×

இல்லாததைக் கொடுப்பவன்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 38 (பகவத் கீதை உரை)

செயலாற்றுவது என்பது அனைவருக்குமான கடமை என்பதைத் தெளிவாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தன்னை நல்ல நண்பனாக, ஆசானாக, வழிகாட்டியாக, கரம்கூப்பித் தொழும் கடவுளாக அர்ஜுனன் பாவிக்கிறான். அந்தப் பரமாத்மாவே தானும் தன் கர்மங்களை மிகுந்த சிரத்தையோடு இயற்றுவதாகக் கூறுவதைவிட வேறு என்ன உற்சாக ஊக்குவிப்பு
வேண்டும்?

கிருஷ்ணன் மேலும் கூறுகிறார்;
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த்த ஸர்வச (3:23)


‘‘என்னைப் பின்பற்றுபவர்களுக்கு நான் முன்னுதாரணமாக இருத்தல் வேண்டாமா? நான் தொடர்ந்து கர்மாவை இயற்றினால்தானே என்னைப் பின்பற்றுபவர்களும் அதைத் தொடர முடியும்? நான் சற்றே பிறழ்கிறேன் என்றால் அவர்களும் தடம் மாறிப் போய்விடுவார்களே!’’ நல்லொழுக்கங்களைக் கடைபிடிப்பது இவ்வுலகில் மிக அரிதான ஒன்று. தன்னிச்சையாக யாரும் நல்லொழுக்கத்தை மேற்கொண்டுவிடுவதில்லை. அப்படி மேற்கொள்ள ஒருவருக்கு ஒரு முன்னோடி வேண்டும். அதாவது உதாரணப் புருஷன் வேண்டும்.  

இது  நல்லொழுக்கத்துக்கு மட்டுமல்ல, தீய ஒழுக்கத்துக்கும் மிகப் பொருந்தும். தீயவற்றைப் பின்பற்றுவதில் இயல்பாக மனித மனதுக்குள் வெறி படர்ந்த உற்சாகம் இருக்கும். பெரியோர்களால் புறக்கணிக்கப்பட்ட, வெறுத்து ஒதுக்கப்பட்ட தீய செயல்களை ரகசியமாகவாவது மேற்கொள்வது என்பதுதான் அந்த வெறி உற்சாகத்தின் அடித்தளம். இதன் காரணமாகவே தீய பழக்கங்கள் வெகு எளிதாக ஒருவனை வந்து அடைந்துவிடுகின்றன. தீய பழக்கத்துக்கு உடனடியான புலன் சுகம் கிடைத்துவிடும்.

ஆனால், நல்லப் பழக்கத்திற்கு உடனடியான நன்மைகள் கிட்டுமா என்பது சந்தேகமே. அவ்வாறு மேற்கொண்டதற்கான அங்கீகாரமும் விரைவில் கிடைக்குமா என்பதும் கேள்விதான். அப்படி மேற்கொண்டவரை எல்லோரும் பாராட்டுவர் என்றாலும், அப்படிப் பாராட்டுபவர்களில் எத்தனை பேர் நல்ல பழக்கத்தை மேற்கொண்டவரைப் பின்பற்றுவார்கள் என்பதும் சிந்தனைக் குரியதுதான்!

நல்ல பழக்கத்தை மேற்கொள்பவன், தான் வாழும் சமுதாயத்தை மதிப்பவனாக இருப்பான். தனக்கு அந்தச் சமுதாயம் அளித்திருக்கும் அந்த ஸ்தானத்துக்கு நன்றியுடையவனாக இருப்பான். அந்த நன்றியைக் காட்டும்வகையில் அவன் நல்லொழுக்கத்தினை மேற்கொள்கிறான். அந்தப் பழக்கத்தைத் தான் யாரிடமிருந்து பெற்றானோ அவருக்கு மரியாதையுடையவனாக இருப்பான். தன்னிடம் அப்பழக்கத்தைக் கற்றுக்கொள்பவர்களும் தன்னிடம் மட்டுமல்லாமல், தன்னைப்போல் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்கும் பிற எல்லோரிடத்தும் மரியாதை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவராக இருப்பான்.

ஆக, முன்னுதாரணமாக இருக்கவேண்டியவர் தன்னைப் பின்பற்றுவது ஒரு தனிமனிதர் அல்ல, ஒரு சிறு கூட்டம் அல்ல ஆனால் அவர்கள் அங்கமாக விளங்குகின்ற ஒரு சமுதாயம்தான் என்பதை நன்கு உணர்ந்திருக்க வேண்டியவராக இருக்கிறார். தன்னை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால், ஒரு சமுதாயமே பின்பற்றுகிறது என்றுதான் அர்த்தம். இதை மனதில் கொண்டாலேயே நல்லொழுக்கம் தானாக வந்தடைந்துவிடும். கிருஷ்ணன் அப்படி தனக்குப் பின்னால் வரும் பிரபஞ்சத்தைதான் பார்க்கிறார். அவர் அறிவுரை சொல்வதும், பின்பற்றுமாறு கோருவதும் அர்ஜுனனைத்தான் என்றாலும், அர்ஜுனன் மூலமாக ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அவர் வழிகாட்டுகிறார். இப்படி மொத்த சமுதாயத்துக்கே வழிகாட்ட வேண்டியிருப்பதால்தான் அவர் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், பின்பற்றுவதில் பெரும்பாலோருக்குப் பற்று இருப்பதில்லை. ஏதேனும் கட்டாயத்தின் பேரில் பின்பற்றுவதாக போலித்தனம் காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதில் உண்மை இல்லை. விஸ்வாசம் இல்லை. நடிப்புதான் இருக்கிறது. அதனாலேயே பின்பற்றுவதில் பொறுப்போ, அக்கறையோ இல்லை. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், மாயையை வெகு ஆவலுடன் பின்பற்றுவதுதான்.

புலனுணர்ச்சியைத் தூண்டிவிடும் முன்னோடியை மோக வேகத்தோடு பின்பற்றுவதுதான். இதன் ஈர்ப்புத் தன்மையில் ஒட்டிக்கொண்டு தற்காலிக சுகம் பெறுவதுதான். இந்தப் பின்பற்றுதலால் விளையக்கூடிய நஷ்டம், மோசமான பாதிப்புகள் எல்லாம் அவற்றைத் தாங்கிக்கொள்ள திராணியில்லாத வயதிலோ அல்லது உடல்நலம் சீர்கெட்டிருக்கும்போதோ வந்து துன்புறுத்த, அப்போதுதான் நாம் விழித்துக்கொள்கிறோம்.

நல்லதையும், அல்லாததையும் புரிந்துகொள்ளும் பக்குவம் வெகு சிறு வயதிலேயே கிட்டிவிடுவது மனிதப் பிறவியின் பயன். ஆனால் நல்லதா, அல்லாததா என்பதைத் தேர்வு செய்யும்போதுதான் ‘தெரிந்தே’ குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு நல்லதின் மீது அவநம்பிக்கையும், அல்லாததன் மீது மோகமும் கொள்வதுதான் காரணம். அந்தந்த வயதுக்கேற்ற நன்மைகளும், தீமைகளும் நம்மைச் சூழும்போது அப்போதே அவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் தெரியும் என்றாலும், மனபலவீனத்தால் தேர்வு செய்யும் பாதை மோசமானதாகத்தான் இருக்கிறது!

இப்படி மனிதச் சமுதாயம் தடுமாறுவதால்தான் பகவானே இடைவிடாது செயலாற்றிக்கொண்டிருக்க வேண்டியதாகிறது! எந்த ஒரு கட்டத்திலாவது சமுதாயத்தில் கணிசமான எண்ணிக்கையில் பலர் தன்னைப் பின்பற்றமாட்டார்களா என்ற ‘எதிர்பார்ப்பில்’ செயல்புரிய வேண்டியிருக்கிறது!

உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹன்யாமிமா ப்ரஜா (3:24)


‘‘நான் செயல் புரியவில்லை என்றால், என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இழிந்தவர்களாகிவிடுவார்கள். அதனால் ஜாதிப் பிரிவினைகள் ஏற்பட்டுவிடும். இப்படி சமுதாயம் உடைந்து சிதற நானே காரணமாகிவிடுவேன். அதுமட்டுமல்ல, எல்லா உயிர்களையும் அழிப்பவனாகவும் ஆகிவிடுவேன்.’’

செயல்புரியாதிருப்பது என்பது இருந்தும் இல்லாததுபோலத்தான். ‘நடைப்பிணம்’ என்று சொல்வார்கள் - இது ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் காரணமாக, எந்த சிகிச்சையாலும் சரிசெய்ய முடியாத அந்த நோய் காரணமாக, அவர் முற்றிலும் செயலிழந்தவராக ஆகிவிடு கிறார். இன்னும் விஞ்ஞான பூர்வமாகச் சொல்வதானால் ‘கோமா’வில் விழுந்தவரைக் குறிப்பிடலாம். உயிர் மட்டும் இருக்கும், ஆனால் அதை அவமதிக்கும்வகையில் உடலில் எந்த இயக்கமும் இருக்காது. உணர்வற்ற நிலையில் அந்த உயிர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன என்ற விரக்தி உறவினர்களுக்கும் மற்றும் பிறருக்கும் ஏற்பட்டுவிடும்.

இப்படிச் செயலற்று விழுந்து கிடப்பவரை யார் பின்பற்ற முடியும்? என்ன சொல்லிப் பின்பற்ற முடியும்? சும்மா இருக்கும் சுகத்தை அனுபவிப் பவர்கள் வேண்டுமானால் பின்பற்றலாம். ஆனால் அவரால் உதாரண புருஷராக முடியாதே!ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்வாரானால் அவரும் செயலற்றவரைப் போன்றவர்தான் என்பது கிருஷ்ணன் மறைமுகமாக அறிவுறுத்தும் உண்மை. யாருக்கும் எந்த நன்மையும் புரியாமலும், நல்லொழுக்கத்தைக் கைக்கொள்ளாமலும், முறையாக செயல்படாமலும் இருக்கக்கூடியவர் சமுதாயத்தைப் பொறுத்தவரை நடைப்பிணம்தான்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் அவர் சமுதாயம் என்ற பாற்குடத்தில் விழுந்த ஒருதுளி நஞ்சாகவே கருதப்படுவார். ஏனென்றால் அவரை யாரேனும் பின்பற்றுவார்களென்றால் அவர்களும் அவரைப் போலவே பூமிக்குக்கூடுதல் பாரமாக மாறிவிடுவார்கள். அவருடைய தீயொழுக்கம் அறிந்து அப்படி யாரும் அவரைப் பின்பற்றவில்லையா, அப்போது அவரே, அவர் மட்டுமே, பூமிக்கு மிகப் பெரிய பாரம், அதோடு போகும்!

‘அவியினும், வாழினும் என்?’ என்று வள்ளுவர் கேட்டாரே அந்த வகையினர்தான் மேலே குறிப்பிட்ட சுயநலவாதி!ஆக, செயல்புரிந்துகொண்டே இருப்பது என்பது வெறுமே நேரத்தைப் போக்குவது அல்ல, அவ்வாறு செயல்புரிவதில் ஓர் அர்த்தம் இருக்கவேண்டும். அந்தச் செயலால் பிறருக்கு நன்மை உண்டாகவேண்டும். `To kill the time’ என்பார்கள். அதுபோல நேரத்தைக் கழிக்க வேண்டுமே என்று செயலாற்றிக் கொண்டிருப்பதும், உறங்கிக் கிடப்பதும் ஒன்றுதான்.

இத்தகைய உறக்கம் எப்படிப்பட்டது? மறுபடியும் வள்ளுவரைக் கேட்போம். ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்கிறார் அவர்! அதாவது செயலாற்றாதவன், குறிப்பாக பொது நலத்துக்காகச் செயலாற்றாதவன், உறங்குகிறவன்போல, அதாவது இறந்தவன்போல, அதாவது நடைப்பிணம்போல!

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர்லோகஸங்க்ரஹம் (3:25)


‘‘ஒரு பாமரன் செயலாற்றுவதற்கும், ஒரு பண்டிதன் செயலாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பாமரன் சுயலாபத்துக்காக அதாவது தன் சொந்த நன்மைக்காகக் கர்மாவை இயற்றுகிறான். ஆனால் பண்டிதனோ பற்றில்லாதவனாகச் செயலாற்றி, அதனால் பிற அனைவரும் நன்மை பெறுமாறு செய்பவனாக இருக்க வேண்டும்.’’ இங்கே கிருஷ்ணன், பாமரன் என்று குறிப்பிடுவது, ஏழையையோ, அப்பாவியையோ அல்ல. தற்குறியாக இருப்பவனைத்தான்.

தான், தனது, தனக்கு என்று தன்னை மட்டுமே முன்னிருத்தித் தன் நலனுக்காக மட்டுமே செயலாற்றுபவனைத்தான் பாமரன் என்கிறார். இவனுடைய செயல்பாடுகளில் பிறருக்குத் துன்பம் வேண்டுமானால் நிகழலாமே தவிர எந்த நன்மையும் யாருக்கும் ஏற்படாது.ஆனால் ஒரு பண்டிதன், அதாவது கற்றறிந்தவன், ஞானம் கொண்டவன், இயல்பாகவே ஈடேற்றும் கடமைகளில் கொஞ்சமும் சுயநலம் இருக்காது. அவனுடைய ஒவ்வொரு எண்ணமும், செயலும், பொதுநலம் நோக்கிலேயே அமைந்திருக்கும்.

சொந்த நலம் என்ற அடைப்புக்குள் மனதைக் குறுக்கிக்கொள்ள அவனுக்குத் தெரியாது. அந்தவகையில் அவன் பக்குவப்பட்டிருப்பான். வானம் போன்று அவனுடைய மனம் பரந்து விரிந்திருக்கும். அங்கே மேகத்துக்கு இடமுண்டு, மழைக்கு இடமுண்டு. பறவைகளுக்கு இடம் உண்டு, வானூர்திகளுக்கும் இடமுண்டு. பகலவனுக்கும் இடமுண்டு, குளிர்நிலவுக்கும் இடமுண்டு. பிரகாசமும் அங்கே ஒளிரும், இருளும் அங்கே நிலவும். ஆகாயம் எல்லோருக்குமானது, அதனால்தான் அது எல்லை காணமுடியாததாக இருக்கிறது.

ஒரு பண்டிதனின் மனமும் அத்தகையதுதான் எல்லோருக்குமானது. தன்னிச்சையாக அவன் மேற்கொள்ளும் கர்மாக்கள் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் நலம் பயப்பதாக அமையும். ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்று தாயுமானவர் மனம் கசிந்ததும் அந்தப் பண்டிதரின் நிலையிலிருந்துதான். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,’ என்று வள்ளலார் ராமலிங்க அடிகள் அஃறிணை உயிர்களைக் கண்டு வருந்தியதும் அதே நிலையிலிருந்துதான்.

மௌனமாகவே பேசி, அசைவின்றியே செயலாற்றி, உலகோர் நலனுக்காக, உளமார பகவான் ரமணர் பிரார்த்தித்துக்கொண்டதும் அப்படிப்பட்ட நிலையிலிருந்துதான். சமுதாய நலன் கருதவேண்டிய ஒரு சோஷலிசவாதியைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுவார்கள். சோஷலிசவாதியிடம் ஒருவர் கேட்கிறார்;

‘உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால், வீடு இல்லாத ஒருவருக்கு அந்த வீடுகளில் ஒன்றைக் கொடுப்பீர்களா?’
‘நிச்சயம் கொடுப்பேன்,’ என்கிறார் சோஷலிசவாதி.

‘சரி, உங்களிடம் இரண்டு கார்கள் இருந்தால்…?’
‘கட்டாயமாக ஒன்றை, இல்லாதவருக்குக் கொடுப்பேன்.’
‘சரி, உங்களிடம் இரண்டு சட்டைகள் இருந்தால்…?’
‘கொடுக்க மாட்டேன்,’ என்று பளிச்சென்று பதில் சொன்னார் சோஷலிசவாதி.

‘ஏன்? வீடு கொடுக்கிறீர்கள், கார் கொடுக்கிறீர்கள். அற்பம், சட்டையைக் கொடுக்கமாட்டீர்களா?’ ‘ஆமாம். ஏனென்றால் என்னிடம் ஒரு வீடும் இல்லை, ஒரு காரும் இல்லை. ஆனால் இரண்டு சட்டைகள் இருக்கின்றனவே!’ என்று பதில் வந்தது. ஆக, தன்னிடம் இல்லாததையெல்லாம் பிறருக்கு வழங்க அவர் தயாராக இருக்கிறார்; ஆனால் தன்னிடம் இருப்பதைத் தர அவர் மனம் விரும்பவில்லை. ஆனால் ஒரு பண்டிதன் இப்படிப்பட்டவனல்லன். அவன் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறவோன். தனக்கென்று இல்லாது, பிறருக்கு அளிப்பவன், பிறருக்காக வாழ்பவன். தானறியாமலேயே பிறருக்கு அளிக்கும்யானையைப் போன்றவன்.

அதாவது, யானை தன் உணவை பெரும் உருண்டையாக, தும்பிக்கையால் எடுத்துத் தன் வாய்க்குள் திணித்துக்கொள்ளும்போது அதிலிருந்து சிதறும் துகள்கள், அதன் காலடியில் ஊரும் எறும்புகளுக்கு உணவாகும். அத்தகைய யானை போன்றவன்தான் பண்டிதன். உணவு உண்பதாகிய தன் கர்மாவை, யானை மேற்கொள்கிறது. அதே சமயம், நூற்றுக்கணக்கான எறும்புகளின் பசியையும் அது போக்குகிறது. இப்படிதான் அறிந்தும், அறியாமலும், குறிப்பிட்ட எந்த நோக்கமும் இல்லாமலும் ஒரு பண்டிதன் பிறருக்கு உதவக்கூடியவனாகவே இருப்பான். ‘அந்த ஞானியைப்போல நீயும் உன் செயல்பாடுகளை நீக்கமறச் செய்தொழுகவேண்டும்’ என்று அர்ஜுனனுக்கு வலியுறுத்துகிறார் கிருஷ்ணன்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா