திருவையாறு: அறிந்த தலம் அறியாத தகவல்கள்

பெயர்க் காரணம்

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து நதிகள் இங்கே உள்ளதால், ஐயாறு எனப்படுகிறது. (வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் எனும் ஐந்து ஆறுகளைச் சொல்வதும் உண்டு). நினைத்தாலே பாவங்களைப் போக்கக்கூடிய ஆறான கங்கையைத் தன் திருமுடியில் சூடியிருக்கும் சிவபெருமானுக்கு, இங்கே ‘ஐயாறப்பன்’ என்பது திருநாமம். அதன் காரணமாகவே இந்த திருத்தலமும் ‘ஐயாறு’ எனப்படுகிறது.

காசிக்கு வீசம் அதிகம் திருவையாறு

காசியை விடப் புனிதம் வாய்ந்தது திருவையாறு. இதை முன்னிட்டே ‘காசிக்கு வீசம் அதிகம் திருவையாறு’ எனும் சொற்றொடர் உருவானது. இதன் காரணமாகவே, இறந்துபோன முன்னோர்களின் அஸ்தியைக் கரைப்பதற்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நாள்தோறும் பலர் இங்கு வருகிறார்கள்.

வலப்பாக அம்பிகை

வழக்கப்படி, சிவபெருமானின் இடது பாகத்தில் இடம் பெற்றிருக்கும் அம்பிகை, இங்கே சிவபெருமானின் வலது பாகத்தில் இடம் பெற்றிருக்கும் அழகான சிற்பம் இங்கு உள்ளது.

ஒரே பலகைக் கல்லில் எழுவர்

அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா எனும் சப்த மாதர்கள் எழுவர் திருவுருவங்களும் இங்கே, ஒரே பலகைக் கல்லில் அற்புதமான முறையில் அமைந்துள்ளன. அவரவர்களின் வடிவங்கள், அவர்களின் கொடிகள், ஆயுதங்கள், ஆபரணங்கள், கரங்களில் உள்ளவைகள் என அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளன. சப்த மாதர்களை வழிபடவோ, அவர்களின் மந்திர சித்தி பெறவோ, அற்புதமான திருத்தலம் இது. ஒரே பலகைக் கல்லில் உருவான இந்த சப்தமாதர் திருவடிவங்கள், 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

ஒன்பதும் பத்தும்

இங்கே நவக்கிரகங்களின் அருகில் உள்ள ஒரு தூண், அழகாக மிகுந்த கலை வேலைப் பாடுகளைக்கொண்டதாக உள்ளது. 10-ஆம் நூற்றாண்டில், நுளம்பாடி எனும் ஊரில் உருவாக்கப் பட்டு, இங்கே கொண்டுவரப்பட்டது அந்த தூண்.

வில்லும் வேலவரும்

இங்கே ‘தனுசு சுப்பிரமணியர்’ எனும்திருநாமத்தில் தனிக்கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், வில் ஏந்திய கோலத்தில் மிகுந்த அழகோடு தரிசனம் தருகிறார்.

தேவியுடன் அதிகார நந்தி

அதிகார நந்திகேஸ்வரர், இங்கே தன் தேவியுடன் எழுந்தருளியிருக்கும் அழகு சிற்பம் ஒன்று உள்ளது.

துவார பாலகர்களுக்கு வழிபாடு

இங்கே தெற்குக் கோபுரத்தில் இரு துவார பாலகர்கள் இருக்கிறார்கள். ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் எனப்படும் அவர்களுக்கு வழிபாடுகள் நடக்கின்றன.

குங்கிலியம் புகைப்பது ஏன்?

தென்கோபுரவாசலில் இடம்பெற்றிருக்கும் ‘ஆட்கொண்டார்’ சந்நதியின் முன்னால் வீதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு பெரிய குண்டத்தில், எந்த நேரமும் குங்கிலியம் புகைந்துகொண்டே இருக்கும். இங்கு வந்து குங்கிலியம் இட்டு வழிபாடு செய்த சுசரிதன் எனும் பக்தனின் உயிரைக்கவர யமன் வந்த போது, ஐயாரப்பன் ஆட்கொண்டாரை அனுப்பி அதைத்தடுத்தார்; பக்தனைக் காத்தார்; கூடவே, ‘‘இந்த திருத்தலத்தில் புகை தெரியும் அளவிற்கு, பக்தர்கள் உயிரைப் பறிக்கக் கூடாது’’ என யமனுக்குக் கட்டளையும் இட்டார். அதன் காரணமாகவே இங்கு அடியார்கள் குங்கிலியம் புகைத்து, தீர்க்காயுள் வேண்டிக்கொள்கிறார்கள் என்பது தல புராணம் சொல்லும் தகவல்.

தடை தீர ஓலம் இடுவோம்

இங்கு ஆட்கொண்டார் சந்நதிக்கு அருகே ‘ஓலமிட்ட விநாயகர்’ என்ற பெயரில் ஒரு விநாயகர் உள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான்பெருமாள் நாயனாரும், இங்கே ஐயாறப்பனைத் தரிசிக்க வந்தபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அவர்களைத் தடைசெய்தது. அப்போது சுந்தரர், தடைநீக்கித் தரிசனம் தந்து காக்கும்படி ஓலமிட, இந்த விநாயகரும் பதிலுக்கு ஓலமிட்டுப் பயம் நீக்கி அருள்புரிந்தார். வெள்ளம் விலகி வழிவிட்டது. சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும், தடைநீங்கி வந்துதரிசித்தார்கள். நமக்குள்ள தடைகளையும் நீக்கி, நமக்கும் அருள்புரியும்படி இந்த ஓலமிட்ட விநாயகரை வேண்டுவோம்!

விநாயகர் நால்வர்

இங்கே நான்காவது திருச்சுற்றில் நான்கு மூலைகளிலும், கிழக்கும் மேற்குமாகப் பார்த்தபடி நான்கு விநாயகர்கள் இருக்கிறார்கள்.

100

நூறு தூண்களுடன் கூடிய, ஓர் ‘அலங்கார மண்டபம்’ இங்கு உள்ளது.

வட கயிலாயம்

தஞ்சை ஆலயத்தைக் கட்டிய ராஜராஜசோழ மன்னரின் பட்டத்தரசியால் கட்டப்பட்ட ‘வட கயிலாயம்’ எனும் அற்புதமான ஆலயம் இங்கு உள்ளது. பட்டத்தரசியின் விருப்பத்திற்கு இணங்க, அவர் உள்ளத்தில் உருவாக்கிய ஆலயத்தை அப்படியே வடிவமைத்தவர்கள் இருவர். ‘தச்சாசாரியன் எழுவடியான் காரோணனான புவனி மாணிக்க ஆசார்யன்’; ‘நக்கனாச்சனான கலியுகரம்பைப் பெருந்தச்சன்’ - என்பது அவர்களின் பெயர்கள். இந்த தகவல்களை எல்லாம் இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

விலங்குகளும் பறவைகளும்

விலங்குகளும் பறவைகளும்கூட, இங்கு வந்து ஐயாறப்பனை வழிபட்டிருக்கின்றன. பசு, கொக்கு, அன்னம், மீன் ஆகியவை சிவபெருமானைப் பூஜை செய்யும் காட்சிகள் இங்கே சிற்பங்களாக இருந்து, தல புராணத்தை உணர்த்துவதுடன், நமக்கும் வழிகாட்டுகின்றன.

பூதவரிசையின் அழகு

இங்குள்ள பூதங்களின் சிற்பவரிசை மிகவும் அழகாக அமைந்துள்ளது. பூதங்கள் நாட்டியம் ஆடுவது, இடையிடையே இரு பூதங்கள் சண்டை போடுவது, பூதங்களின் இடையில் ஒன்றுமே தெரியாததைப்போல் தோற்றமளிக்கும் குரங்குகள், மனிதனுடன் கைகோர்த்து நிற்கும் பூதங்கள் என அழகான சிற்பங்கள் உள்ளன.

யாளிகளின் பரவசத் தோற்றங்கள்

யாளிகளும் இங்கே வரிசையாகச் சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன. சில யாளிகள் துதிக்கையுடன், சில யாளிகள் மிகவும் அழகான சுருண்ட தலை (பிடரி) முடிகளுடன், வெளியே துருத்திக் கொண்டிருக்கும் வாய்களுடன் கூடிய யாளிகள், யாளிகளின் வாயிலிருந்து வீரர்கள் வெளிப்படுவதைப் போன்ற சிற்பங்கள், அந்த யாளிகளின் மீது வீரர்கள் அமர்ந்திருக்கும் காட்சி எனப் பார்த்தாலே பரவசப்படுத்தும்படியாக அமைந்துள்ளன.

ஐந்து காளிகள்

இங்கே காளியின் செப்புத் திருமேனிகள் ஐந்து உள்ளன. ஐந்தாவதாக உள்ள காளி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. நான்கு திருக்கரங்கள், பின் இரு திருக்கரங்களில் சூலம் - பாசம், முன் இரு கரங்கள் அபயம் - வரதம், தலையில் சுடர்முடி, கபாலம், மலர், பிறை நிலவு, பாம்பு ஆகியவை, மார்பில் மாலைகளும், வெற்றிமாலையும், பூணூலும், வலது காதில் பிரேத குண்டலம், இடது காதில் பத்ரகுண்டலம் போட்ட பாம்பு; வாயில் கோரைப்பற்கள், வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடக்கிப் பத்மபீடத்தில் அமர்ந்துள்ள, மிகவும் தொன்மையான இந்த காளி, காளி உபாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதி.

 

சிவனும் எட்டும்

வேறு எங்கும் காண, தரிசிக்க முடியாத ஒரு அற்புதமான சிற்பம் இங்குள்ளது. இது ஒரே கற்பலகையில் உருவானது. நடுவில் சிவபெருமான் அமர்ந்து இருக்க, வலது பக்கம் நால்வரும், இடது பக்கம் நால்வருமாக, எட்டு மாதர்கள் இருக்கிறார்கள். அனைத்தும் ஒரே அமைப்பு. இடது காலை மடக்கி, வலது காலைப் பிரேதத்தின் மீது ஊன்றியபடி அமைந்துள்ளன. வலது கையில் சூலமும், இடது கையில் கபாலமும் உள்ளன. நடுவில் அமர்ந்து இருக்கும் சிவபெருமான் அணிந்திருக்கும் முப்புரி நூல், அவரது வலது கரத்தின் மேலே சென்று, பின்புறம் நோக்கிச் செல்கின்றது.

தொகுப்பு: பி.என். பரசுராமன்

Related Stories: