×

இந்த வார விசேஷங்கள்

3-12-2022 - சனிக்கிழமை  வைதரணி விரதம்

இன்று ஸ்மார்த்த கைசிக ஏகாதசி விரதம். பெருமாளுக்குரிய ஏகாதசி விரதம். விரதம் இருந்து துளசி மாலை சாற்றி தாயாரையும் பெருமாளையும் பூஜிக்க வேண்டும். இன்று அவசியம் கன்றுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேண்டும்.

இந்த மாதம் வளர்பிறை ஏகாதசியில் கோ பூஜை செய்வதை வைதரணி விரதம் என்பார்கள். இதன் மூலமாக வைதரணி நதியை கடக்க வேண்டிய தோஷம் போய்விடும். பாவங்கள் தீரும். வைதரணி நதி என்ற சொல் கருடபுராணத்தில் வருகிறது. பொதுவாக பாவங்கள் என்பது நமது தீய செயல்கள். அதன் விளைவும் தீயதாக இருக்கும். ஒரு மனிதன் வாழும் பொழுது என்னென்ன பாவங்களை செய்கிறானோ, அந்த பாவங்களுக்கான தண்டனைகள் எல்லாம் இறைவன் வழங்குவதாக கருட புராணம் எடுத்துரைக்கிறது. எந்தெந்த பாவத்திற்கு எந்தெந்த தண்டனைகள் கிடைக்கும்? என்பதும் கருட புராணத்தில் மிகவும் சுவாரசியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரு மனிதன் இறந்த பின்பு யமலோகம் செல்லும் வழியில் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக கருட புராணம் கூறுகிறது. அதில் வைதரணி எனும் நதி குறித்தும் வருகிறது. வைதரணி நதி என்பது மிகவும் மோசமான ஒரு நதி ஆகும். ரத்தமும், சீழும், கலந்திருக்கும் இந்த நதியில் வித்தியாசமான பயங்கர பிராணிகளும், ஜந்துக்களும் வாழ்ந்து கொண்டிருக்கும். பாவம் செய்தவர்கள் இதில் கிடந்து தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும்.

இதை போன்ற பாவங்களுக்கு பிராயசித்தம் தான் ஏகாதசி முதலிய விரதங்கள். அதில் ஏகாதசி விரதம் இருந்து, கோ பூஜை செய்யும் தினம் இன்று. இதன் மூலம் ஒரு பசுவின் வாலை பிடித்து வைதரணி நதியைக் கடந்து விடலாம்.

5-12-2022 - திங்கட்கிழமை சோமவார விரதம்

கார்த்திகை மாதத்தில் வளர்பிறை பௌர்ணமியை ஒட்டி வருகின்ற திங்கட்கிழமை. பல சிவாலயங்களில் சோம பிரதோஷம் விரதம் நடக்கும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். சோம பிரதோஷ விரதத்தில் கலந்து கொண்டு சோமசூக்த பிரதட்சணம் செய்வது நன்று.  

சோம சூக்த பிரதட்சணம் செய்யும் முறை:

முதலில் நந்திகேஸ்வரர் கொம்புகள் வழியாக சிவலிங்க தரிசனம் செய்துவிட்டு அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் சந்நதி வரை சென்று, அவரை வணங்கி பிறகு பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் கோமுகி (நிர்மால்ய தொட்டி) யைக் கடக்காமல் தரிசித்து, அப்படியே வந்த வழியே திரும்பி மீண்டும், நந்தியின் கொம்புகள் வழியே சிவலிங்கத்தை தரிசித்து, மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நதி வரை சென்று, அவரை தரிசனம் செய்து, மீண்டும் அப் பிரதட்சணமாக வலம் வந்து, சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் தொட்டியைக் கடக்காமல், அப்படியே வந்த வழியே திரும்பி, மீண்டும் முன் செய்த மாதிரியே செய்து இறைவனை வழிபட வேண்டும்.

இவ்வாறு மும்முறை வலம் வந்து வழிபாடு செய்வதே சோம சூக்த பிரதோஷ காலத்தின் முறை. இதைச் செய்வதன் மூலம் பாவம் நீங்கும். மனதில் நிம்மதி வரும். இன்று அனங்க திரயோதசி தினம். அனங்க என்ற சொல் அங்கம் இல்லாத மன்மதனைக் குறிக்கும். ரதி மன்மதனை விரதமிருந்து வணங்குவதன் மூலமாக சுப காரியங்கள் எளிதில் நடக்கும். திருமணத்தடைகள் விலகும். தம்பதியர்களின் ஒற்றுமை ஓங்கும்.

7-12-2022 - புதன்கிழமை  திருமங்கையாழ்வார் அவதார தினம்

இன்று கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். திருமங்கையாழ்வார் அவதார தினம். அவர் சீர்காழிக்கு அருகில் திருக்குறையலூரில் அவதரித்தார். சீர்காழி அருகே திருநகரியில் அவருடைய எழில் உருவத்தையும் அவர் பூஜை செய்த சிந்தனைக்கினியான் என்ற திருநாமமுடைய பெருமாளையும் இன்றும் நாம் காணலாம். இவருக்கு தனி சந்நதி உண்டு. தனி கொடி மரம் உண்டு. கார்த்திகையில் இவருடைய அவதார உற்சவம் நடைபெறும்.

முதல் உற்சவத்தை கார்த்திகை உற்சவம் என்பார்கள். இவர் ஞானம் பெற்ற உற்சவ தினமான பங்குனி உத்திர தினத்தில் இரண்டாவது உற்சவத்தை ஞான உற்சவ திருவிழா என்று சொல்வார்கள். திருவேடுபறி உற்சவம் என்பார்கள். இன்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கார்த்திகை தீபத் திருநாளை வைகானச ஆகம சாஸ்திரப்படி அனுஷ்டிப்பார்கள்.

8-12-2022 - வியாழக்கிழமை  ஸ்ரீபாஞ்சராத்ர தீபம், திருப்பாணாழ்வார் அவதார தினம்

இன்று பாஞ்சராத்ர தீபத் திருநாளாக கொண்டாடுவார்கள். மூன்று நாட்களும் தீபமேற்றினாலும் இன்றைய தினம் பாஞ்சராத்ர ஆகம வைணவக் கோயில்களுக்கு திருக்கார்த்திகை தீபத் திருநாள். பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். மூன்று உலகங்களையும் அளந்தபின், மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பினார். அப்போது மகாபலியின் யாகமும் தடைபட்டது. கார்த்திகை மாதம் பாஞ்சராத்திர தீபம் அன்று தீபங்கள் ஏற்றுவதன் மூலமாக மகாபலியின் யாகம் நிறைவேறும் அதன் பலன் எல்லோருக்கும் கிடைக்கும்.

அது மட்டுமில்லை பெருமாளே விளக்கொளி பெருமாளாக ஜோதி ஸ்வரூ பமாக பிரம்மனின் யாகத்தைப் பூர்த்தி செய்வதற்காக தோன்றிய நாள் என்பதால் எல்லா இடங்களிலும் விளக்கு ஏற்றுகிறார்கள். அது தவிர இன்று ரோகிணி நட்சத்திரமாக இருப்பதால் திருப்பாணாழ்வார் அவதாரத் திருநாள் ஆகும். திருப்பாணாழ்வார் அவதார தினத்தை பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். குறிப்பாக இவர் அவதரித்த நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயிலில் இவருக்கு விசேஷமான உற்சவம் நடைபெறும்.

ஸ்ரீரங்கத்தில் மிக விரிவாக இந்த உற்சவம் நடைபெறும். இன்றைய தினம் திருப்பாணாழ்வாரை நினைத்து வணங்குவதன் மூலமாக பெருமாள் பக்தி மனதில் விருத்தியாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.

Tags :
× RELATED சுந்தர வேடம்