×

சரியான காலத்தில் செய்தால் சகலமும் நன்மையே

இந்த உலகம் முழுவதும் காலத்தினால் ஆனது. எதையுமே காலத்தின் அளவுகோல்தான் நிர்ணயிக்கிறது. காலம் நதியைப் போன்றது. அது உற்பத்தியாகும் இடத்துக்கு திரும்பவே திரும்பாது. அதனால்தான் எதையும் நேரத்துக்கு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். காலத்தை ஒருவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், காலம் அவனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் வாழ்க்கைதான் அர்த்தமுள்ள வாழ்க்கை. காலத்தை வெற்றி கொண்ட வாழ்க்கை என்று சொல்லலாம்.

லட்சக்கணக்கான மக்கள் நாள் தோறும் பிறந்து இறந்து வாழும் இந்த பூமியிலே, ஒரு சிலர்தான் காலத்தினால் நினைவு வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் தங்கள் காலத்தை, அதாவது வாழ்நாளை, மிகச்சரியாகப் பயன்படுத்தியது ஆகும். நேரத்தைப்பயன்படுத்துதல் என்பது மிகமிக முக்கியமானது. பொதுவாக, ஒருவன் வாழும் காலத்தை எட்டு எட்டாகப் பிரித்து வைத்தார்கள். அதில் ஒவ்வொன்றையும் அவன் எட்ட வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு நிர்ணயம் செய்தார்கள். இதைச் சொல்லும் அழகான தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. அந்த பாடலின் வரிகள் திரைப்படப் பாடலிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை


நம்முடைய நேரத்தை நாம் புரிந்து கொண்டால்தான், பிறருடைய நேரத்தைப் பற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும், அதைச் சரியான நேரத்தில் செய்துவிடுவதுதான் வாழ்க்கையின் வெற்றிக்குக் காரணம். இது வாழ்வியலுக்கும் ஆன்மிகத்துக்கும் பொருந்தும். நேரத்திற்கு ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதை எத்தனையோ விதமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மதுரையில் பாண்டியன் வல்லப தேவன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டிருக்கிறது.

பாண்டியன் ஒருநாள் மாறுவேடம் அணிந்து நகர்வலம் வருகின்ற பொழுது, ஒருவர் வீட்டுத்திண்ணையில் படுத்து இருக்கின்ற யாத்திரீகரைச் சந்திக்கின்றான். அவரிடத்தில் உரையாடுகின்ற பொழுது, யாத்திரீகர் நேரத்தை பயன்படுத்துவது குறித்து ஒரு ஸ்லோகமாகச் சொல்லுகின்றார். அந்தச் ஸ்லோகம் இங்கு தேவையில்லை. அதனுடைய கருத்தை மட்டும் பார்ப்போம்.

 ஒருவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், காலத்தைச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அந்தந்த காலத்தில் அந்தந்த செயலைச் செய்தால், அடுத்து வரும் காலங்களில் அதனுடைய விளைவுகள் நல்லபடியாக இருக்கும். உதாரணமாக, இரவுக்குத்தேவையான விஷயங்களை பகலில் தேடிக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் இரவில் இருட்டில் எந்த வேலையும் செய்யமுடியாது.

ஆகையினால் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்றால், பகலிலேயே வேலை செய்து சம்பாதித்து விடவேண்டும். மழைக்காலத்துக்குத்தேவையான பொருள்கள் முன்கூட்டியே வெயில் காலத்திலும் மற்ற நேரங்களிலும் சேகரித்து விடவேண்டும். காரணம், மழைக்காலத்தில் நம்மால் வெளியே சென்று பொருள் சம்பாதிக்க முடியாது. முதுமைக்காலத்துக்கு வேண்டியதை இளமைக்காலத்திலேயே தேடிக்கொள்ள வேண்டும். மறுபிறவிக்கு தேவையான புண்ணியங்களை இந்த பிறவியிலேயே சேகரித்துக்கொள்ள வேண்டும்.

இதனுடைய அடிப்படையான விஷயம், காலத்தைத் துல்லியமாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். ராமானுஜர், பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக, காஞ்சிபுரத்திலிருந்து ரங்கத்துக்குப் போகிறார். பெரிய நம்பிகளோ,  ரங்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். இருவரும் சந்திக்கும் இடம் மதுராந்தகம். ராமானுஜர் மதுராந்தகத்தில், உடனே தனக்கு பஞ்சஸம்ஸ்காரம் செய்து வைக்கும்படி வேண்டுகின்றார்.

பெரிய நம்பிகளோ, “அதற்கு என்ன அவசரம்? திருவரங்கத்திற்கு சென்றோ, இல்லை காஞ்சிபுரம் சென்றோ செய்து கொள்ளலாமே” என்று சொல்கிறார். ராமானுஜர், ‘‘நல்ல காரியத்தைத் தள்ளிப் போடக்கூடாது. இன்றே இப்பொழுதே செய்து வையுங்கள்’’ என்கிறார். நல்ல நேரத்துக்கு மிகச் சிறந்த அடையாளம் என்ன என்று சொன்னால், நம்முடைய ஆழ்மனதில் ஒரு செயலைச் செய்ய வேண்டும். அதுவும் நற்செயலைச் செய்யவேண்டும் என்று எப்பொழுது தோன்றுகிறதோ, அந்த நேரமே நல்ல நாள் என்கிற ஒரு குறிப்பைச் சொல்லுகின்றார்கள்.

ஆண்டாள் நாச்சியார், `மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்று தன்னுடைய திருப்பாவையின் முதல்வரியில் பாடுவதும் இதைத்தான்.
நல்ல நாளுக்கு ஆண்டாள் கொடுக்கக்கூடிய அடையாளம் ‘‘மதிநிறைந்த நாள்’’ என்பதுதான். மதி என்பது இந்த இடத்தில் மெய்யறிவைக் குறிப்பது. நல்ல செயலை செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டால் உடனே செய்துவிட வேண்டும். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நல்ல சிந்தனை வரும் நேரம் நல்ல நேரம்.

எத்தனைச் சொல்லியும் கோயிலுக்குப் போகாதவன், திடீரென்று ஒரு பெரியவரிடம் சென்று, திருச்செந்தூர் போய்விட்டு வந்து வியாபாரம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லி ஆசிகேட்கும் போது, அவரென்ன சொல்வார். ‘‘இனி உனக்கு நல்ல நேரம்தான்’’ என்பார். நல்ல நாட்களை கணக்கிடுகிறபோது, எப்பொழுதெல்லாம் நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து இருக்கிறதோ அதைத்தான் நல்ல நாளாக நம்முடைய ரிஷிகள் குறித்து வைத்திருக்கிறார்கள்.
 
இந்த நேரத்தில் இவன் ராஜ்ஜியத்தை அடைந்தான், இந்த நேரத்தில் இவன் திருமணம் செய்துகொண்டான், இந்த நேரத்தில் இவனுக்கு பெரும் செல்வம் கிடைத்தது என்பதெல்லாம் குறித்து வைத்து ஆராய்ந்தே நாள், நேரம் பற்றிய ஞானத்தைத் தந்திருக்கிறார்கள். தொடர்ந்து நல்ல செயல்கள் நடக்கும் நேரமெல்லாம் நல்ல நேரம் என்று அனுபவத்தில் கண்டு ஆராய்ந்து குறிக்கப்பட்டு, பஞ்சாங்கங்களில் இருப்பதால், அந்த நேரத்தை நாம் பின்பற்றுவது நல்லது. காலத்தின் குணங்களையும் தன்மைகளையும் ஆராய்ந்து தேவைக்கேற்ப அதை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வதற்கும், பஞ்சாங்கங்கள் மிகவும் அவசியம்.

ஆனால் இப்பொழுது அது குறித்து பலரும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். பஞ்சாங்கத்தைப் பார்த்து முறையாக நேரம் அறிந்து காரியங்களைச் செய்தால் வெற்றிதான். பஞ்சாங்கம் என்பது காலக் கணிதம். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது. இவற்றின் தன்மைகளையும், இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஓரளவு தெரிந்து கொண்டால் கூடபோதும். நாம் பல செயல்களை மிகச் சரியான நேரத்தில் தொடங்கி, அற்புதமான பலன்களை அடையலாம்.

பஞ்சாங்கத்தை தினசரி பார்ப்பது மகா புண்ணியம் என்று சொல்லிவைத்தார்கள். தினசரி காலை, பூஜை செய்யும்பொழுது பஞ்சாங்கத்தைப் பார்த்து அன்றைய வாரத்தைத் சொல்வதால் (கிழமை) ஆயுள்தோஷம் போகும். அன்றைய திதியை இறைவன் முன் சொல்வதால், செல்வங்கள் கிடைக்கும். அன்றைய நட்சத்திரத்தைச் சொல்வதால், பாவங்கள் போகும். யோகத்தைச் சொல்வதால் நோய்கள் குணமாகும். கரணத்தைக் கூறுவதால் எடுத்த காரியம் வெற்றியாகும்.

இனி, பஞ்சாங்கத்தில் உள்ள எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்துகொள்வோம். பஞ்சாங்கம் எப்படிப்பயன்படுத்த வேண்டும்? ஹோரைகளை எப்படிப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்? கௌரி பஞ்சாங்கம் எதற்குக்கொடுக்கப் பட்டிருக்கிறது? எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டால், நல்லநேரம் உங்கள் கையில். அதனால் ஏற்படும் நல்ல பலன்களும் உங்கள் கையில்.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?