×

தெளிவு பெறுஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

1. கம்ப ராமாயணத்தைத் தொடர்பு படுத்தி, திருவொற்றியூர்-திருவரங்கம் எனும்  இரண்டு திருத்தலங்களையும் சொல்கிறார்கள். விவரம் அளிக்க இயலுமா?

- பாலா, சென்னை-15

சென்னை திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் காளி  (வட்டப்பாறையம்மன் எனும் திருநாமத்தில்) எழுந்தருளி இருக்கிறாள். அந்தக்  காளியைத் துதித்து கம்பர் வேண்டிய பாடல்:

ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!

வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியேநந்தாது எழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்பிந்தாமற் பந்தம் பிடிஇவ்வாறு பாடிய பின் காளி சும்மா இருப்பாளா? அதுவும் சிறுவயது முதலே காளியை  வழிபடும் கம்பர் வேண்டிக் கேட்டால், அன்னை உடனே நிறைவேற்ற மாட்டாளா?  கம்பரின் வேண்டுதல் படியே, காளி பந்தம் பிடித்தாள்; கம்பர் ராமாயணம் எழுதி  முடித்தார். இராமாவதாரம் எனும் கம்ப ராமாயணம் உருவானது திருவொற்றியூரில்.

இங்கு காளியின் அருளால் எழுதப்பட்ட காகுத்தன் சரிதை, அரங்கேற்றம்  செய்யப்பட்டது-திருவரங்கத்தில். கம்பர் திருவரங்கத்தில் அரங்கேற்றிய போது,  திருவரங்கநாதர் பல அருளாடல்களை நடத்திக் காட்டினார். தெய்வங்கள் எல்லாம்  இந்த அளவிற்குக் கம்பருக்கு அருள் செய்யக் காரணம்? கம்பர் செய்த நிவேதனம் - சமர்ப்பணம்தான் - கொசுறுத் தகவலாக...

 கம்பர் கோயிலுக்குப்  போயிருந்தார். போவோரும் வருவோருமாகப் பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  வந்தவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு பொருளைக் கொணர்ந்து, பெருமாள் சந்நிதியில்  சமர்ப்பணம் செய்து விட்டுப் போனார்கள். வாழைத்தார்கள், நெற்கதிர்கள்,  காய்-கனிகள், எண்ணெய்-திரி என, அவரவர்கள் சமர்ப்பணம் செய்து வழிபட்டுப்  
போனார்கள். வெறுங்கையுடன் போயிருந்த கம்பர் திகைத்தார். ‘‘நாம் எதைச்  சமர்ப்பணம் செய்வது? வெறுங்கையுடன் வந்து நிற்கிறோமே!’’ என்று வருந்தினார்.  அப்போது ஆலயப் பணியாளர்களில் ஒருவர், ‘‘என்னய்யா இப்படி மரம் மாதிரி  நிற்கிறீர்கள்! எதையாவது சமர்ப்பணம் செய்து, கும்பிட்டுவிட்டுப் போக  வேண்டியது தானே’’ என்று கம்பரிடம் சொன்னார்.
கம்பர் உடனே சமர்ப்பணம் செய்தார். அவர் செய்த சமர்ப்பணம் என்ன என்பதை, அவரே பாடலில் சொல்கிறார்:

நாராயணாய நம என்னும் நல் நெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்து ஏத்துமாறு
அறியேன்
கார்ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே


ஆண்டவனை வேண்டி, அறியாமையை நீக்குவதே அரும் பெரும்செயல்; பெரும்  சமர்ப்பணம் இதுவே! இவ்வாறு செய்தால், தெய்வம் அருள்செய்யாமல் இருக்குமா?

வெற்றிலை-பாக்கு போடும் போது, இரண்டு மூன்று வெற்றிலைகளாகச்  சேர்ந்தாற்போல், ஒன்றாகப் போடக்கூடாது. கூட இருப்பவர்களுக்கு ஆகாது  என்கிறார்கள். அது ஏன்?

- கணேஷ் கும்பகோணம்

வெற்றிலைக்கொடியில் இருக்கும்  வெற்றிலைகளில் சிலசமயம் கொடிய விஷத்தன்மை உள்ள சில பூச்சிகளும் புழுக்களும்  இருக்கும். 2-3 வெற்றிலைகளாக எடுத்துப் போட்டால், விஷத்தன்மை கொண்ட  அவற்றால் தீங்கு விளையும். வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து, முன்னும்  பின்னும் நன்றாகத் துடைத்துவிட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் சில  வெற்றிலைகள் காரத்தன்மை அதிகம் கொண்டவையாக இருக்கும். 2-3 ஆகச் சேர்த்துப்  போட்டால், பாதிப்பு விளையக் கூடும். நம் நலனுக்காகவே முன்னோர்கள் சொல்லி  வைத்தார்கள்.
சமீபத்தில் திருச்சிக்கு அருகில் உள்ள  ஊருக்குப் போய் இருந்தேன். அங்கே ஓர் குளத்தில் குளிக்கும் போது,  குளிப்பதற்காக வந்த பெரியவர் ஒருவர், குளத்தில் இருந்து மூன்று பிடி மண்  எடுத்துக் கரையில் போட்டுவிட்டு, அதன் பிறகே குளித்தார். காரணம் கேட்டபோது, அவர் பதிலே சொல்லவில்லை. அருகில் இருந்த சிலர், ‘‘அவர் குளித்து  முடித்து வீடு திரும்பும் வரை, யாரோடு்ம் பேச மாட்டார் என்றார்கள்.  அவர்களுக்கும் காரணம் தெரியவில்லை. அவர் ஏன் அவ்வாறு செய்தார்?
- சுந்தர் மனப்பாற

நாள்தோறும் பலர் இறங்கித் துணி துவைத்துக் குளிக்கும் ஆறு-குளங்களில்,  அழுக்குகளும் பிறவும் சேர்ந்து அந்நீர் நிலைகள் தூய்மை கெட்டுத் தூர்ந்து  போய்விடும். அது கூடாது, நீர்நிலைகள் தூய்மையாகவும் தூர்ந்து போகாமலும்  இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் ஏற்படுத்திய  சாஸ்திர -சம்பிரதாயங்களில் ஒன்று அது. இதைச் செய்து வந்தால், தூர்வாருதல் என்பதைத் தனியாகச் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இது கார்த்திகை மாதம் .  விளக்குப் பணிசெய்த அடியவர்களைப் பற்றி சொல்லுங்களேன்?

- அபர்ணா, திண்டிவனம்

சிவாலயங்களில் விளக்கேற்றிப் பணிசெய்வது பெரும்பேறாகும். ஆலயங்களில் விளக்குப்பணி செய்து பேறு பெற்றவர்களின் வரலாறுகள் அனேக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. பெரிய புராணத்தில் விளக்கீடு செய்து மேன்மை பெற்ற அடியவர்கள் மூவரைப் பற்றிய வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒருவர் நீராலேயே விளக்கெரித்தவர். இன்னொருவர் தன் உதிரத்தை ஊற்றி விளக்கெரிக்க முயன்றவர். மூன்றாமவர் தனது தலைமுடியைத் திரியாக விளக்கில் இட்டு எரித்தவர். இவர்களுடைய வரலாறுகளை அறிவதே பெரும் புண்ணியம்சோழநாட்டுத் தலங்களில் ஒன்று ஏமப்பேரூராகும். இவ்வூர் அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தி அடிகளார்.

இவர் ஒரு சமயம் திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமாளை வணங்கினார். அங்கிருந்த அரநெறி என்னும் ஆலயத்தை அடைந்து வணங்கினார். அவருள்ளத்தில் அங்கு எண்ணிலாத தீபங்களை ஏற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே அவர் அங்கிருந்த வீடுகளுக்கு சென்று கொஞ்சம் நெய் தருமாறு கேட்டார். அவ்வீடுகள் யாவும் சமணர்கள் வீடுகளாகும். அவர்கள் அவரை எள்ளி நகைத்து அன்பரே! உமதுகடவுள் தனது கையில் நெருப்பை ஏந்துகின்றார். அவருக்கென தனியாக விளக்கு எதற்கு நாங்கள் நெய் கொடுக்கமாட்டோம் விளக்கெரித்தே ஆக வேண்டுமென்றால் நீங்கள் திருக்குளத்து நீரை வார்த்து விளக்கெரியுங்கள்’’ என்றனர். அடிகளார் மிகவும் வருத்தமுற்றார்.

திருவாரூர் மூலட்டானத்துள் சென்று பெருமானிடம் முறையிட்டார். அப்போது சிவபெருமான் வானொலியாக ‘‘அன்பரே! கவலையை விடுக. குளத்து நீரை முகந்து வந்து அதைக் கொண்டே விளக்கேற்றும் என்றார். அடிகளார் மிகவும் மகிழ்ந்து சிவநாமத்தைக் கூறிக்கொண்டே குளத்துநீரை முகந்து வந்து அகல்களில் ஊற்றித் திரியிட்டு ஏற்றினார். அவ்விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. இரவு முழுவதும் அப்பணியைச் செய்தார். பல நாட்கள் இப்பணியை அவர் தொடர்ந்து செய்து வந்தார். இதைக் கண்டு எல்லோரும் அதிசயித்தனர்.

மன்னரின் துணையுடன் திருவாரூர் கோயிலின் பூசைகளையும் பங்குனி உத்திரம் முதலான விழாக்களையும் ஒழுங்குப்படுத்தி முறைப்படுத்தினார். இவர் வீடுபேறு பெற்ற நாள் வைகாசி மாதப் பூச நட்சத்திரமாகும். பெரிய புராணத்துள் இவருடைய வரலாற்றை நின்று சருக்கத்தில் 32 பாடல்களில் சேக்கிழார் பெருமான் பாடிப் பரவியுள்ளார்.

கணம் புல்லர்

இறைவன் சந்நதியில் விளக்கேற்றிப் பேறுபெற்ற அடியவர்களில் கணம்புல்லர் தலை சிறந்தவர். இவர் பிறந்ததால் பேறு பெற்ற ஊர் இருக்குவேளூர் ஆகும். இந்நாளில் அது பேளூர் என்று அழைக்கப்படுகிறது. சேலம்-விருத்தாசலம் இருப்புப்பாதையில் உள்ள ஆற்றூரிலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இவ்வூரிலிருந்து செல்வக்குடியில் தோன்றியவர் நம்நாயனார். இவர் சிவாலயங்களில் விளக்கெரிப்பதை தலைமைப் பணியாகக் கொண்டிருந்தார். நாளடைவில் அவர் வறுமைக்கு ஆளானார். என்றாலும் ஆலயங்களில் விளக்கீடு செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார். கையில் போதிய செல்வம் இல்லாததால் மலைச் சாரலில் விளையும் மெல்லிய கணம் புல்லை அறுத்து விற்று அதில் கிடைத்த காசினால் விளக்கேற்றினார்.

சில காலத்திற்குப் பிறகு தில்லைக்கு வந்து அத்தலத்திலுள்ள புலீச்சரம் எனும் சிவாலயத்தில் தங்கி தனது விளக்கேற்றும் பணியைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவர் அறுத்து வந்த புல் விற்பனையாகவில்லை. மனம் தளராத நாயனார். அப்புற்களையே விளக்கிலிட்டு எரித்தார். அவை அவர் குறிப்பிட்டுள்ள நேரம் வரை எரியவில்லை. முயற்சியில் தோற்காத நாயனார் தன் சடைமுடியை அரிந்து அவற்றை விளக்கிலிட்டு எரித்தார். அவருடைய தளராத பக்தியைக் கண்ட சிவபெருமான் அவருக்கு வீடுபேற்றை அளித்தார். கணம்புல்லைக் கொண்டு விளக்கெரித்ததால் நாயனார் கணம்புல்லர் எனப்பட்டார்.

இவர் அவதரித்த பேளூர் ஆலயத்தில் கொடிமரத்தின் அருகில் விளக்கேந்தியவாறு இவருடைய திருவுருவம் இருப்பதாகச் சிவஸ்ரீ சி.கே.எஸ். அவர்கள் தமது பெரியபுராண உரையில் குறித்துள்ளார். சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் கறை கண்டன் சருக்கத்தில் முதல் நாயன்மாராக எட்டு பாடல்களில் இவரைப் போற்றுகின்றனர். இவர் வீடுபேறு பெற்ற நாள் கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நட்சத்திரமாகும். கார்த்திகை மாதமும், கிருத்திகை விண்மீனும் விளக்கோடு தொடர்புடையது என்பது இங்கே சிந்திக்கத் தக்கதாகும்.

தொகுப்பு: சந்திரமௌலி

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!