அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

495. குரவே நமஹ (Guravey namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை - ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)தன் உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்திலே அமர்த்தினார். ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் படைப்புக் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது. நாம் வேதம் வல்லவர், நம்மை விஞ்சியவர் யாரும் இலர் என்று கருதினார் பிரம்மா. “பதவி வரும்போது பணிவு வராமல் பகட்டோடு இருக்கிறாரே இவர்!” என்று கருதிய திருமால், ஓர் அசுரனை அனுப்பி வைத்து, பிரம்மாவிடம் உள்ள வேதங்களை அபகரித்து வரச்சொன்னார். அவனும் வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து அபகரித்து வந்துவிட்டான். வேதங்களை இழந்த நிலையில் பிரம்மாவால் படைப்புத் தொழிலைத்தொடர இயலவில்லை.

“அடடா! நாம் பெரியவன் என்று தவறாக நினைத்து, இறுமாந்து இருந்துவிட்டோமே! நம்மைப் படைத்தவன் ஒருவன் உள்ளானே! அந்த பகவான்தானே நமக்கு வேதங்களைத் தந்து இப்பதவியில் நம்மை அமர்த்தினான்? அவனது அருளும் அவன் தந்த வேதங்களும் இல்லாவிட்டால் நமக்கு எந்தப் பெருமையும் கிடையாதே!” என்று அப்போதுதான் உணர்ந்தார் பிரம்மா. மொத்த கர்வத்தையும் விட்டுத் திருமாலின் திருவடிகளைச் சரண் புகுந்தார். “பிரம்மதேவரே உங்களுக்குக் கொஞ்சம்பக்குவம் வர வேண்டிஉள்ளது. அந்தப் பக்குவம் வந்தால்தான் பிரம்மதேவன் என்ற பதவியால் வரும் செருக்குக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள். எனவே மனப்பக்குவம் பெறப் பூமியில் காவிரிக் கரையில் போய்த் தவம் இயற்றுங்கள்!” என்று கூறினார் திருமால்.

அதன்படி பூமிக்கு வந்தார் பிரம்மா. காவிரிக் கரையில் கும்பகோணத்தில் பிரம்மா தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவம் நிறைவடையும் தறுவாயில், மகாலட்சுமியோடு திருமால் வந்து பிரம்மாவுக்குக் காட்சி தந்தார்.“பிரம்மனே! உங்களுக்கு இப்போது நல்ல மனப்பக்குவம் வந்துவிட்டது. இனி நீங்கள் உங்கள் பணிகளைப் பணிவோடு தொடர்வீர்கள். நானே உங்களுக்கு வேதங்களை உபதேசிக்கிறேன். இந்த வேதங்கள் உங்களை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்கும். என் அருளையும் இவை உங்களுக்கு நினைவூட்டும்!” என்று சொல்லிப் பிரம்மாவுக்கு வேதங்களை மீண்டும் உபதேசித்து அவரை மீண்டும் படைப்புக் கடவுள் என்ற பதவியிலே அமர்த்தினார் திருமால்.

இவ்வாறு பிரம்மாவுக்குத் திருமால் வேதங்களை உபதேசித்த அந்த இடம்தான் இன்றும் கும்பகோணத்தில் வேதநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. வேதநாராயணனாகத் திருமால் காட்சி தருகிறார். இன்னும் பிரசித்தமாக அது பிரம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் பிரம்மாவுக்கென்று உள்ள வெகுசில கோவில்களில் இந்த பிரம்மன் கோவிலும் ஒன்றாகும். அட்சய திருதியை அன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை வைபவத்தில் முன்வரிசையில் இந்த வேதநாராயணப் பெருமாள் எழுந்தருள்வது வழக்கம்.

வேதங்களை அவர்மூலம் பெற்ற பிரம்மா, “வேதநாராயணா! முன்பு மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் என்னிடமிருந்து வேதங்களை அபகரித்துச் சென்றார்கள். அப்போது நீ குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாளாக அவதாரம் செய்து, அவர்களை அழித்து வேதங்களை எனக்கு மீட்டுத் தந்தாய். இப்போது எனது கர்வத்தின் காரணமாக நான் வேதங்களை இழந்த போதும், மீண்டும் நீயே வேதநாராயணனாக வந்து அவற்றை அடியேனுக்கு உபதேசித்து மீட்டுத் தந்துவிட்டாய். உன்னை என்சொல்லி வாழ்த்துவேன்?” என்று துதித்தார்.

“ஒரு மிகப்பெரிய வேள்வியை இங்கே செய்து உன்னை ஆராதிக்கப் போகிறேன்!” என்று சொல்லி பிரம்மா வேள்விக்கான ஏற்பாடு களைச் செய்தார். வேள்விக்கு உதவியாக ஒரு நீர்நிலை இருந்தால் நன்றாக இருக்குமே என்று பிரம்மா நினைக்க, திருமால் இங்கே ஒரு நதி உருவாகட்டும் என்று சொல்லித் தன் கதையால் நிலத்தைக் கீற, ஓர் ஆறு தோன்றியது. அரியின் சொல்லால் உருவான அந்த ஆறு அரிசொல் ஆறு என்று பெயர் பெற்றது. அதுதான் அரசலாறு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அதன்பின் அந்நீரைக் கொண்டு வேள்வி செய்து திருமாலை ஆராதித்தார் பிரம்மா.இப்படிப் பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் குருவாக இருந்து வேதங்களை உபதேசிப்பதால் ஹயக்ரீவப் பெருமாள் ‘குரு:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 495-வது திருநாமம்.“குரவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல ஞானத்தைத் திருமால் அருள்வார்.

496. உத்தராய நமஹ (Uttharaaya namaha)

ஆதிகேசி என்று ஓர் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் தேவர்களைப் பலவாறுதுன்புறுத்திவந்தான். அவனால் பெருந்துயருக்கு ஆளான தேவர்கள், பிரம்மாவின் உதவியை நாடினார்கள். ஆதிகேசியை அழிக்கும் ஆற்றல் திருமால் ஒருவருக்கே உண்டு என்று சொல்லித் திருமாலின் உதவியை நாடுமாறு வழிகாட்டினார் பிரம்மா. பிரம்மா தலைமையில் அனைத்துத் தேவர்களும் திருப்பாற்கடலுக்குச் சென்றார்கள். தீராத இன்னல் தரும் ஆதிகேசியைத் தீர்த்துக் கட்டித் தம்மை ரட்சிக்குமாறு திருமாலின்திருவடிகளைப் பணிந்தார்கள். அப்போது திருமால், “தேவர்களே! என் திருவடியில் பணிந்தவர்கள் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதை அப்படியே நிறைவேற்றுபவன் நான்! அந்த அசுரனை நான் எப்படி அழிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள்! அப்படியே செய்துவிடுகிறேன்!” என்றார்.

தேவர்கள் தங்களுக்குள் ஆலோசித்துவிட்டுத் திருமாலிடம், “இறைவா! ஒவ்வோர் அசுரனும் ஏதோ ஒரு சக்தியைப் பெற்றுக் கொண்டு எங்களைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த ஆதிகேசியை வீழ்த்திவிட்டு அவன்மீதே பள்ளி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தீமை செய்ய நினைக்கும் அசுரர்கள் உனக்குக் கீழ் இருக்கும் ஆதிகேசிக்கு நிகழ்ந்ததைப் பார்த்து அஞ்சியாவது தீங்கு செய்யாதிருக்க வாய்ப்புண்டு!” என்று கோரினார்கள்.அப்படியே செய்கிறேன் என்று தேவர்களுக்கு வாக்களித்தார் திருமால். திருமால் ஆதிகேசியை எதிர்த்து மல்யுத்தம் புரிந்தார். அவனைத் தாக்கிக் கீழே தள்ளியபின் அவனுக்கு மேல் தனது ஆதிசேஷப் படுக்கையை இட்டு, ஆதிகேசியை அழித்தவன் என்பதற்குச் சான்றாக ``ஆதிகேசவன்’’ என்ற திருநாமத்தோடு அவ்விடத்தில் பள்ளி கொண்டார்.

ஆதிகேசியின் மனைவியான அசுரப் பெண், கங்கை நதியின் உதவியை நாடினாள். “தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்த என் கணவனை அழித்துவிட்டு அவன்மீது திருமால் பள்ளி கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணின் மனதை மற்றொரு பெண்தானே அறிவாள்? எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று வேண்டினாள்.அதைக் கேட்ட கங்கை, தாமிரபரணி நதிக்குள்ளே நுழைந்தாள். ஆதிகேசி மீது பள்ளி கொண்டிருந்த ஆதிகேசவன் மீது மோதுவது போல் தாமிரபரணிக்குள் நுழைந்த கங்கை வந்தாள்.

திருமால், பூமிதேவியை ஒரு பார்வை பார்க்க, பூமிதேவி அப்பகுதியை மட்டும் சற்றே நிலப்பரப்புக்கு மேலே உயர்த்திவிட்டாள். வேகமாக வந்த கங்கையும் தாமிரபரணியும் அந்த உயர்ந்த நிலத்தில் மோதி அதைச் சுற்றி வட்டமாக ஓடத் தொடங்கின. மோதிய வேகத்தில் மனமாற்றம் அடைந்த காவிரியும் தாமிரபரணியும் திருமாலின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினார்கள். கங்கை, தாமிரபரணி இருவரையும் பார்த்து, “நீங்கள் எனக்கு வட்டமாக மாலை சூட்டித் தொண்டு செய்ததாக நான் அங்கீகரிக்கிறேன்!” என்று சொல்லி அருள்புரிந்தார் திருமால். ஆறு வட்டமாக ஓடியதால், அவ்விடம் வட்ட ஆறு, (வட்டாறு) என்று பெயர் பெற்றது. அதுவே ‘திருவட்டாறு’ என்ற திவ்யதேசமாக ஆனது. நம்மாழ்வார் ‘திருவாட்டாறு’ என்று இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

“அருள்பெறுவார் அடியார்தம் அடியனேர்க்கு ஆழியான்

அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே

இருள்தருமா ஞாலத்து இனிப்பிறவி யான்வேண்டேன்

மருள் ஒழிநீ மடநெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே”

என்ற பாசுரத்தில், அடியார்கள் எப்படி விதிக்கிறார்களோ, அதாவது கட்டளை இடுகிறார்களோ, அப்படியே அருள்புரியும் பெருமாள் என்ற ஆதிகேசவப் பெருமாளைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். தேவர்கள் விரும்பிய படி ஆதிகேசியை வதைத்தமையைத் திருவுள்ளத்தில் கொண்டு இவ்வாறு ஆழ்வார் பாடியதாகப் பெரியோர்கள் ரசிப்பார்கள்.

பிரம்மாவிடமிருந்து வேதங்களை மது, கைடபர்கள் அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்துக் காத்தார் அல்லவா திருமால்? இதுபோல் தேவர்களுக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும், அந்த ஆபத்துகளில் இருந்து காப்பதால் திருமால் ‘உத்தர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உத்தர:’ என்றால் ஆபத்தில் காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 496-வது திருநாமம். “உத்தராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆபத்துகள் நேராதபடித் திருமால் காத்தருள்வார்.

497. கோபதயே நமஹ (Gopathaye namaha)

வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.

பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்!  இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.

சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.

இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.

பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.

பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.

இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.

இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

498. கோப்த்ரே நமஹ (Gopthrey namaha)

முன்னொரு சமயம் வாசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த பல முனிவர்கள் நம் தமிழகத்தில் காவிரிக்கரை ஓரமாக வசித்துவந்தார்கள். அம்முனிவர்கள் ஒன்றுகூடித் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறை என்ன என்று அறிய விரும்பினார்கள். அதற்காகப் பல முனிவர்களை அவர்கள் அண்டினார்கள். பாரததேசம் எங்கும் உள்ள பல முனிவர்களிடம் அவர்கள் சென்று பிரார்த்தித்த போதும், “திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையான ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது! அதனால் எங்களுக்குப் பூஜை முறைகள் தெரியாது!” என்று சொல்லிவிட்டார்கள். அதன்பின் அவர்கள் கஹோலர் என்ற முனிவரைச் சென்று பற்றினார்கள். கஹோலமுனிவர், “வேதங்களில் சொல்லப்பட்ட வேள்வி முறைகளை நான் அறிவேன். அவற்றின் மூலம் திருமாலை ஆராதித்துவருகிறேன். ஆனால் வீட்டிலோ, கோவிலிலோ, விக்கிரக வடிவில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்குப் பூஜை செய்யும் முறைகளை நான் அறியவில்லை. மேரு மலை அடிவாரத்தில் ஏகதர் என்றொரு முனிவர் உள்ளார். அவரிடம் சென்று பிரார்த்தியுங்கள்!” என்று சொன்னார்.

“யார் அந்த ஏகதர்?” என்று முனிவர்கள் கேட்க, கஹோலர், “பிரம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஏகதர், த்விதர், த்ரிதர் என்று அவர்களுக்குப் பெயர். ஏகதர் என்பவர் மூத்த மகன். த்விதரும், த்ரிதரும் உலகில் க்ஷேமமாக வாழ என்ன வழி என்பதைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். ஆனால் ஏகதரோ, திருமகளின் கேள்வனான திருமாலுக்குப் பூஜை செய்து வழிபட என்ன வழி என்று சிந்திக்கத் தொடங்கினார். நீண்ட நாட்கள் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தார் ஏகதர். திருமால், அவருக்குக் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்ற கேட்டபோது, திருமாலை ஆராதிக்கும் முறைகளையும், அவரைச் சரண் அடைந்து முக்தி அடையும் முறையையும் தனக்கு உபதேசிக்குமாறு பிரார்த்தனை செய்தார்.

திருமால், தன்னைப் பூஜிக்கும் முறையான ``ஸ்ரீபாஞ்சராத்ரம்’’ என்ற ஆகமத்தின் ஒரு பகுதியான ``ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதை’’ என்ற பகுதியை ஏகதருக்கு உபதேசம் செய்தார். எனவே நீங்கள் ஏகத முனிவரை நாடி, அவரிடம் இருந்து ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் அப்பகுதியை அறிந்து கொள்ளலாம்!” என்று சொன்னார்.அதன்படி மேருமலை அடிவாரத்தில் உள்ள ஏகத முனிவரின் ஆசிரமத்துக்கு இந்த முனிவர்கள் சென்றார்கள். ஏகதரை வணங்கிப் பூஜித்தார்கள். “என்ன காரணமாக என்னைத் தேடி வந்துள்ளீர்கள்?” என்று முனிவர்களிடம் கேட்டார். “ஏகத முனிவரே! நாங்கள் திருமகளையும் திருமாலையும் பூஜிக்கும் முறையை அறிய விரும்பி வந்துள்ளோம்!” என்று முனிவர்கள் ஏகதரிடம் கூறினார்கள்.

ஏகதரும் கருணையோடு அவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் பகுதியான ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையை உபதேசம் செய்தார். அந்தப் பகுதி முழுவதும் மகாலட்சுமி திருமாலிடம் பூஜை முறைகள் குறித்துக் கேள்விகள் கேட்க, அதற்குத் திருமால் பதில் அளிப்பதாக அமைந்துள்ளது. இதை உபதேசம் செய்த ஏகதர், “முனிவர்களே! வாருங்கள்! பாரத தேசத்தின் தெற்குப் பகுதியில் காவிரிக் கரையில் உள்ள பாஸ்கர க்ஷேத்ரமான கும்பகோணத்தில் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். அவருக்குத் தொன்றுதொட்டு இந்த முறையில்தான் பூஜை நடந்துவந்தது. இடையில் இது வழக்கொழிந்து போய்விட்டது.

நாம் மீண்டும் அவரை இதே ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையின் அடிப்படையில் ஆராதிக்கலாம்!” என்று முனிவர்களை அழைத்தார். மேரு மலையில் இருந்து மீண்டும் காவிரிக் கரைக்கு ஏகதரோடு வந்து அம்முனிவர்கள் ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையில் காட்டப்பட்ட முறையின்படி, ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாளையும், கோமளவல்லித் தாயாரையும் ஆராதித்தார்கள்.

ஸ்ரீசாரங்கபாணி திருக்கோவிலின் சந்நதித் தெருவிலேயே தமது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு ஏகதர் தங்கிவிட்டார். இன்றும் அந்த ஆசிரமத்தைக் கும்பகோணத்தில் காணலாம். ஆக, உலகில் வேதங்களோ, வேதாந்தமோ, ஆகம சாஸ்திரங்களோ, ஆழ்வார் பாசுரங்களோ அடிக்கடி வழக்கொழிந்து போவதுண்டு. ஆனாலும் இறைவன் அவை அப்படியே அழிந்துபோகும்படி விட்டுவிடுவதில்லை. மறைந்துபோன, மறந்துபோன அந்த வித்யைகளைப் பலவித முறைகளைக் கையாண்டு திருமாலே மீட்டுத் தந்துவிடுகிறார்.

பூஜை முறையான ஸ்ரீபாஞ்சராத்திரம் வழக்கொழிந்துபோன போது, ஏகதர் மூலம் மீட்டார் அல்லவா..? ஆழ்வார்களின் பாசுரங்கள் வழக்கொழிந்து போன போது, நாதமுனிகள் மூலம் மீட்டார் அல்லவா..?அதுபோலத்தான் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் அசுரர்கள் வேதங்களை அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்து வேதங்களை மீட்டுத் தந்தார் திருமால். அதனால்தான் கோப்தா - வித்யைகள் அழிந்துபோகாமல் காப்பவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 498-வது திருநாமம். “கோப்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மறதி இல்லாத நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

499. ஞான கம்யாய நமஹ (Gnaana gamyaaya namaha)

1268-ம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், திருமலையப்பனின் மணியின் அம்சமாகக் காஞ்சிபுரத்தில் அவதரித்தவர் சுவாமி வேதாந்த தேசிகன். அவரின் இயற்பெயர் வேங்கடநாதன் என்பது. தேசிகனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவரது தாய்மாமாவான அப்புள்ளார் என்பவர் தன் மருமகனைப் பார்ப்பதற்காக அவரது இல்லத்துக்கு வந்திருந்தார். ஐந்து வயது தேசிகனைக் கொஞ்சி விட்டுக் காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் திருக்கோவிலுக்குப் புறப்பட்டார் அப்புள்ளார். “மாமா! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் தேசிகன். “குழந்தாய்! அத்திகிரி வரதர் சந்நதியில் நடாதூர் அம்மாள் என்ற மகான் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை விளக்கி வருகிறார்.

அவரது விளக்கவுரையைக் கேட்கச் செல்கிறேன்!” என்றார் அப்புள்ளார்.“நானும் வருவேன்!” என்று அடம்பிடித்தார் தேசிகன். “ஐந்து வயது குழந்தையான உனக்கு ஸ்ரீபாஷ்யம் புரியாது!” என்றார் அப்புள்ளார். ஆனால், தேசிகன் வந்தே தீருவேன் என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் தேசிகனையும் தம்மோடு வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார். நடாதூர் அம்மாள், ஸ்ரீபாஷ்ய விளக்கங்களை வழங்கிக்கொண்டிருக்க, நடுவே ஐந்து வயது பாலதேசிகனோடு அப்புள்ளார் நுழையவே, தேசிகன் முகத்தில் இருக்கும் பொலிவைப் பார்த்து அங்கிருந்தோர் அத்தனை பேரும் மயங்கி விட்டார்கள். உரையாற்றிக் கொண்டிருந்த நடாதூர் அம்மாளும், தான் விட்ட இடத்தை மறந்துவிட்டார், கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யர்களும் மறந்துவிட்டார்கள்.

எல்லாரும், பிரமிப்புடன் தேசிகனையும் அப்புள்ளாரையுமே பார்த்துக்கொண்டிருக்க, “ஏன் மாமா எல்லாரும் விழிக்கிறார்கள்?” என்று அப்புள்ளாரிடம் கேட்டார் தேசிகன். “சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நடுவில் போனால் இப்படித் தான் கவனம் சிதறும். நாம் நடுவில் வந்துவிட்டோம் அல்லவா? அதனால் எங்கே நிறுத்தினோம் என்று தெரியாமல் விழிக்கிறார்கள்! தவறு நம் மீதுதான்!” என்றார் அப்புள்ளார்.தேசிகன் சிரித்துக்கொண்டே, “இதுதானா பிரச்னை? படஇ பராஸர ஸத்தம் என்ற இடத்தில் நடாதூர் அம்மாள் நிறுத்திவிட்டார்கள்.

மேற்கொண்டு சொல்லச் சொல்லுங்கள், கேட்போம்!” என்றார். ஐந்து வயது குழந்தையின் இந்த ஞானத்தைப் பார்த்து வியந்த நடாதூர் அம்மாள் தேசிகனை அழைத்துத் தம் மடியில் அமர்த்தி, “ப்ரதிஷ்டாபித வேதாந்த: ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயாஸ் த்ரைவித்ய மான்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜனம்” என்று வாழ்த்தினார். நீ வேத நெறியை நன்கு நிலைநாட்டி, சான்றோர்களால் கொண்டாடப் படுபவனாக, மங்கலங்கள் எல்லாம் நிறையப் பெற்றவனாக விளங்குவாய் என்பது இந்த சுலோகத்தின் கருத்து.

இப்படி வாழ்த்தியபின் அப்புள்ளாரை அழைத்த நடாதூர் அம்மாள், “நான் உங்களுக்கு உபதேசித்த எல்லா சாஸ்திரங்களையும் உரிய காலத்தில் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்! குறிப்பாக நான் உபதேசித்த கருட மந்திரத்தையும் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறினார். அதன்படி அப்புள்ளாரும் உரிய காலத்தில் தேசிகனுக்கு எல்லா சாஸ்திரங்களையும் உபதேசிக்க, 20 வயதுக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக ஆகிவிட்டார் தேசிகன். அப்புள்ளார் உபதேசித்த கருட மந்திரத்தை நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டு, கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஔஷதகிரி மலையில் அமர்ந்து, கருட மந்திரத்தை ஜபித்து கருடனைத் தியானித்தார் தேசிகன்.

கருடன் அவருக்குக் காட்சி தந்து, ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த ஹயக்ரீவ மந்திரத்தை தேசிகன் ஜபிக்க, ஹயக்ரீவர் தேசிகனுக்குத் தரிசனம் தந்து, தனது திருவாய் அமுதை தேசிகனுக்கு அருளினார். அந்த அருளால் மிகச்சிறந்த வாக்கு வன்மை பெற்று, கவிபாடுவதிலும், தர்க்கத்திலும் ஒப்பற்றவராக விளங்கினார் தேசிகன். கவிதார்க்கி சிம்மம் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்றும் விருதுகள் பெற்றார்.

தேசிகன், ஹயக்ரீவரின் தரிசனத்தையும்அருளையும் பெற்றதற்கு என்ன காரணம்? முதலில் அவர் பெற்ற நடாதூர் அம்மாள், அப்புள்ளார் போன்ற ஆசார்யர்களின் திருவருள். அதைத் தொடர்ந்து அவர் செய்த கருட மந்திரஜபமும், ஹயக்ரீவ மந்திரஜபமும். இப்படி குருவின் அருளோடு இறைவனை முறைப்படி தியானிப்பதற்குப் பரவித்யை என்றும் ஞானம் என்றும் பெயர். அந்தப் பரவித்யையாகிய ஞானத்தால் அறியப்படும் ஹயக்ரீவருக்கு ‘ஞானகம்ய:’ என்று திருநாமம். ‘ஞானகம்ய:’ என்றால் ஞானத்தால் அறியப்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 499-வது திருநாமம்.“ஞானகம்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: