மன பயம் நீக்குவார் சேத்தூர் முத்தையா

நம்ம ஊரு சாமிகள்

சேத்தூர், விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி தான் சேத்தூர். சேத்தூர் அரண் மனையில் வேலை பார்த்து வந்தவர் முத்தையா. அரண்மனையில் எடுபிடி வேலைக்காக வந்தவர். நாட்கள் செல்ல செல்ல முத்தையா மீது ராஜாவிற்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின்னர் முத்தையாவை தனது மெய்காப்பாளராக பணி நியமனம் செய்து கொண்டார் ராஜா. ஒரு நாள் ராஜா வேட்டைக்கு சென்றார். முத்தையாவையும் ராஜா உடன் அழைத்துச் சென்றார். காவலாளிகளும் உடன் சென்றிருந்த நிலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜா மீது பதுங்கி இருந்த புலி ஒன்று பாய முற்பட்டது. இதையறிந்த முத்தையா, ராஜாவை தள்ளிவிட்டு புலியின் தாக்குதலுக்கு உட்பட்டார்.

உடனே ராஜா புலி மீது அம்பு எய்து அதனை வீழ்த்தினார். இருப்பினும் புலியின் கொடூர தாக்குதலில் முத்தையா காயம் அடைந்தார். குதிரை மேல் அமர்ந்த ராஜா தனது மடிமீது முத்தையாவை போட்டு அரண்மனைக்கு கொண்டு வந்தார். அரண்மனை வைத்தியர் மூலம் தீவிர சிகிச்சை அளித்தார் ராஜா. குணமடைந்த முத்தையாவை நன்கு கவனித்தனர். ராணியும் தனது பதியின் உயிரை காப்பாற்றியவர் என்ற எண்ணத்தோடு முத்தையா மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டு கவனித்தார். எதிர்பாராத இந்த உபசரணையை முத்தையா தவறாக புரிந்து கொண்டார்.

ராணி மீது இச்சை கொண்டு அடைய நினைத்தார் முத்தையா. ஒரு நாள் முத்தையா ராணியை சிறை பிடித்து கானகத்திற்கு தூக்கிச் சென்றார். இதையறிந்து ஆத்திரமடைந்த சேத்தூர் ராஜா தன் படை வீரர்கள் மூலமாக முத்தையாவைப் பிடித்து, சதுரகிரி மலைக்குக் கொண்டு சென்று மாறு கை, மாறு கால் வாங்கி (வலது கையையும், இடது காலையும் வெட்டி) தீர்த்துக்கட்டினார். உயிர் நீத்த பின்னரும் ராணி மீது கொண்ட மோகம் குறையாத முத்தையா ஆவியாக வந்து அர்த்த ராத்திரியில் ராணியை மலைக்குத் தூக்கிச் சென்று, பொழுது விடிந்தால் அரண்மனையில் கொண்டு விட்டுவிடுவதுமாக இருந்தார். ஒரு நாள் சாமப்பொழுதில் விழித்த ராஜாவுக்கு அருகே ராணி இல்லாததை கண்டு பீதி அடைந்து அக்கம்-பக்கம் தேடினார்.

கோழி கூவும் பிரம்ம முகூர்த்தத்தில் படுக்கையில் ராணி இருப்பதை கண்டு வியப்புற்றார். ராணியிடம் இது குறித்து கேட்க, ஏதோ நிழல் ஒன்று வந்து என்னை இரவில் தூக்கி செல்வது போலவும், இரவில் அடர்ந்து காட்டுக்குள் இருப்பதாகவும். விடியும் வேளையில் அரண்மனை கட்டிலில் படுத்திருப்பதாகவும் நான் உணர்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியிவில்லை. ஏதோ பயமாக இருக்கிறது. என்று கண்ணீர் மல்க கதறினாள். இதனால் சஞ்சலமடைந்த ராஜா, ‘‘இந்த ஆவியை யார் பிடிச்சுட்டுப் போறாங்களோ அவங்களுக்கு முந்நூறு பொன் பரிசு தரப்படும்!’’ என்று அறிவித்தார். அப்போது வியாபாரத்துக்காக சேத்தூர் சென்ற முத்துக்கருப்பன் செட்டியார் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டார்.

மாந்திரீகமும், சித்து வேலைகளையும் கற்று உணர்ந்த முத்துக்கருப்பன் முத்தையாவின் ஆவியை, தான் கூட்டிச் செல்வதாகக் கூறினார். பிறகு சேத்தூரின் மேற்கு எல்லையில் நின்று கொண்டு, ‘‘என்னோட ஆலயத்துல கடைசி பூஜையை உனக்குக் கொடுக்கிறேன். எங்ககூட வந்திருடா முத்தையா” என்று அழைத்தார். அதற்குக் கட்டுப்பட்டு அவர் பின்னாலேயே சென்றது முத்தையாவின் ஆவி. கூடமுடையார் கோயில் வாசலில்  முத்தையாவைக் குடியிருக்க வைத்துவிட்டு, முந்நூறு பொன்னை வாங்குவதற்காக அரண்மனைக்குப் போனார் முத்துக்கருப்பன்.

சொன்னபடி பொன்னைக் கொடுத்த ராஜா, பாதி வழியிலேயே செட்டியாரிடமிருந்து அதைத் தட்டிப்பறிக்க ஆறு சிப்பாய்களை அனுப்பி வைத்தார். அதை மாந்திரீக வித்தை தெரிந்த முத்துக்கருப்பன். மாந்திரீகத்தின் மூலம் அறிந்து கொண்டு, போலி பொற்காசுகளை மாந்திரீகத்தின் மூலம் வரவழைத்து தன்னை வழிமறித்

த சிப்பாய்களிடம் கொடுத்து அனுப்பினார். போலி காசுகளை கண்டறிந்து தனது தவறை உணர்ந்து குதிரையில் வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அன்று முதல் இன்று வரை சிவராத்திரியன்று கூடமுடையார் கோயிலில் சேத்தூர் அரண்மனையின் பெயரில் தான் முதல் பூஜை நடக்கிறது. அதேபோல், முத்துக்கருப்பன் கொடுத்த வாக்குப்படி இன்றைக்கும் கடைசி பூஜை சேத்தூர் முத்தையாவுக்குத்தான்!

‘கூடமுடையார் கோயிலுக்கு வந்தால் கூடாத காரியமும் கைகூடி வரும்!’ குழந்தை வரம் வேண்டுபவர்கள், கூடமுடையானை வேண்டிக் கொண்டு கோயில் மரத்தில் முந்தானையைக் கிழித்து தொட்டில் கட்டிவிட்டுப் போனால், கைமேல் பலன் கிடைக்கிறது. மாசி மாத சிவராத்திரியின் போது நடைபெறும் மூன்று நாள் திருவிழாதான் இங்கு விசேஷம். அப்போது கருப்புகளுக்குக் கிடாவெட்டு பூஜையும் நடக்கிறது. இதேபோல் ஆடி அமாவாசைக்கும் இரண்டு நாள் திருவிழா உண்டு. இதைத்தவிர, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வைகாசி விசாகத் திருவிழா இங்கு அமர்க்களப்படுகிறது.

முந்தைய காலத்தில் அடாவடிக்காரர்களுக்குப் பயந்து, ஊரைக் காலி செய்து ஆற்றைக் கடந்து போனவர்களின் சந்ததியினர் ராமநாதபுரம் ஜில்லாவின் பல

பகுதிகளில் இப்போதும் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வைகாசி விசாகத்தன்று,  சேதுச் சீமையிலிருந்து கூடமுடையானைத் தரிசிப்பதற்காக இன்றைக்கும் பழைய ஐதீகப்படி மாட்டு வண்டியில் வந்து சேர்கிறார்கள். இவர்கள் ஒருவார காலம் கோயில் வாசலில் தங்கி, திருவிழா கொண்டாடுகிறார்கள். இப்படி வந்து போகும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை சுமார் ஐந்நூறைத் தாண்டுமாம்.

ராஜபாளையம் - தென்காசி சாலையில் ராஜபாளையத்திலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது சேத்தூர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்டது காளையார்குறிச்சி. இங்கு கோயில் கொண்டு அருள்கிறார் கூடாமுடைய அய்யனார். சிவகாசியிலிருந்து 20 கி.மீட்டர் தூரத்திலுள்ளது காளையார் குறிச்சி கிராமம். கூடாமுடையார் கோயிலில் காவல் தெய்வமாக இருக்கிறார் முத்தையா.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Related Stories: