மகா சாஸ்தா ஐயனார் ஐயப்பன் வாகனங்கள் என்னென்ன?

சிவ விஷ்ணு குமாரனாகத் தோன்றிய மகா சாஸ்தாவுக்கு சிவபெருமான் பூதகணங்களை அளித்து அவரைக் காவல் தெய்வமாக ஆக்கினார். இந்திரன் அவருக்கு நூறு ஆனைகளை அளித்தான். அதனால் அவர் சதவாகனன் என்னும் பெயர் பெற்றார். அது முதல் அவர் ஆனை மேல் பவனி  வருபவராக இருக்கிறார். சாஸ்தா காவல் தெய்வமாக இருப்பதால் குதிரையும் அவருக்கு வாகனமாக இருக்கிறது.

சாஸ்தாகோயில் முற்றத்தில் பெரியதாக யானை குதிரை வடிவங்களைச் செய்து வைக்கின்றனர். இந்த இடம் யானையடி குதிரையடி என்று அழைக்கப்படுகின்றன. சாஸ்தாவுக்கு யானை வடிவங்களை நேர்ந்துகொண்டு காணிக்கையாக அளிக்கின்றனர். ஐயனார் கோபுரங்களில் குதிரைகளை அளிக்கும் வழக்கம் உள்ளது.

உண்மைப் போர் வீரனாக விளங்கி வீரசொர்க்கம் புகுந்த ஐயனாருக்கு குதிரையும் யானையும் ஊர்திகளாக இருக்கின்றன. அவர்கள் புலிகளை வாகனமாகக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் வளர்த்த புலிகள் அவர்களுடன் இருக்கின்றன. அத்துடன் அவர்களின் நாய்களும் இருக்கின்றன. ஐயப்பன் வழிபாட்டில் அவர் அரசகுமாரராக இருந்ததால் குதிரை ஏற்றத்திலும் கேரளத்திற்கே உரிய யானை வளர்ப்பிலும் பெரிதும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

அவருக்கு குதிரையும் ஆனையும் வாகனங்களாக அமைகின்றன. என்றாலும் நடைமுறையில் அவர் புலிவாகனத்தில் பவனி வருபவராகவே போற்றி வழிபடுகின்றனர். இந்திரனே புலியாக வந்து அவருக்கு வாகனமாக இருந்தான் என்று புராணம் கூறுகின்றது. சபரிமலை ஐயப்பனுக்கு (இடபமும்) காளையும் வாகனமாகும். பழைய ஐயப்பன் பாட்டுக்களில் உதயன் என்ற பயங்கரமான கொள்ளைக்காரனை அழிக்கப் பெரும் படையை கொன்று கடுத்தை என்னும் தனது படைத்தலைவன் தலைமையில் அனுப்பினார். அவர்கள் பெரிய ஆரவாரத்துடன் சென்றனர்.

அப்போது பெரிய காளைமீது அமர்ந்து உருத்திர சிவன்போல பகவான் ஐயப்பன் ஒரு மேட்டில் நின்று அந்த படையைக் கண்டார். அந்த காளை நின்ற இடமே காளைக்கட்டி என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இதனால் காளையும் அவருக்கு வாகனமாயிற்று. ஆரியங்காவில் நடைபெறும் திருமண விழாவில் ஐயப்பன் காளை வாகனத்திலும் புஷ்களா தேவி பூஞ்சப்பரத்திலும் வலம் வருகின்றனர்.

ஐயப்பனுக்கு யானை காளை குதிரை புலி ஆகியவை வாகனமாக இருக்கின்றன. சபரிமலையில் அவருக்கு சர்வாபரண அலங்காரம் செய்யும் வேளையில் தங்கத்திலான யானையையும். புலியையும் உடன் வைக்கின்றனர். ஐயனாருக்கு உரிய விழாக்களில் குதிரை எடுப்பு என்பதும் ஒன்றாகும்.

குலாலர்களைக்கொண்டு சுடுமண்ணால் குதிரை வடிவங்களைச்செய்து வண்ணம் தீட்டி மாலை சூட்டி வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆலய முற்றத்தில் வைப்பர். பலரும் சேர்ந்து கொண்டு குதிரைகளைத் தலையிலும் தோளிலும் தூக்கிக் கொண்டு வலம்வருவது கண்ணிறைந்த காட்சியாகும். இது தவிர வசதி மிக்கவர்கள் பெரிய வடிவிலான குதிரைகளை ஐயனார் ஆலயமுற்றத்தில் சுதையால் செய்து நிலைப்படுத்துகின்றனர்.

படங்கள்: ஆர். கே. லட்சுமி

Related Stories: