாமரமே தலவிருட்சம். இத்தல கோஷ்டத்தில் அருளும் துர்க்கை, தன் காலடியில் மகிஷன் இல்லாமல் அருள்வது அபூர்வமானது.

* திருநீலக்குடி மனோக்ஞ்ய நாத சுவாமி ஆலயத்தில் வன்னி, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய ஐந்து மரங்கள் தலமரங்களாகத் திகழ்வதால் பஞ்சவில்வவனேசர் என ஈசன் வணங்கப்படுகிறார். தற்போது ஆலயத்தில் பலாமரமும் ஆறாவது தல மரமாகத் திகழ்கிறது.

* திருவையாற்றுக்குக் கிழக்கே சந்திரன் வணங்கி பேறு பெற்ற திங்களூர் கயிலாய நாதர் ஆலயத்தின் தலவிருட்சங்கள் வாழையும் வில்வமும்.
அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறக்க திருநாவுக்கரசர் ஒன்றுகொலாம் பாடி அவனை பிழைக்கச் செய்த தலம் இது.

* நாகராஜனுக்கு திருமால் திருவருள் புரிந்த நாகப்பட்டினத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளை அழகியார் என ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர். இங்கு தல விருட்சம், மாமரம்.

* திருக்கழுக்குன்றத்தின் தல விருட்சம் வண்டுவகை வாழையாகும். ஐந்தாம் திருவிழாவில் வாழை மரங்கள் கட்டிய சப்பரத்தில் வேதபுரீஸ்வரர் திரிபுரசுந்தரியுடன் எழுந்தருள்வார். அச்சேவை கதலீவிருட்ச சேவை எனப்படுகிறது.

* திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரால் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி, காய்த்த அற்புதம் நடந்தது. அந்த பனைமரமே ஆலயத்தின் தல விருட்சம். திருவோத்தூர் தலபுராணத்தில் இப்பனைமரம் ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் குறும்பலாவே தலவிருட்சம். அந்த மரத்திற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற குற்றாலக்குறவஞ்சியிலும் இம்மரத்தின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.

* திருக்கரம்பனூர் எனும் உத்தமர் கோயிலில் கதலி வாழையே தலமரமாக உள்ளது. இத்தலம் சப்தகுருஸ்தலமாக போற்றப்படுகிறது.

* கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலில் பரசுவில்வம், வன்னி, உந்துவில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு போன்றவற்றோடு நெல்லிக்கனியும் தல விருட்சமாக உள்ளது. இத்தல ஈசனின் லிங்கத்திருமேனியில் ஏழு சடைகள் உள்ளன.

* பத்ரிநாத் ஆலயத்தில் இலந்தை மரமே தலவிருட்சம். இந்த பத்ரி நாராயணனின் சந்நதியில் ஏற்றப்படும் விளக்கு, பனிக்காலத்திற்காக 6 மாதங்கள் மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டாலும் எரிந்து கொண்டிருப்பது அதிசயம்.

* திருமால் நின்றும், இருந்தும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தன் அழகுத் திருக்கோலங்களை பக்தர்களுக்குக் காட்டியருளும் திருக்கோஷ்டியூரின் தல விருட்சம் பலாமரம். ராமானுஜர் ஓம் நமோநாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரத்தை பக்தர்களுக்கு உபதேசம் செய்த தலம் இது.

* நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சமான மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் கனிகள் தரும் அதிசய மரமாகும்.

* புதுக்கோட்டை திருமெய்யம் சத்யமூர்த்திப்பெருமாள் ஆலயத்தில் பலாமரம் தலவிருட்சமாக விளங்குகிறது. மணவாளமாமுனிகள் தன் இளமைக்காலத்தில் வாழ்ந்த தலம் இது.

* திருச்சிக்கு அருகே திருப்பைஞ்ஞீலியில் வாழை மரமே தலவிருட்சம். திருமணத்தடை உள்ளவர்களுக்கு இங்கு வாழைமர பூஜை செய்து அந்த தடையை நீக்குகின்றனர்.

தொகுப்பு: ஜி. ராகவேந்திரன்

Tags :
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்