×

எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒரு குறிபிட்ட நேரத்தில் நம்மிடம் எழும் கேள்வியை கேட்டு அதற்கான பதிலை சில பொருட்களின் மூலமோ செயல்களின் மூலமோ பதிலை பெறுவது பிரசன்னம் ஆகும். இவ்விடத்தில் கேள்வி கேட்பவர், பதிலை கண்டு உரைப்பவர், பதிலை வெளிப்படுத்தும் பொருள் என மூன்றும் அந்தரங்கமாக தொடர்பு கொண்டு கேள்விக்கான பதிலை நமக்கு சூட்சமமாக கொடுக்கும். இவை மிகவும் உணர்வு பூர்வமாக சரியான பதிலைகொடுக்கும்.

பிரசன்னம் பார்ப்பதில் பல வகைகள் உள்ளன. தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்ட மங்கல பிரசன்னம் 108க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் இந்த தீப விளக்கு பிரசன்னமும் ஒரு வகை. தீபங்கள் என்ன செய்கிறது என்பதை எளிமையாக நாம் புரிந்து கொள்ளலாம். தீபம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்றும் கொள்ளலாம். நிலத்தில் இருந்து பெறப்பட்ட பொருளை (எண்ணெய்) மண்ணாகவும் தீப சுவாலையை நெருப்பாகவும் (நெருப்பு) காற்றில் (வாயு) தொடர்பு கொண்டு (நீர்) நீர் திவலைகளை எரித்து பெற்று மேல் நோக்கி அனுப்புவதால் (ஆகாயம்) பஞ்ச பூதங்களை இயக்குகிறோம் என்பதாகும். அவ்வாறு நாம் இயக்கும் பட்சத்தில் நமது நம் நல்ல எண்ணங்களை அவ்விடத்தில் விதைக்க வேண்டும்.

தெய்வ வாக்குகளை கேட்க இந்த வகையான பிரசன்னத்தை நாடலாம். ஒரு செயலை செய்யலாமா? வேண்டாமா? என அறிந்து கொள்வதற்கு இந்தப் பிரசன்னம் வழி செய்கிறது. பிரசன்னத்திற்கு அமரும் முன் நம் கை, கால்களை சுத்தம் செய்து கொள்வதும் அவசியம். குளித்துவிட்டு வந்து அமர்ந்தால் இன்னும் சிறப்பு. விளக்கில் உள்ள தீப சுவாலை அசைவு தான் நமக்கு பதிலாக இங்கு கிடைக்கும். தீபத்தின் சுவாலையை நாம் உற்று நோக்குதல் அவசியம். இந்த வகையாக நாம் கேள்வி கேட்பது இயற்கையிடம் நம் பதிலை பெறுகிறோம். அப்படி பெறப்படும் தீர்வானது சிறப்பானதாகவும் உத்தமமானதாகவும் இருக்கும்.

இந்த தீப விளக்கு பிரசன்னத்தில் அதாவது நமக்கு முன்னால் மார்பு பகுதிக்கு மேல் கண்களுக்கு இணையாக இருக்குமாறு மனை என்று சொல்லக்கூடிய நாற்காலியின் மேல் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். நம்முள் தூய சிந்தனையோடு குலதெய்வ நினைவோடு நம்முள் எழும் கேள்வியினை தீபத்திடம் மானசீகமாக பதில் கேட்க வேண்டும்.  அதிக காற்று வீசி அணையாத இடத்தில் தீபத்தை ஏற்றிக் கொள்ளலாம். பஞ்சமுக தீபம் ஏற்றுவது இன்னும் சாலச்சிறந்தது. சிலருக்கு குழப்பம் ஏற்படும் பட்சத்தில் ஏக தீபம் ஏற்றலாம். தீபத்தினை கிழக்கு முகமாக வைத்து கொள்ளலாம். கிழக்கு மேற்காகவோ அல்லது மேற்கு கிழக்காவோ அமர வேண்டும்.

பின்பு, தீபத்தின் சுவாலையை மனப்பதட்டம் இல்லாமல் உற்றுநோக்குதல் அவசியம். அவ்வாறு உற்று நோக்கி கேள்விகளை விண்ணப்பங்களாக கண்களின் வழியே தீபத்தின் சுவாலையில் சமர்ப்பணம் செய்யுங்கள். பதிலை 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ சென்ற பிறகு மெதுவாக பெறலாம்.   தீபத்தின் சுவாலை முன் பின் அசைந்தால் ஆமாம் அல்லது சரி என்று பதிலாக எடுத்துக் கொள்ளலாம். சில நேரம் 2 அல்லது 3 அதே கேள்வி கேட்கப்பட்டு அசைவும் அதேபோல் அமைந்தால் பதில் தெளிவாக உள்ளது என பொருள்.  

* தீபத்தின் சுவாலை வலது அல்லது இடது அசைந்தால் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.

* தீபத்தின் சுவாலை அசையாமல் நின்று எரிந்தால் நம் முயற்சி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என பொருளாக கொள்ளலாம். அதே தீபத்தின் சுவாலை அசையாமல் நின்று லேசாக வளைந்து நெளிந்து எரிந்தால் பாதையை மாற்றி முயற்சித்தால் வெற்றி என்பதை உணர்த்தும்.

* தீபத்தின் சுவாலை கிழிருந்து மேல் நோக்கி எழுந்து அசையாமல் நின்றால் நமது முயற்சிக்கு கடவுள் அருள் உண்டு என்றும் நம்முடன் நல்ல சக்திகள் பயணிக்கிறது என்றும்பொருளாகும்.

* தீபத்தின் சுவாலையானது இரண்டாக பிரிந்து மீண்டும் சேர்ந்தால் கலகம் உண்டு என்றும் எதிரிகள் மற்றும் துரோகிகளின் செயல் உங்களை பாதிக்கப் போகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது எனப் பொருள்.

* தீபத்தின் சுவாலையானது நீல வண்ணத்தில் காட்சியளித்தால் நமக்கு சில எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் பெரிய முன்னேற்றமோஅல்லது பெரிய பதவிகள் வர இருப்பதை உணர்த்துகிறது என கொள்ளலாம்.

* தீபத்தின் சுவாலையானது சிவப்பாகஇருக்குமேயானால் பிணிகளும் தொந்தரவுகளும் வரப்போவதை நமக்கு உணர்த்துகிறது.

* தீபத்தின் சுவாலையில் சில நேரங்களில் கடவுளின் திருவுருவங்கள் தோன்றினால் நமக்கு கடவுளின் அருள் உண்டு என்பதாகும்.

* தீபத்தின் சுவாலை பச்சை வண்ணத்தில் காட்சி தருமேயானால் நற்பலன்கள் பல உண்டாகும். குழந்தைபேறு உண்டாகும். நினைத்து வந்த காரியம் ஜெயமாகும் என்பது பொருள்.

* தீபத்தின் சுவாலையில் மிருகங்களோபறவைகளோ தோன்றினால் அச்செயலை கைவிடுதல் உசிதம்.

* தீபத்தின் சுவாலை மேலே கிழே அமர்ந்தவாறு காண்பித்தால் பிரச்னை இருக்கிறது என்பதை உணர்த்தும். தீபத்தில் சப்தங்கள் தோன்றினால் அழுத்தமான பிரச்னையில் இருக்கிறோம் என்பதனை சுட்டிக்காட்டும்.

* தீபங்கள் நம் வாழ்வை மாற்றும் என்பதில் எந்த மாற்று சிந்தனையும் இல்லை. எல்லா மதத்தினரும் தீபத்தை ஏற்றி வழிபடுவது பொதுவான இறை நம்பிக்கை.
தீபம் ஏற்றுவோம் வாழ்வில் ஒளி பெறுவோம்.

தொகுப்பு: சிவகணேசன்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி