அறிவைப் பெருக்கி நினைவாற்றல் கூட்டும் அஜவதனா

அறிவைத் தூண்டி ஆற்றலைப் பெருக்கும் தெய்வமாக இருப்பவள் யோகினி அஜவதனா. இவள் பைரவரின் சேனா கணத்தில் இருக்கும் 64 யோகினிகளின் கணத்தில் ஒருத்தியாக இருக்கிறாள். இவள் வித்தைகளின் அதிபதி, போரில் வல்லவள், அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்குபவள் என்று புகழப்படுகிறாள்.

போர் என்றதும் நமக்கு ஆடுகளும் சேவற்கோழிகளும் நினைவிற்கு வருகின்றன. இந்த இரண்டுமே முருகனோடு தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. மூர்க்கத்தனமாக சண்டையிடும் விலங்குகளில் முதன்மை பெற்றது செம்மறியாடு. அக்னி தேவன் செம்மறியாட்டை வாகனமாகக்கொண்டிருப்பதுடன், செம்மறியாட்டின் வடிவமாகவும் இருக்கிறான். அக்னியின் வாகனம் செம்மறி ஆடேயாகும்.

உலகம் செயல்பட அடிப்படையாக இருப்பது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டாகும். இந்த எட்டு வடிவங்களாகவும், எட்டுப் பொருட்களில் நிறைந்தவனாகவும் இருப்பவன், சிவபெருமான். இந்த எண்பொருட்களில் நிறைந்திருக்கும் சிவ வடிவங்களை அஷ்டமூர்த்தங்கள் என்பர். முருகனடியார்களும் இந்த எண்பேர் உருவங்களைப் போற்றுவதுடன், முருகப் பெருமான் அவற்றின் வடிவாகவும், அவற்றில் நிறைந்திருப்பவனாகவும் கூறுகின்றனர்.

இவ்வகையில் அக்னியின் வடிவாக விளங்கும் முருகனுக்கு `அக்னி ஜாதர்’ என்பது பெயர். அவர் ஆடு வாகனத்தில் பவனி வருகிறார். இவரை யக்ஞங்களின் தலைவராகப் போற்றுகின்றனர். சிவபெருமானை மதியாது யாகம் செய்து தலையை இழந்தவன் தட்சப் பிரஜாபதி. சிவபெருமானின் ஆணைப்படி, அவனை அழித்த வீரபத்திரன், பிறகு அவனுடைய உடலில் யாகப் பசுவாக வரிக்கப்பட்டிருந்த செம்மறி ஆட்டின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்தான். அதுமுதல் தட்சன் ஆட்டுத்தலையுடன் வீரபத்திரரின் கணாதிபனாக இருக்கின்றான்.

வீரபத்திரர் வடிவங்களில் ஆட்டுத் தலையுடன் கூடியவனாக இருக்கும் தட்சனின் வடிவமும் சேர்த்தே அமைக்கப்படுகிறது. இதுபோல், ஆட்டுத்தலையுடன் கூடிய யோகினி ஒருத்தியையும் காண்கிறோம். இவளைக் `அஜவக்த்ரா’ என்கின்றனர். இவள் வேள்விகளைக் காப்பவள். அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்வாள். அறியாமையை அகன்றோடச் செய்பவள். இங்குள்ள படத்தில் அஜவக்திரா என்ற யோகினியைக் காண்கிறோம். இடது கரத்தில் தண்டத்தை ஏந்தியுள்ள இவள் வலது கரத்தில் ஞானப்பழம் இருக்கிறது.

அதை இவளது வாகனமான அன்னம் சுவைத்து மகிழ்கிறது. ஞானப் பறவையாகப் போற்றும் அன்னத்திற்கு இவள் பழம் ஊட்டுவதாக இவளது திருக்கோலம் இருக்கும். அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்பவள். அதனை வளர்த்து மேன்மைப்படுத்துபவள் என்பதையும் குறிக்கிறது என்கின்றனர். ஆட்டுத்தலையுடன் விளங்கும் இந்த தேவியைத் தொழுவோம்.

அறிவையும், ஞாபகசக்தியையும் மேம்படுத்தி, துணை நிற்குமாறு இவளிடம் பிரார்த்திப்போம். எல்லோருடைய அறிவின் பயனையும், ஆக்கத்திற்குப் பயன்படும்படி செய்யுமாறு இவளிடம் வேண்டுவோம். இந்த யோகினிக்கு வட இந்தியாவில் கோயிலிருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும், இந்த யோகினியின் பெயரை உச்சரித்து வேண்டிக் கொண்டாலே போதும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுவாள்.

தொகுப்பு: பூசை. ஆட்சிலிங்கம்

Related Stories: