பேட்ட - விஸ்வாசம் வெளியானது... ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ இன்று வெளியானது.  இதையொட்டி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, டிவிட்டரில் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இதேபோல் யு டியூப்பிலும் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் - ரஜினிகாந்த் இணைந்துள்ள படம் என்பதாலும் ஒரே படத்தில் ரஜினியும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பதாலும் ஏராளமான நட்சத்திர பட்டாளம் இருப்பதாலும் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டானதாலும் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று படம் திரைக்கு வருகிறது. படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விழாக்கோலமாக காணப்படுகிறது. ரசிகர்கள் படத்தை பார்க்கும் ஆவலில் டிக்கெட் முன்பதிவுக்காக தியேட்டர்கள் முன் திரண்டு வருகின்றனர்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஜெகபதி பாபு, தம்பி ராமய்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இமான் இசையமைத்துள்ளார். வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு அஜித், சிவா கூட்டணி நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். வீரம் படத்துக்கு பிறகு கிராமப்புற கதையில் இதில் அஜித் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு 2 வித லுக் தரப்பட்டுள்ளது. படம் இன்று வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

× RELATED தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார்: கனிமொழி பேட்டி