×

கவலை எனும் இருள் அகற்றும் கார்த்திகை தீபம்

6-12-2022

* ஏன் கார்த்திகை தீபம்?

தமிழ் மாதங்கள் 12 .சித்திரையில் ஆரம்பித்து பங்குனியில் முடிகிறது. இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்பட்டது?

ஒவ்வொரு மாதமும் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ,  அந்த நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராக வைக்கப்பட்டது. அன்றைய தினம் ஏதேனும் ஒரு பண்டிகை தினமாக அல்லது விரத தினமாக கொண்டாடப்பட்டது . உதாரணமாக சித்திரை மாதத்தில் பௌர்ணமி வருகின்ற நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம். அந்த மாதத்தின் பெயர் சித்திரை. அந்த நாளின் சிறப்பு பண்டிகையாக சித்ராபௌர்ணமி  கொண்டாடப்பட்டது.

விசாக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணைந்து வரும் வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதைப்போலவே கார்த்திகை விண்மீனும் பௌர்ணமியும் இணைந்து வரும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபப் பெருவிழா மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.

* கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை தீபத்தை தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாகவே கொண்டாடி வருகின்றார்கள். கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், வீடுகளிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்கு “கார்த்திகை விளக்கீடு” என்று பெயர். மாலை வேளைகளில் வீடுகளிலும் வீட்டுக்கு வெளிப் புறங்களில் வீட்டு முற்றங்களில் மாடங்களிலும் விளக்கேற்றிக் கொண்டாடப்படும், கார்த்திகை தினத்தன்று ஆலயங்களிலும் தீபப் பெருவிழா நடக்கும். சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் மாலை ருத்ர தீபம் ஏற்றப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படும்.

* சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம்


சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது - நற்றிணை 58


கார்த்திகை மாதம்.வீரை என்னும் ஊரிலிருந்து கொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் அவன். வெளியன் என்பது அவன் பெயர். அவன் மகன் தித்தன். பனி பொழிந்த கார்த்திகை மாதத்தில் அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பரிபாடல் திரட்டு 10 ம் பாடல் வேறு விதமான அழகியலை படம் பிடித்துக் காட்டுகிறது.

“கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்”


என்று விளக்குகிறது. கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது என்கிறது இப்பாடல். மலைபடுகடாம் (10) என்ற இலக்கிய காட்சி வேறு விதமானது.

அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை”


என்று ஒரு காட்சியைப்   பதிவு செய்கிறது.ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம் என்கிறது மலைபடுகடாம். இப்படி சங்க இலக்கியத்தில் கார்த்திகை விழா பற்றிய பல குறிப்புக்கள் இருக்கின்றன.

* உமாதேவியார் செய்த தவப்பயன் தான் தீபவிழா

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு பல்வேறு காரணங்களும் புராணங்களும் இருக்கின்றன. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாய் இறைவன் காட்சி தந்த நாள் என்பதே பெருவாரியான கருத்து. ஆயினும் வேறு சில கதைகளும் உண்டு. அதில் ஒன்று.  ஒருமுறை உமாதேவியார் சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க பிரபஞ்சமே இருட்டில் தவித்தது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் இருந்தன. அகில மாதாவாகிய தானே இப்படிப்பட்ட தவறு செய்து விட்டோமே என்று உமாதேவி வருந்தினார். தான் பாவம் செய்து விட்டதாகக் கருதி அதற்கு பிராயசித்தத்தைத்  தேடி காஞ்சி புரத்தில் சிவபெருமானை நோக்கி தவத்தில் இருந்தார். இறைவன் தேவிக்கு காட்சி அளித்தார்.

உமாதேவியாரை திருவண்ணாமலைக்கு வரும்படியாக அருள்புரிந்தார். உமாதேவியாரும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில்  தவம் செய்தார். விருச்சிக மாதம் திருக்கார்த்திகை பௌர்ணமி நாள் அன்று இறைவன் தேவிக்கு காட்சியளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார். அந்த தினமே திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது.

* விண்ணும் மண்ணும் பரந்த ஜோதி

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவபெருமான் கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் விண்ணும் மண்ணும் பரந்த ஜோதி சொரூபமாக தம்முடைய ஒளிமயமான உருவத்தைக் காட்டி அருளினார். மாணிக்க வாசகர் திருவெம்பாவை தொடங்கும் போது சிவபெருமானை, ஒளி வடிவமாகவே காண்கிறார். இந்த பாடலின் முதல் வரியை பதம் பதமாகப் பிரித்து ஆராய வேண்டும்.

இறைவன் ஜோதி. சாதாரண ஜோதியல்ல; பெரும் ஜோதி.அவனுக்கு இணையான ஒளி இல்லை. கண்ட ஜோதி. அடுத்து அந்த ஜோதியின் அருமை எளிதில் உணர முடியாது. ஞானத்தால் மட்டுமே   உணர முடியும். அடுத்து அது எங்கிருந்து வந்தது. எங்கு போய் முடிவது என்பது யாராலும் சொல்ல முடியாது. இத்தனையும் இந்த பாடலில் உண்டு.

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே
என்னே”


இறைவன் ஜோதி பிழம்பாகத் தன்னைக் காட்டிய திருநாள் திருக்கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஞானமலையாக  விளங்குகின்ற திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

* கார்த்திகை  விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள  கோவிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு உபவாசம் இருக்க முடியாதவர்கள்  பால் பழம் அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம். கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். தெய்வத் துதிகளையும் பாமாலைகளையும் ஜபிக்க வேண்டும். காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பூஜையறையில் உள்ள தூசுகளையும் அழுக்குகளையும் அகற்றி, பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக்கொள்ள வேண்டும். மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு, அகல்விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்ற வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் நம் பூஜை அறையில் பூஜை முடித்து தீபாரா தனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் அன்று அரிசி  உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி, நிவேதனங்கள் சாப்பிடலாம்.

* என்ன பாடலாம்?

தீபம் பற்றிய ஸ்லோகங்களையும் பாடல்களையும் பாடலாம். சிவபெரு மானை மனமுருகித் தரிசிக்கும்போது, நிச்சயம் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே”


இதுபோன்ற சிவபெருமான் பாடல்களைப் பாடியபடியே தீபங்கள் ஏற்றுவது மேலும் நன்மைகள் தரும். இந்தச்  ஸ்லோகத்தை சொல்வதும் நல்லது.சக்தி வாய்ந்தது. எளிமையானது.

தீப ஜோதி பரப்பிரம்மம்; தீப ஜோதி
ஜனார்த்தனம்;
தீபோமே ஹரது பாபம்; தீபம் ஜோதி
நமோஸ்துதே.


* ஞானம் பெற ஒரே வழி விளக்கிடுவதுதான்

“துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்; விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்!” என்கிறது தேவாரம். ஞானம் பெற ஒரே வழி விளக்கிடுவதுதான் என்கின்றன மறைகள். திருக்கோயிலில் சுவாமிக்கு நாம் நேரடியாகச் செய்யும் ஒரே தெய்வக் கைங்கர்யம் விளக்கிடுவதுதான். அகத்தில் தோன்றும் மெய்ஞ்ஞான விளக்கே ஈசனின் கழலை அடைய உதவும் என்று திருமூலரும் வலியுறுத்திக் கூறுகிறார்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலு மாமே”


அதாவது விளங்கிக் கொண்ட விளக்கத்தில் இருந்து விலகி, மெய்ஞ்ஞான பரம் பொருளை நம்முள் தூண்டி விளக்கேற்றி, சிவ ஒளிக்குள் ஆன்மா எனும் சீவ ஒளி விளங்கும்படி செய்து வழிபட்டால் சகலத்தையும் விளக்கும் ஈசனின் கழலை அடையலாம் என்கிறார் திருமூலர். பல சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தி மாலையில் லட்ச தீப திருவிழா நடத்துவார்கள்.

* ஆன்ம குறியீடு


பொதுவாகவே தீபம் என்பது மங்கலத்தைக் குறிக்கும். தீபம் ஏற்றாமல் நாம் எந்தக் காரியத்தையும் தொடங்குவதில்லை. கார்த்திகை மாதத்தில் தீபம் என்பது ஒரு அடையாளம் தானே தவிர, எல்லா நாள்களும் எல்லா மாதங்களும் நமக்கு திருக்கார்த்திகை தினம் தான். கார்த்திகை என்பது சுடர் ஒளி விஞ்சிய நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசிக்கும் நிறைமதி நாள் தான் மாதத்தின் பெயராக அமைந்திருக்கிறது.

ஜோதிடத்தில் கார்த்திகை என்பது சூரியனுக் குரிய நட்சத்திரம். சூரியன் தான் இந்த பூமியில் சுடர்விடும் ஒரே தீபம். அந்த தீபத்திலிருந்து தான் மற்ற தீபங்கள் (கிரகங்கள்)ஒளி பெறுகின்றன. அதிகாலை சூரியன் உதிப்பதை நாம் விடிந்து விட்டது என்கிறோம். நாளின் துவக்கம் என்கிறோம். எனவே சூரியனின் எழுச்சியை நினைவு கூறும் விழா தான் கார்த்திகை தீபம். அது ஒரு உன்னதமான ஆன்ம விடியலின் குறியீடு. உள் சுடரின் ஒளியீடு.

* அக்னியே பரம்பொருள்


பரம்பொருள் அக்னி ரூபமாகவே இருக்கிறான். எங்கும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நம் ஆன்மாவில் ஒளிவிடும் ஜோதியாக இருக்கின்றான். அந்த ஜோதியை உணர்வதே ஞானம். உணர முடியாததே இருட்டு எனும் அஞ்ஞானம். அந்த இருட்டை மாய்த்து பரம்பொருளை உணர வைப்பதே தீபம். ஒரு தீபம் ஏற்றினால் அது எல்லா திசையிலும் ஒளி பரவி நிற்கும். பரம்பொருளும் அப்படித்தான். அவன் கருணையும், ஆற்றலும் எல்லாத் திசையிலும் பரவி நிற்கும்.

* சந்திரனின் நீசம் போக்க தீபம் ஏற்ற வேண்டும்

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். ஐப்பசி அமாவாசையில் அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன் அவரோடு இருப்பார். நீசம் பெறும் அந்த சூரியன், பலம் பெறுவதற்காக, தீபத்தை ஏற்றி, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம் கார்த்திகை மாதத்தில் சூரியன் தன்னுடைய நீச ராசியை விட்டு நட்பு ராசியான விருச்சிகத்தை அடைகிறார்.

அவர் விருச் சிகத்தில் பிரவேசிக்கும் மாதமே கார்த்திகை மாதம். ஆனால் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் அடைகிறார். சூரியன் நீசத்தை நீக்க தீபமேற்றியது போலவே, சந்திரனின் நீச தோஷத்தை நீக்க விருச்சிக மாதமாகிய கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும். இதன்மூலம் மனோ காரனாகிய சந்திரன் இருள் விலகி பிரகாசிக்கிறார்.

* பரணி தீபமும், கார்த்திகை தீபமும்

சந்திரன் இருள் நீங்கி பிரகாசிக்கிறாரா என்றால், ஆம்; பிரகாசிக்கிறார். கார்த்திகையில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று, சந்திரன் நீசம் பெறும் விருச்சிகத்தில் சூரியன் இருக்க, அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன், தன்னுடைய உச்ச ராசியான ரிஷபத்தில் இருக்கிறார். அவர் ரிஷபத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்றுகிறோம்.

அதற்கு முன்னால் ரிஷப சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றுகிறோம். அவர் ரிஷப ராசியில் தனது சொந்த நட்சத்திரமான ரோகிணியில் இருக்கும் வேளையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றுகிறோம். அதுவும் சந்திரன் இருக்கும் ரிஷப லக்ன வேளையில் தீப மேற்றுவது விசேஷமானது என்று ஆகம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

* வெவ்வேறு கால நிர்ணயம்

கார்த்திகை தீபத்திருநாள் வேளையை சைவர்களும் வைணவர்களும் வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கின்றனர். ஆனால், திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் என்பது பொது விசேஷமாகவே இருக்கிறது. சிவாலயங்களில் சந்திர உதயமான வேளையில் பௌர்ணமி இருக்கும் காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர். வைணவத்தில் சூரிய வேளையில் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் இருக்க வேண்டும். இதிலும் இரண்டு அமைப்புகள் உண்டு.

பாஞ்சராத்திர தீபம், வைகானச தீபம் என்று சொல்லுவார்கள்.  பாஞ்சராத்திரிகளுக்கு சூரியன் இருக்கும்பொழுது பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் சூரிய உதய காலத்தில் ரோகிணி நட்சத்திரமும் பௌர்ணமியும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கார்த்திகை நட்சத்திரமும் பிரதமையும் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு அமைப்பு இருக்கும் போது பாஞ்சராத்ர தீபத் திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

* இருபத்தியோரு தலைமுறையினருக்கு முக்தி


‘திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது. ‘இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும். குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளியதாக பாடல் உள்ளது. அந்தப் பாடல்:

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலைநுனியிற் காட்ட நிற்போம்….
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’


* வைணவத்தில் கார்த்திகை சிறப்பு

இனி வைணவ மரபில் கார்த்திகை தீபத்தைப் பற்றிய சிறப்பு காண்போம். கார்த்திகை மாதம் என்பது துவாதச மூர்த்திகளில்   தாமோதரனை வழிபடும் மாதம். இந்த மாதத்தில் தாமோதரனை வழிபட்டால் பல நூறு யாக பலன்கள் செய்த புண்ணியம் கிடைக்கும். கார்த்திகை மாதம் திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியாரும் அவதரித்த மாதம்.

கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமான ஏகாதசி கைசிக ஏகாதசி. திருக்குறுங்குடி என்ற திருத்தலத்தில் நம்பாடுவான் சரித்திரம் அன்று இரவு நாடகமாக நடத்தப்படும். திருச்சித்ரகூடம் என்னும் தலத்தில் கோவிந்தராஜ பெருமாளுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் கார்த்திகை மாதத்தில் நடைபெறும்.

* விளக்கொளி பெருமாள் அவதாரம்


வைஷ்ணவ ஆகமத்தில் திருக்கார்த்திகை மாதத்தை தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காரணம், பெருமாள் தீபப் பிரகாசராக அவதரித்தார் என்று சொல்வார்கள். காஞ்சியில் திருத்தண்கா பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்று பெயர்.  “என்னை ஆளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே” என்பது ஆழ்வார் பாசுரம். திருத்தண்கா என்பது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தான் வேதாந்த தேசிகர் அவதரித்தார்.

அவருக்கு அங்கே தனியாக ஆலயம் உண்டு. ஒருமுறை பிரம்மா யாகம் செய்யும்போது, அசுரர்கள், மாயா சக்தியினால் யாகம் செய்ய முடியாத அளவுக்கு இருட்டை ஏற்படுத்தினார்கள். ஆகையினால் யாகம் நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டது. அப்பொழுது பிரம்மன் பிரார்த்திக்க, யாகம் நிறைவேறும் படியாக பெருமாள் தீபப்பிரகாசராகத் தோன்றினார். தாயாருக்கு மரகதவல்லி என்று பெயர். இது நடந்தது கார்த்திகை மாதம் கார்த்திகையில் என்பதால் அந்தத் தாயாருக்கும் பெருமாளுக்கும் தீபம் ஏற்றி கொண்டாடுவார்கள்.இதனை அனுசரித்து வைணவர்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள்.

* ரிஷப லக்னத்தில் தீபமேற்ற வேண்டும்

கிருத்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் நிறைந்த சாயங்கால வேளையில் வீடுகளிலும் கோயில்களிலும் மாட்டுக் கொட்டகைகளிலும் தீப மேற்றுவது உத்தமம். அதுவும் சுக்கிரனுடைய ரிஷப லக்ன வேளையில் தீபம் ஏற்ற வேண்டும். ரிஷப ராசி என்பது மகாலட்சுமிக்கு உரிய சுக்கிரனுடைய ராசி. அங்கே சூரியனுக்குரிய கார்த்திகை நட்சத்திரமும் சந்திரனுக்குரிய ரோகிணி நட்சத்திரமும் செவ்வாய்க்கு உரிய மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளன.

இதில் சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் ரிஷப லக்கின நேரத்தில் தீபமேற்றுவது உத்தமம் என்று ஆகம விதி சொல்லுகின்றது. காரணம் விருச்சிகத்தில் இருக்கும் சூரியன் ரிஷப லக்னத்தை பார்ப்பார். அந்த ஆஸியில் சந்திரன் உச்சம் பெறுவார். சகல எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பூர்த்தியாகும். ஆகையினால் ரிஷப லக்னத்தில் தீபமேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

* சொக்கப்பனை

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி எல்லா தேவாலயங்களிலும் நடைபெறும். பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நடுவார்கள். அதில் சில அடி உயரத்திற்குப் பனை யோலைகளைக் கூம்பு போன்று கட்டி அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்சமூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படும். அதன் பின் பஞ்சமூர்த்திகளைச் சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

பின்னர் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள். எரிகின்ற சொக்கப்பனை அக்கினி மய லிங்கமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது. “தூய்மைக்கு சொக்க” என்று பெயர். தூய்மையான தங்கத்தை சொக்கத்தங்கம் என்று சொல்கிறோம். தூய்மையானது அக்னி. எந்தப்பொருளை போட்டாலும் அக்னி தூய்மை கெடாது. தூய்மையுள்ள இறைவனை அமலன் என்கிறோம். அவர்தான் சொக்கப்பனை. சொக்கப்பனையில் எரிதழலாக சொக்கப்பனை தரிசனம் செய்கிறோம்.

* பனை மரத்துக்கு வேறு என்ன விசேஷம்?

கார்த்திகை தீபத்தில் பனை மரம் மற்றும் பனை ஓலைகளை மட்டுமே சொக்கப்பனையாக கொளுத்துவதில் சில விஷயங்கள் உண்டு. விருட்சங்களில் மிகச்சிறந்த விருட்சமாக பனை மரம் கருதப்படுகிறது. அதனை பூலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் என்று அழைப்பார்கள் காரணம் பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவதை காணலாம். மேல் கூரைக்கு பனை மரம், பனை ஓலை பயன்படுத்தினர்.

பனை மரம், உச்சி முதல், பாதம் வரை, 801 பயன்களைத் தருகிறது, என்பது தான் ஆச்சரியம் தரும் புள்ளிவிவரம். பல ஆலயங்களில் பனை மரம் ஆலய விருட்சமாக இருக்கிறது. காகிதம் இல்லாத அந்தக் காலத்தில் இலக்கியங்களையும், மற்ற செய்திகளையும் எழுதி வைக்க பனை ஓலைதான் பயன்பட்டது. அந்த பனை ஓலைச் சுவடிகளில் எழுதி வைக்கப்பட்ட இலக்கியங் களைத் தேடித்தான் உ.வே. சா போன்ற தமிழ் அறிஞர்கள் பல ஊர்களுக்கும் தேடிச் சென்றனர். தமிழை காத்துத்தந்தது பனை ஓலைகள் தான்.

* அகல் விளக்கு - உண்மைகள்

நாம் தினசரி பூஜைகளை விளக்கேற்றித் தான் இறைவனை வணங்குகின்றோம். என்றாலும்கூட விளக்கேற்றும் வைபவத்துக்கென்று ஒரு உற்சவம் கார்த்திகை உற்சவம். இதில் மக்கள் தங்கள் வீடுகளில், மாலை நேரத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அகல் விளக்கு என்ற வார்த்தையை ஆய்வு செய்தால் நமக்கு சில அற்புதமான உண்மைகள் தெரியவரும். மண்ணால் செய்யப்பட்ட விளக்கை அகல் விளக்கு என்று சொல்லுகின்றோம். அந்த மண் விளக்குகளைத் தான் நிறைய ஏற்றுகிறோம். இந்த விளக்கு ஏற்றுவதன் மூலமாக இருட்டு அகல்கிறது. மாயை அகல்கிறது.

கவலைகள் அகல்கின்றன. இப்படி இருட்டையும் துன்பத்தையும் கவலையையும் அகலச் செய்கின்ற விளக்கு என்பதால் இதனை “அகல் விளக்கு” என்று சொல்கின்றோம். இறைவனை வணங்கி ஒரு விளக்கேற்றி வைத்தால், எப்பேர்பட்ட துன்பங்களும் விலகி ஒரு நல்ல வெளிச்சம் மனதிற்கு கிடைக்கும் என்பதுதான் அகல் விளக்கின் தத்துவம். ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்’’ என்றும், ‘‘பொய் இருள் அகல நெய்விளக்கு ஏற்றி’’ என்றும் பாடி வைத்தார்கள். இடராழி நீங்கவே சுடர் ஆழி ஏற்றினேன் என்பது ஆழ்வார் வாக்கு.

* திசையும் பலன்களும்

பொதுவாக இந்த இந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு விஷயம்: விளக்கு ஏற்றும் திசை என்பது விளக்கின் முகம் பற்றியதுதான்.  ஆனால் விளக்கின் சுடர் எல்லா திசைகளிலும் பிரகாசிக்கும். நமக்கு அந்த சுடர்தான் முக்கியம். விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அந்தச் ஸ்லோகம் இது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||


‘‘புழுக்களோ, பறவைகளோ, அல்லது ஒரு கொசுவோ, மரமோ, இன்னும் நீரிலும், பூமியிலும் உள்ள ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்கள் பேதமின்றி யாரானாலும் இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் தீர்ந்து, இன்னொரு பிறவி எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம். இந்த திருக்கார்த்திகை தீபத்தின் போது எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும் துன்பம் என்னும் இருள் அகலவும், புதுவழி பிறக்கவும் தீபம் ஏற்றுவோம்.

தொகுப்பு: அனந்த பத்மநாபன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?