×

திருக்குறளில் சுவைமிக்க கூழ்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

வள்ளுவர் ஏழைகளின் புலவரா, செல்வந்தர்களின் புலவரா? பழங்காலத்தில் செல்வந்தர்களாக விளங்கும் வள்ளல்கள் பலரை நாடிச் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுவதுதானே புலவர்களின் வழக்கம்?

பெரும்பாலான ஆற்றுப்படை நூல்கள் எந்தெந்த வள்ளல்களிடம் என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றன, அவர்களை நாடிச் சென்றால் எத்தகைய செல்வங்களைப் பரிசாகப் பெறலாம், அவர்கள் இருக்குமிடம் செல்லும் வழி எப்படிப்பட்டது என்பதையெல்லாம்தானே விரிவாகப் பிற புலவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பேசுகின்றன?

ஆனால், வள்ளுவர் செல்வந்தர்களின் புலவராகவோ செல்வந்தர்களாக விளங்கும் வள்ளல்களைத் தேடிச்சென்ற புலவராகவோ தென்படவில்லை. மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான பல நீதிகளைச் சொன்ன வள்ளுவர், செல்வத்துப் பயனே ஈதல் என்கிறார். ஏழைகளுக்கு அள்ளிக் கொடுங்கள் என அறைகூவுகிறார். ஏழைகளின் தரப்பிலேயே அவர் குரல் எல்லா இடங்களிலும் ஒலிக்கிறது.இன்று ஏழைகளின் உணவாகக் கருதப்படும் கூழ் பற்றியும் பேசுகிறார் அவர். உணவு என்பதற்கு அக்காலத்தில் கூழ் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வள்ளுவர் சில இடங்களில் அதே சொல்லைப் பயிர் என்ற பொருளிலும் செல்வம் என்ற பொருளிலும் பயன்படுத்துகிறார்.

‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.’


(குறள் எண் 64)

தம் குழந்தைகள் சின்னஞ் சிறு கரத்தால் கிளறி அளைந்த உணவு அமிர்தத்தை விடவும் இனியது. (இந்தக் குறளில் கூழ் என்ற சொல் குழந்தைகளுக்கான உணவு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

‘படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.’  


(குறள் எண் 381)

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்றுடைய குடிமக்கள், போதுமான அளவு உணவு, நாட்டின் நலன் நாடும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, காவல் காக்கும் அரண் இவை ஆறும் உடைய மன்னன் அரசர்களுக்குள் சிங்கம் போன்றவன். (இந்தக் குறளிலும் கூழ் என்ற சொல்லின் பொருள் உணவுதான்.)

‘கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.’

 
(குறள் எண் 745)

பலநாள் முற்றுகையிட்டாலும் கைப்பற்றுவதற்குக் கடினமானதாய், உள்ளிருப்பவர்க்குப் போதுமான அளவு உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் அமைந்ததே அரண். (இதிலும் உணவு என்பதை வலியுறுத்தவே கூழ் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.)

‘கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.’


(குறள் எண் 550)

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவர்களைக் காப்பாற்றுவது அரசனின் கடமை. பசிய பயிரைக் காக்கக் களையெடுத்தல் போன்றது அது. (இக்குறளில் கூழ் என்ற சொல் பயிர் என்ற பொருளில் வந்துள்ளது.)

‘கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.’


(குறள் எண் 554)

கொடுங்கோலனாகி சரிவர ஆராயாமல் எதையும் செய்யும் அரசன் செல்வத்தையும் குடிமக்களின் ஆதரவையும் ஒருசேர இழப்பான். (இந்தக் குறளில் கூழ் என்ற சொல் செல்வம் என்னும் பொருளில் வந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் பரணி என்பது தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று. ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரன்மேல் பாடப்படுவதே பரணி. பற்பல பரணி நூல்கள் இருந்தாலும் புகழ்பெற்ற பரணிநூல் ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி. பழைய செய்யுள் நூல்களில் பேய்களின் உலகை விவரித்துப் பேசும் நூல் கலிங்கத்துப் பரணி மட்டும்தான். மற்ற சில இலக்கியங்களில் பேய்களைப் பற்றியும் பூதங்களைப்பற்றியும் சிற்சில குறிப்புகள் மட்டுமே உண்டு.

ஆனால் கலிங்கத்துப் பரணி, போர்க்களத்தில் பலவிதமான பேய்கள் ஒன்றுகூடி, இறந்த வீரர்கள் மற்றும் யானை குதிரை முதலிய விலங்குகளின் சடலங்களைக் கொண்டு கூழ் சமைத்துச் சாப்பிட்ட காட்சியை விரிவாக விவரிக்கிறது.கூழ் பொதுவாக ஏழைகளின் உணவாகக் கருதப்படுகிறது. அப்படிப் பார்த்தால் பேய்களும் ஏழைகள்தான் போலும்!

தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு ‘கூழுக்குப் பாடி’ என்றே ஒரு பெயர் உண்டு. யாத்திரை செய்வதையே வாழ்வாகக் கொண்டு பல ஊர்களுக்கும் நடந்தே சென்று தம் செய்யுள்களால் நீதிபோதனைகள் செய்தவர் அவ்வை. ஏழைகள் அளித்த கூழையே சன்மானமாக ஏற்றுக் கொண்டு பாடல்கள் புனைந்தவர்.பணத்திற்கோ பொருளுக்கோ வேறு வசதிகளுக்கோ ஆசைப்படாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்த அவரைத் தமிழ்மக்கள் அன்போடு ‘கூழுக்குப் பாடி’ என அழைத்ததில் வியப்பில்லை. தமிழ்க் கவிஞர்களில் கூழுக்குப் பாடினார் என்ற பெருமை அவ்வையாருக்கு மட்டுமே உண்டு.

ஒருமுறை குள்ளமான பலா மரம் செழித்துத் தழைக்காமல் இருக்கிறதே என்று குறவர் பெருமக்கள் கவலைகொண்டிருந்தனர். அவ்வைப் பாட்டி ஒரு பாட்டுப் பாடியபோது அந்தப் பலா மரம் தழைத்து வளர்ந்தது. அது கண்டு மகிழ்ந்த குறவர் குலத்தினர் அவருக்குத் தங்களிடமிருந்த தினைமாவை உண்பதற்குத் தந்து உபசரித்தனர். உணவுண்ட பின் அவர்கள் அன்போடு கொடுத்ததில் எஞ்சிய தினைமாவைக் கட்டிக்கொண்டு விடைபெற்றார் அவ்வை.

சோழமன்னனைத் தேடிச்சென்றார். மன்னன் நிறையச் செல்வம் தரக்கூடியவன்தான். என்றாலும் அன்போடு அவ்வைக்குக் கொடுக்கப்பட்ட தினைமாவுக்கு அவன் தரும் செல்வம் ஈடாகுமா என்ன?‘கையில் என்ன மூட்டை?’ என அவ்வையை விசாரித்தான் சோழமன்னன். அந்த மூட்டையில் உள்ள தினைமாவைப் பற்றிப் பெருமிதத்தோடு ஒரு பாடலில் தெரிவித்தாள் அவ்வை. அந்த வெண்பா ‘கூழுக்குப் பாடி’ என்ற பெயர் அவ்வைக்கு எவ்வளவு பொருத்தம் என்பதை உணர்த்துகிறது.

‘கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
மூழக் குழக்குத் தினைதந்தார் - சோழாகேள்!
உப்புக்குப் பாடிப் புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்.’


அன்பிற்கு அன்றி வேறு எதற்கும் வசப்படாது தம் தமிழ் உள்ளம் என்பதை இந்தப் பாடலில் அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார் அவ்வை மூதாட்டி. விருந்தோம்பல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விவேக சிந்தாமணிப் பாடலொன்று தெரிவிக்கிறது. மோப்பக் குழையும் அனிச்சம்போல் முகந்திரிந்து நோக்கக் குழைவதல்லவா விருந்தினர் மனம்?

விருந்தினர்க்கு முகமலர்ந்து உப்பில்லாத கூழ் இட்டாலும் அதுவே அமிர்தமாகும். அல்லாமல் முகம்சுருங்கி பழத்தையும் பாலையும் சோற்றையும் அளித்தாலும் பசி மேலும் அதிகம்தான் ஆகுமே அன்றிக் குறையாது என்கிறது அந்தப் பாடல்.

ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழ மொடுபால் அன்னம் முகம்
கடுத்திடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.


(விவேக சிந்தாமணி)

மாரியம்மன் ஆலயங்கள் இல்லாத கிராமமுண்டா? கிராமங்களில் மாரியம்மன் ஆலயங் களில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் திருவிழா நடத்துவது வழக்கம். கூழ் ஊற்றும் விழா ஆடிமாத ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.அந்த விழாவிற்கென்றே நன்கொடை வசூலித்து, கிடைத்த நன்கொடை மூலம் கூழ் காய்ச்சத் தேவையான பொருட்களை வாங்கி அம்மன் முன்னிலையிலேயே ஆலயத்தில் பெரிய பானையை வைத்து அடுப்பு மூட்டி கூழ் தயாரிப்பார்கள்.

பின் வேப்பிலை, மஞ்சள் முதலிய அம்மனுக்கே உரிய பல்வேறு பூசைப் பொருட்களுடன் விமரிசையாக பூசை நடைபெறும். காய்ச்சிய கூழை அம்மனுக்குப் படையலாக்கிய பின், அது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். வரிசை வரிசையாக ஏழைகள் வந்து கூழை அம்மனின் பிரசாதமாகக் கருதி வயிறாரக் குடித்துப் பசியாறுவது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

கூழ் ஊற்றுவதற்கு முந்தைய நாட்களில் கிராம மக்கள் அனைவரும் காப்புக் கட்டிக் கொள்வர். அதன்பின் கூழ் ஊற்றும் விழா முடியும் வரை கிராம மக்கள் யாரும் கிராமத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் வெளியிலிருந்து யாரும் கிராமத்தின் உள்ளே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் உண்டு.

தொன்றுதொட்டு கிராமங்களில் நடைபெறும் இந்தக் கூழ் ஊற்றும் திருவிழா சிற்சில மாற்றங்களோடு தற்போது நகரங்களிலும் பெரிய அளவில் நடக்கத் தொடங்கியிருக்கிறது. ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. பழங்காலத்தில் வீரர்கள் பெரிய மீசை வைத்திருப்பார்கள். மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது வீரத்தைக் காட்டும் அடையாளம்.

கூழ் சாப்பிடும்போது கூழ் மீசையில் ஒட்டிக் கொள்ளும். அதற்காக மீசையை எடுத்துவிட முடியுமா? ஒரே நேரத்தில் கூழும் வேண்டும், மீசையும் கூழால் நனையாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி? முரணான இரண்டு விஷயங்களுக்கு ஒரே நேரத்தில் விருப்பம் கொள்பவர்களின் இயல்பை விளக்க இந்தப் பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’

என்றும் பழமொழிகள் உண்டு. கிழிசலானாலும் உடையைத் துவைத்து உடுத்த வேண்டும் என்றும் கூழ் குடிப்பதானாலும் நீராடிவிட்டே குடிக்க வேண்டும் என்றும் இவை தெரிவிக்கின்றன. உடைச் சுத்தம், உடல் சுத்தம் ஆகியவற்றை வற்புறுத்தும் பழமொழிகள் இவை.

*கூழ் என்ற சொல் குழைவு என்ற சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டும் என்கிறார்கள். குழைவாய்ச் சமைத்ததைக் கூழ் என்று சொல்லத் தொடங்கினார்கள். கூழில் பல வகைகள் உண்டு. கம்பு, கேழ் வரகு போன்றவற்றால் கம்பங்கூழ் கேப்பங்கூழ் போன்றவை தயார் செய்யப்படுகின்றன.உடலின் வெப்பத்தை நீக்கி உடலுக்குக் குளுமையைத் தரவல்லது கூழ். முன்பெல்லாம் வயலில் வேலை செய்யும் உழவர்கள் காலையில் வயலுக்குச் செல்லும்போது கூழைச் சாப்பிட்டு விட்டுச் செல்வது வழக்கமாயிருந்தது.

கடின உடலுழைப்புச் செய்பவர்களுக்குத் தேவையான சக்தியைக் கூழ் தரவல்லது. கம்பு, கேழ்வரகு இவற்றால் தயாரிக்கப்படும் கூழுக்குப் பல மருத்துவப் பயன்களும் உண்டு. உடல் நலனைக் காப்பதில் கூழ் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலைச் சிற்றுண்டிக்குப் பதிலாக கூழைப் பருகலாம்.கூழில் கால்சியம் சத்து மிகுந்திருப்பதால் அது எலும்புத் தேய்மானத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் கூடாமல் அப்படியே வைத்திருப்பதற்கும் கூழ் உதவுகிறது. கூழ் உடலுக்கு வலுச் சேர்ப்பதோடு தேவையற்ற கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கும் பயன்படுகிறது.

உடல் கொழுப்பைக் கரைப்பதற்கும் உடலை வலிமையாக்குவதற்கும் கூழ் பயன்படுகிறது. மனத்தை மாசில்லாததாக ஆக்குவதற்கும் எண்ணத்தை வலிமையாக்குவதற்கும் திருக்குறள் பயன்படுகிறது. உடல் நலத்திற்குக் கூழை அருந்துவோம். உள்ள நலத்திற்குத் திருக்குறளைப் பின்பற்றுவோம்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags : Thirukkural ,
× RELATED திருக்குறளில் கோல்!