கார்த்திக் சுப்புராஜோட அப்பா பேசுறேன்!

சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தில் ரஜினியோடு நடித்திருக்கும் எஸ்.பி.கஜராஜ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பாவும் கூட. தீவிர ரஜினி ரசிகரான இவர் ஏற்கனவே ‘கபாலி’யிலும் நடித்திருக்கிறார். “இதெல்லாம் இறைவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்னா எவ்வளவோ பேர் சினிமாவுக்கு வர்றாங்க. அப்படி வர்றவங்களுக்கு ரஜினி சாருடன் ஒரு படமாவது பண்ணமாட்டோமா என்ற ஏக்கம் இருக்கும். அந்த வகையில் எனக்கு ‘கபாலி’யை தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பாக சூப்பர்ஸ்டாரோடு ‘பேட்ட’ கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த மிகப் பெரிய கிஃப்ட். ஏற்கனவே என் மகன் இயக்கத்தில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி சாரை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்று சந்தோஷமாக பேச ஆரம்பித்தார்.

“உங்க குடும்பமே ரஜினி ஃபேன்ஸா?”
“ரஜினி சாருக்கு நான் ரசிகன் என்றால் என் பையன் வெறியன். கார்த்திக் சிறுவனாக இருந்த சமயத்திலிருந்து அவனுக்கு ரஜினி படம் தான் காண்பிப்பேன். ரஜினி படம் என்றால் ஐந்து முறையாவது பார்ப்பேன். முதல் முறை நண்பர்களுடன் பார்ப்பேன். பிறகு குடும்பத்துடன் பார்ப்பேன். பிறகு நேரம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பார்ப்பேன். கடைசியா தியேட்டரை விட்டு படம் எப்போது எடுக்கிறார்களோ அது வரை பார்ப்பேன். ‘தங்க மகன்’ படம் ஓடும்போது ஒரு ஷோ எடுத்து உறவினர்களுக்கு காண்பித்தேன்.”

“ரஜினியிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?”
“பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். திறமை யாரிடம் இருக்கிறதோ அவர்களை முகதாட்சண்யம் பார்க்காமல் பாராட்டித் தள்ளிடுவார். அதில் பாரபட்சமே இருக்காது. வட இந்தியாவில் படப்பிடிப்பு நடந்த போது உள்ளூர் மக்களிடையே இந்தியில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். லென்ஸ் மாத்துற கேப்ல கூட செட்டை கலகலப்பா மாத்திடுவார். லக்னோவில் படப்பிடிப்பு நடந்த இடம் புழுதி நிறைந்த இடம். ‘கார்ல ஓய்வு எடுங்க சார்’ என்று இயக்குநர் சொன்னாலும் கேட்காமல் மக்களோடு மக்களாக கலந்து நின்றார்.  சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருந்தாலும் ஒரு இயக்குநரின் நடிகராகதான் தன்னை வெளிப்படுத்துகிறார். டயலாக்கில் சின்ன மாற்றம் இருந்தாலும் இயக்குநரிடம் டிஸ்கஷன் பண்ணிட்டுவாங்க என்று அனுப்பி வைப்பார். என் மகனை பொறுத்தவரை அவன் ரஜினி பித்தன். அவர் என்ன சொன்னாலும் கேட்பான். ஆனால் ஒரு இயக்குநருக்கு தர வேண்டிய மரியாதையை எப்போதும் அவனுக்கு கொடுக்க அவர் மறந்ததில்லை. அநாவசியமா ஸ்கிப்ரிட்ல தலையிடமாட்டார். இயக்குநர் சொல்லும் போது ‘ஓக்கே கார்த்திக்’ என்று ஷாட்டுக்கு ரெடியாகிவிடுவார். சில சமயம் ரஜினி சார், ‘இப்படி பண்ணலாமா?’ன்னும் கேட்பார். இந்தப் பண்புகளை அவரிடம், நடிகர்கள் அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.”

× RELATED காதல் திருமணம் செய்ததால் மகளுக்கு...