வில்லியை எதிர்கொண்ட ஜேம்ஸ்பாண்ட்!

‘டுமாரோ நெவர் டைஸ்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே ஈயான் புரொடக்‌ஷன்ஸின் முக்கியப் புள்ளிகள் சிலர், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதைக்கருவை ஊடகங்களுக்கு கசியவிட்டார்கள். ரஷ்யா, சிதைந்தப் பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் பெட்ரோல் கிணறுகளை தனியார் ஒருவர் வசப்படுத்துகிறார், அவர்தான் படத்தின் வில்லன் என்று ஒன்லைனர் யோசித்து வைத்திருந்தார்கள். படத்துக்கு திரைக்கதை எழுதியவர்கள், “இம்முறை ஜேம்ஸ் பாண்டுக்கு வில்லன் அல்ல, வில்லி” என்று கொடுத்த ஆலோசனை, தயாரிப்பாளர் பார்பரா பார்கோலியை மிகவும் கவர்ந்தது. ‘லார்டு ஆஃப் த ரிங்ஸ்’, ‘ஹாபிட்’ சீரிஸ் படங்களின் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் அப்போது ‘ஹெவன்லி கிரியேச்சர்ஸ்’ படம் மூலமாக ஹாலிவுட்டில் பெரிய அதிர்வலைகளைக் கிளப்பி இருந்தார். அவரை வைத்து ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்க வேண்டும் என்பது பார்பராவின் விருப்பம். பீட்டர் ஜாக்சனும், ஜேம்ஸ் பாண்டின் வெறித்தனமான ரசிகர் என்பதால் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

அவர் ஆர்வமாக இருந்திருந்தால் பரவாயில்லை. கொஞ்சம் ஆர்வக்கோளாறாகவும் இருந்துவிட்டார். தயாரிப்பாளரிடம் தன்னுடைய கெத்தினைக் காட்டுவதற்காக அப்போது அவர் லேட்டஸ்டாக இயக்கியிருந்த ‘தி ஃப்ரைட்டனர்ஸ்’ என்கிற ஹார்ரர் காமெடிப் படத்தினை ரிலீசுக்கு முன்பாகவே போட்டுக் காட்டினார். படம், படு திராபை. இவரிடம் ஜேம்ஸ்பாண்டை ஒப்படைத்தால் கந்தரகோலமாக்கி விடுவார் என்று தயாரிப்புத் தரப்பு ஜகா வாங்கிவிட்டது. இதையடுத்தே மைக்கே ஆப்டெட்டை தொடர்பு கொண்டார்கள். நடிகைகளிடம் நன்கு வேலை வாங்கக்கூடியவர் என்று மைக்கேல் பெயர் பெற்றிருந்தார். அவருடைய முந்தையப் படங்களில் நடித்த மூன்று நடிகைகள், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆஸ்கரை வென்றும் இருந்தார். வில்லியை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், இப்படத்தை இயக்க அவரே பொருத்தமானவர் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆரம்பத்தில் படத்தை 2000ஆம் ஆண்டு மில்லெனியத்தைக் கொண்டாடுவதற்காக வெளியிடுவதாகதான் திட்டம். எனவேதான் ‘பாண்ட் 2000’ என்று அறிவிப்பெல்லாம் செய்து அமளிதுமளிப்படுத்தினார்கள். எனினும், ‘டைட்டானிக்’கோடு மோதிய முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டுமாரோ நெவர் டைஸ்’, எதிர்ப்பார்த்த வசூலை எட்டாததால், 2000ஆம் ஆண்டுக்கு முன்பே இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை வெளியிட்டு, வினியோகஸ்தர்களை குஷிப்படுத்த முடிவெடுத்தனர்.

‘டெத் வெய்ட்ஸ் ஃபார் நோ மேன்’, ‘பிரெஸ்ஸர் பாயிண்ட்’, ‘டேஞ்சரலி யுவர்ஸ்’, ‘ஃபயர் அண்ட் ஐஸ்’ உள்ளிட்ட ஏராளமான டைட்டில்கள் பரிசீலனையில் இருந்தன. கடைசியாகவே ‘தி வேர்ல்ட் ஈஸ் நாட் எனஃப்’ என்கிற மாஸான டைட்டிலைப் பிடித்தார்கள். 1999 ஜனவரியில்தான் படப்பிடிப்பையே தொடங்கினார்கள். மடமடவென படத்தை முடித்து அந்த ஆண்டு நவம்பரிலேயே திரைக்குக் கொண்டு வந்தார்கள். சுமார் 125 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான படம், 360 டாலர் மில்லியனுக்கு மேல் வசூலித்து, அதுவரையிலான ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய சாதனையை படைத்தது. இத்தனைக்கும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே 50 : 50 என்கிற அளவிலான வரவேற்புதான் படத்துக்கு இருந்தது. அப்படியிருந்தும் பிரும்மாண்டமான வசூல்சாதனையை நிகழ்த்த ஒரே ஒருவர்தான் காரணம். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜேம்ஸ்பாண்டாக நடித்த பியர்ஸ் பிராஸ்னன். அவரை திரையில் காண்பதற்காகவே ரசிகைகள் கூட்டம் கூட்டமாக திரும்பத் திரும்ப அரங்கங்களுக்கு படையெடுத்தார்கள்.

× RELATED வில்லன் ஆக பயந்த நடிகர்