தீப ஸ்தம்பங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆலயங்களின் முன்புறம் உயர்ந்த நெடிய கம்பங்களை நட்டு அவற்றில் தெய்வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகின்றது. இவை பலவகைப்படுகின்றன. பெரிய விழாக்களின்போது கொடியேற்றுவதற்காகக் கொடிமரம், கார்த்திகை தீபநாளில் தீபம் என்ற தீபஸ்தம்பம். மேலும், வெற்றியைக் குறிக்கும் ஜெய ஸ்தம்பம், பலிப் பொருள்களைக் குறிக்கும் பலி ஸ்தம்பம் முதலியவை குறிப்பிடத்தக்கதாகும்.இவற்றில், தீப ஸ்தம்பங்கள் தனிச் சிறப்புப் பெறுகின்றன. சிறப்பு விழா நாட்களில் இதன்மீது தீபம் ஏற்றப்பட்டாலும், கார்த்திகையன்று தீபம் ஏற்றுதல் பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படு கிறது.

அன்று இந்த கம்பத்திற்கு எண்ணெய் பூசி அபிஷேகம் செய்து தர்ப்பை, பூமாலைகள், புதிய துணி இவற்றால் அலங்கரிப்பது, கார்த்திகை தீப நாளில் மாலைவேளையில் புதிய பாத்திரத்தில் தீபம் ஏற்றி பூஜித்து அதை ஆலயத்தை வலம் செய்து தீபஸ்தம்பத்தின் மீது ஏற்றி வைத்து, மேளதாளங்களுடன் பூஜை செய்கின்றனர். இந்த தீபம், சில நாட்கள் தொடர்ந்து எரியும். கார்த்திகை தீப நாளில் மாலையில் இந்த தீபத்தை தரிசித்த பின்னரே விரதத்தை முடித்து உணவருந்துவது வழக்கம்.

கொங்கு நாட்டில் கிராமிய தெய்வம், குலதெய்வ, பெரியதெய்வம் என்று அனைத்து தெய்வ ஆலயங்களின் முன்புறமும் உள்ள முற்றத்தில் நெடிய தீப ஸ்தம்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஜைன ஆலயங்களின் முன்புறமும் தீப ஸ்தம்பம் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.காலம் வளரவளர கலை நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய தீபஸ்தம்பங்களை அமைத்தனர். அதன் அடிப்பட்டைப் பகுதியில் அந்த தலத்தின் வரலாற்றுக்காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டன.

கம்பங்களை உயர்ந்த மேடை மீது நிலைப்படுத்தினர். அதனை உள்ளடக்கியவாறு அடிப்பகுதியில் சிறிய மண்டபமும் அமைக்கப்பட்டன.கொங்குநாட்டு தீபஸ்தம்பங்கள் சமய வரலாற்றில் தனியிடம் பெற்றுள்ளன. கோயில்களுக்கு முன்புறம் மட்டுமின்றி மலை உச்சியிலும் தீபஸ்தம்பங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: நாகலட்சுமி

Related Stories: