பட வெற்றி விழா பற்றிய பேச்சு; மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த படம், கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிவிழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்றாலும், என்மீது நம்பிக்கை வைத்து முன்பயிற்சி அளித்து நடிக்க வைத்தனர். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் நம்பிக்கையை நான் பூர்த்தி செய்திருக்காவிட்டால், அவர்களுக்கு இது மிகப் பெரிய ரிஸ்க்காக மாறியிருக்கும்.

என்னைத்தேடி வரும் எல்லா படத்திலும் நடிக்க வேண்டும் என்று என் அம்மா ஆசைப்படுவார். ஆனால், கனா படத்தை பார்த்துவிட்டு, ‘இனிமேல் நீ நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஒரு படம் மட்டுமே உன் வாழ்நாளுக்கு போதும்’ என்று சொன்னார். அவரது பாராட்டு என்னை உண்மையிலேயே நெகிழவைத்தது. பத்து வயதில் என் தந்தையை இழந்தேன்.

ஆனால், அந்த குறையே தெரியாத அளவுக்கு அம்மா என்னை வளர்த்து ஆளாக்கினார். என்றாலும், படத்தில் நான் சத்யராஜின் மகளாக நடித்தபோது, என் தந்தையின் இழப்பை உணர்ந்து பார்த்தேன். இப்போதெல்லாம் படம் ஓடுகிறதோ இல்லையோ, வெற்றிவிழா கொண்டாடி விடுகிறார்கள். ஆனால், கனா படத்துக்கு நடப்பது நிஜமான வெற்றிவிழா என்றார்.

மற்ற படங்களை விமர்சித்த ஐஸ்வர்யாவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள், ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது பற்றி டிவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது, ‘ஒரு படத்தை பல கஷ்டங்களுக்கு இடையே உருவாக்குகிறார்கள். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. விளையாட்டாக சொன்னதுதான் அந்த வார்த்தை. அது மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார்.

× RELATED யாருடன் காதல்? எனக்கும் சொன்னால் நல்லா இருக்கும்; ஐஸ்வர்யா ராஜேஷ்