மாவளியோ மாவளி...

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கார்த்திகைத் தீபநாளில் தீபம் ஏற்றிய பின் ‘‘மாவளி’’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும். பனம் பூ எனப்படும் பூக்கள் மலரும் காம்பை, நன்கு காயவைத்து, காற்றுப் புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவர். பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்து இருபுறமும் கட்டுவர். பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் கட்டுவர். துணிப்பந்தின் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர்.

கயிற்றை பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதற விட்டபடி ஒரு எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக்கும். அப்போது மாவளியோ மாவளி... மாவளியோ மாவளி...  என்று சத்தமிடுவர். இது பார்ப்பதற்கு இனிய காட்சியாகும்.

மகாபலி சக்ரவர்த்தி முன்பிறவியில் எலியாக இருந்தவர். எலி வடிவில் இருந்தபோது கோயிலில் அணையும் தருவாயில் இருந்த ஒரு விளக்கில் எண்ணெய் குடிக்கச் சென்றார். அவருடைய மூக்குப்பட்டு திரி தூண்டப்பட்டு தீபம் பிரகாசமானது. விளக்கைத் தூண்டிய புண்ணியத்தால் அவர் அடுத்த பிறவியில் மூவுலங்களையும் ஆளும் மகாசக்ரவர்த்தியாகப் பிறந்தார். அவரை மக்கள் மகாபலிச் சக்ரவர்த்தி என்று கொண்டாடினர்.

திருமாலே அவரிடம் மூன்றடி மண்ணை யாசித்து, தனது வலது காலை அவர் தலை மீது வைத்து பாதாளத்திற்கு அனுப்பினார் என்றும், அங்கு பெரிய அரண்மனையில் வசித்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அவர் தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கின்றனர் என்றும் கூறுகின்றனர். அக்னி மயமான கோளத்தில் அவர் பயணிப்பதை இது குறிக்கிறதென்பர். அவர் பெயரைச் சொல்லி அழைப்பதே மாவளி என்றானது என்றும் சொல்வர்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Related Stories: