×

துஷ்யந்தன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சென்ற இதழ் தொடர்ச்சி...

குழந்தைக்கு ஆறு வயதானது. ஆசிரமத்தில் நுழைய முயற்சிக்கும் சிங்கம்-புலி முதலான கொடிய விலங்குகளை எல்லாம், அந்தச் சிறு வயதிலேயே அடக்கி, ஒடுக்கி அவற்றால் விளையக்கூடிய ஆபத்துக்களைத் தடுத்தான் அச்சிறுவன்.அனைத்திற்கும் மேலாக, ராட்சசர்கள் கூட அவனைக் கண்டாலே நடுங்கினார்கள். ஒரு சமயம் பெரும் ராட்சசன் ஒருவன் அங்கே ஆசிரமவாசிகளுக்குத் தீங்கு செய்ய வந்தான். வந்தவனை மடக்கி,தன் முழங்கால்களாலேயே அடித்துக் கொன்றான் சிறுவன். அனைவரும் வியந்தார்கள்.

’இவன் எல்லாவற்றையும் அடக்குபவனாக இருப்பதால், இவன் ‘சர்வ தமனன்’ எனப் பெயர் கொண்டவனாக இருக்கட்டும்’- என்று அச்சிறுவனுக்கு சர்வதமனன் எனப் பெயர் சூட்டினார்கள். (இந்த சர்வதமனன் தான் பெரும்புகழ் பெற்ற பரதன். நமக்குத் தெரிந்த பரதன் என்ற பெயரிலேயே பார்க்கலாம் இனி)பரதனுக்குப் பன்னிரண்டு வயதானது. அவனுக்குப் போர்க் கலைகள், யானையேற்றம், குதிரையேற்றம் என, அரசர்க்கு உண்டான அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தார் கண்வ முனிவர்.

‘‘இதற்குமேல் இவளை இங்கே வைத்திருப்பது சரியல்ல. துஷ்யந்த மன்னனிடம் அனுப்பிவிட வேண்டும்’’ என்று தீர்மானித்த கண்வமுனிவர், தகுந்த பாதுகாப்போடு சகுந்தலையையும் அவள் பிள்ளை பரதனையும், துஷ்யந்தனிடம் அனுப்பினார் கண்வ முனிவர். சகுந்தலைக்கும் பரதனுக்கும் துணையாக வந்தவர்கள், நகரத்திற்குள் நுழைந்ததும் வந்தவழியே திரும்பிவிட்டார்கள். அரசவீதியில் ஓர் அனாதையைப்போலப் பிள்ளையுடன் தனித்து விடப்பட்ட சகுந்தலை, அழுதபடி அரண்மனையை அடைந்தாள்.

அரசவையில் இருந்த மன்னர் துஷ்யந்தனிடம் போய் நின்றாள். அனைவரும் அவளைப் பார்க்க, அவளோ, ‘‘மகனே! உன் தந்தையான இந்த அரசருக்கு வந்தனம் செய்!’’ என்றாள்.
சகுந்தலையின் வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் திகைத்தார்கள். துஷ்யந்தனோ, விவரங்களை உணர்ந்தாலும் வாய் திறந்து ‘பளிச்’ சென்று ஏதும் சொல்லமுடியாத
நிலையில் இருந்தார்.

சகுந்தலையைப் பார்த்த உடனேயே துஷ்யந்தன் புரிந்து கொண்டார். சகுந்தலையை மணம்செய்து, அவளை விட்டுப் பிரிந்த துஷ்யந்தனுக்கு, ‘கண்வ முனிவர் அனுமதியில்லாமல், அவருக்குத் தெரியாமல் சகுந்தலையை மணம்செய்து கொண்டது தவறு. என்ன சாபம் கொடுப்பாரோ?’ என்ற பயம் இருந்தது.ஆனால் நாளாகநாளாக அந்த எண்ணம் மறைந்து போனது. சொல்லப்போனால், சகுந்தலையை முழுவதுமாக மறந்திருந்தார் துஷ்யந்தன்.

இப்போது சபையில் சகுந்தலையைப் பார்த்ததும் துஷ்யந்தனுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் நினைவிற்கு வந்தன. அவள் அருகில் இருக்கும், தன் சாயலிலேயே இருந்த பரதனைப் பார்த்ததும்,துஷ்யந்தன் உண்மையை உணர்ந்து கொண்டார்.இருந்தாலும் சபையில் அதைச் சொல்லாமல்,‘‘பெண்ணே! நீ எதற்காக வந்தாய்? என்ன வேண்டும்? சொல்!’’ என்றார்.
சகுந்தலை கொஞ்சம்கூடத் தயங்கவில்லை; அமைதியாகச் சொன்னாள்; ‘‘மன்னா! உங்களுக்கும் எனக்கும் பிறந்தவன் இவன். கண்வ முனிவர் ஆசிரமத்தில் நீங்கள் என்னை மணம் செய்துகொண்டபோது, கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள்! அந்த வாக்குறுதியின்படி, இவனை இளவரசனாக அறிவித்து, இளவரசனாக அபிஷேகம் செய்து வையுங்கள்!’’ என்றாள் சகுந்தலை.

சபையில் அனைவர் முன்பும் தன்செயலைச் சொல்லத் தயங்கிய துஷ்யந்தன், சகுந்தலையின் வார்த்தைகளை மறுத்தார்; ‘‘பெண்ணே! யார் நீ? உன்னைப்பார்த்தது கூடக்கிடையாது’’ என்று சொல்லத் தொடங்கிய துஷ்யந்தன், கடுமையாக ஏசினார் சகுந்தலையை.சகுந்தலை என்னென்னவோ சொல்லி வாதாடிப் பார்த்தாள்.

அனைத்தையும் மறுத்த துஷ்யந்தன், ‘‘கண்வ முனிவராவது? ஆசிரமமாவது? நீ உளறும் எதையும் நம்பத் தயாராக இல்லை நான். பெண்ணே! தங்கம், ரத்தினம், முத்து, ஆடை, ஆபரணங்கள் என எது வேண்டுமானாலும் கேள்!எவ்வளவு வேண்டுமானாலும் கேள்! தருகிறேன். வாங்கிக்கொண்டு உன் பிள்ளையுடன் வெளியில் போய்விடு!’’ என்றார்.

சகுந்தலையின் கண்கள் கலங்கின. அவையில் இருந்த அனைவரும் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் வாயே திறக்கவில்லை. அதனால் என்ன? சகுந்தலை தன் மனக்குமுறல்களை வெளியிட்டாள்.‘‘மன்னா! செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து பேசுகிறீர்கள். சத்தியத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. நூறு கிணறுகளை விட, ஒரு குளம் உயர்ந்தது. நூறு குளங்களைவிட, ஒரு புத்திரன் உயர்ந்தவன். சத்தியமோ, நூறு புத்திரர்களை விட- ஆயிரக்கணக்கான அசுவமேத யாகங்களை விட உயர்ந்தது.

‘‘அப்படிப்பட்ட சத்தியத்தைக் கைவிட்டு,என்னையும் என் பிள்ளையையும் கைவிட்டு விட்டீர்கள். என்ன செய்ய? பிறந்தவுடன், என் பெற்றோர்கள் என்னைக் கைவிட்டு விட்டார்கள். முனிவர் ஆசிரமத்தில் வளர்ந்த என்னை மணம் செய்து கொண்ட நீங்களும் என்னைக் கைவிட்டு விட்டீர்கள். ஆனால் மன்னா! தெய்வம் ஒரு நாளும் கைவிடாது. என் குழந்தையைத் தேவேந்திரனே நேருக்குநேராக வந்து ஆசிர்வதித்தபோது, ‘இவன் பெரும் சக்கரவர்த்தியாக ஆவான்’ என்று சொல்லி வாழ்த்தினார். கண்டிப்பாக அது பலிக்கும். அதிர்ஷ்டம் இல்லாத நான், இப்போது வந்த வழியே திரும்பிச்செல்கிறேன்’’ என்ற சகுந்தலை, அங்கிருந்து புறப்படத் தொடங்கினாள்.

அப்போது ஓர் அசரீரி, ‘‘மன்னா! துஷ்யந்தா! இவன் உன் பிள்ளை. கண்வ முனிவரின் ஆசிரமத்தில் நீ மணம்செய்து கொண்ட இந்த சகுந்தலைக்குப் பிறந்தவன் இவன்’’ என்று கூறிவிவரித்தது. தேவர்களும் வந்த அதையே சொல்லி, சகுந்தலையை மனைவியாகவும் பரதனை மகனாகவும் ஏற்கச்சொல்லி அறிவுறுத்தினார்கள். பிறகென்ன? சபை அறிய, கண்வமுனிவரின் ஆசிரமத்தில், தான் சகுந்தலையை மணம்செய்து கொண்டதை விவரித்து, சகுந்தலையிடம் தன்னை மன்னிக்க வேண்டி, அவளை அரசியாகவும் பரதனை இளவரசனாகவும் அறிவித்தார்.இந்தப் பரதனின் பெருமை பல நூல்களிலும் சொல்லப் பட்டிருக்கிறது.

(துஷ்யந்தன்-சகுந்தலை வரலாற்றில், துஷ்யந்தன் சகுந்தலைக்கு மோதிரம் போட்டது - துர்வாசர் சகுந்தலைக்குச் சாபம் கொடுத்தது - அதன் காரணமாக துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தார் எனும் தகவல்கள், மூலநூலான வியாச பாரதத்தில் கிடையாது. அதனால் இங்கு சொல்லப்படவில்லை)

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Tags : Dushyandan ,
× RELATED துஷ்யந்தன்