புஷ்பா புருஷன் யாருன்னு இவருக்குதான் தெரியும்!

விஷ்ணு விஷால், ரெஜினா, யோகி பாபு நடிப்பில் வெளியான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்த பட்டுக்கோட்டை செல்லா அய்யாவு, தமிழ் சினிமாவின் புதுவரவு. தொடை நடுங்கி போலீஸ் கான்ஸ்டபிள், டெரர் வில்லனைப் போட்டுப் பொளக்கும் கதை இது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி, ‘சிரிப்பு தீபாவளி’ கொண்டாடிய படம் என்பது கூடுதல் சிறப்பு. இனி செல்லா அய்யாவுடன்... “பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஊரணிபுரம், வெங்கரை சொந்த ஊர். அப்பா அய்யாவு, விவசாயி. அம்மா வசந்தா. மகன் டாக்டர் ஆகணும் என்பது பெத்தவங்க கனவு. ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு கனவு. பெத்தவங்க ஆசைக்காக டாக்டருக்கு படிச்சேன். அதாவது, பிசியோதெரபி டாக்டர். இருந்தாலும் டைரக்டர் ஆகணும்கிற ஆசையில் சென்னைக்கு வந்தேன்.

மிகப்பெரிய தேடலுக்கு பிறகு டைரக்டர் ஏ.வெங்கடேஷ் கிட்ட உதவியாளரா ஒர்க் பண்ணேன். அடிப்படையில் நான் கொஞ்சம் காமெடி சென்ஸ் உள்ளவன். என்னைச் சுற்றி நடக்கிற எல்லா விஷயங்களையும் காமெடியா மாத்தி பார்ப்பேன். பிறகு அதையே ஸ்கிரிப்ட்டா எழுதுவேன். வெங்கடேஷ் டைரக்‌ஷன் பண்ண படங்கள்ல எல்லாம் காமெடி போர்ஷனை கவனிச்சுக்கிட்டேன். அதுக்கு பிறகு எழில் சார் படங்களில் இணை இயக்குனரா ஒர்க் பண்ணேன். ‘வெள்ளக்கார துரை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படங்களுக்கு கதை எழுதினேன். சூரி நடிச்ச புஷ்பா புருஷன் கேரக்டர் நான் உருவாக்கியதுதான். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறப்ப, என் காமெடிசென்ஸ் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ‘எனக்கும் ஒரு கதை சொல்லுங்க பாஸ்’னு அப்பவே கேட்டிருந்தார். உடனே அவருக்குன்னு யோசிச்சு எழுதிய கதைதான் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. சொன்னவுடனே அவருக்கு ரொம்ப பிடிச்சது. நானே தயாரிக்கிறேன்னு சொன்னார். கதை எழுதறப்பவே, இந்த கேரக்டருக்கு அவருதான்னு முடிவு பண்ணேன். அவர் எந்த மாடுலேஷனில், எந்த வசனத்தை பேசினா ஆடியன்ஸ் ரசிப்பாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு தகுந்த மாதிரி வசனம் எழுதினேன். அப்படி பண்ணதால்தான் காமெடி செமையா ஒர்க்அவுட் ஆச்சு.

அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கிற எல்லா சம்பவங்களிலும், எல்லாருக்குள்ளேயும் காமெடி இருக்கு. அதை கண்டுபிடிக்கிறதுதான் என் வேலை. ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்துக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பும் கிடைச்சது. இதுக்கு முன்னாடி நிறைய ஹீரோக்கள் என்கிட்ட கதை கேட்டாங்க. ஆனா, முதல் படத்தை நம்பிக்கையோட கொடுத்த விஷ்ணு விஷாலுக்குத்தான் கதை சொன்னேன். காமெடி இயக்குநர் என்ற இமேஜ் வட்டத்துக்குள் சிக்காம, எல்லா ஜானர்லயும் படம் பண்ணணும். இதுதான் என் ஆசை” என்றார்.

× RELATED கணவரை தாக்கினேனா? சசிகலா புஷ்பா மறுப்பு