இந்த வார விசேஷங்கள்

26-11-2022 - சனி மூர்க்கநாயனார் குருபூஜை

63 நாயன்மார்களில் மூர்க்கநாயனார் ஒருவர். அடியார்களில் சாதுவான அடியார்களும் உண்டு. முரட்டுத்தனமான செயல்களால் பக்தி செலுத்தும் அடியார்களும் உண்டு. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அவர்கள் மனதில் விஞ்சி நின்ற பக்தியை மட்டும்தான். அடியார்களின் செயல்முறைகளை ஆராய்வதைவிட, அவர்களுடைய மனதில் அழுத்தமாக வெளிப்படும் சிவபக்தியையும், சிவநெறியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய நிலையை உள்ளபடி புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

நம் நிலையிலிருந்து அவர்கள் நிலையை ஆராய்வதும் தவறாகவே முடியும். மூர்க்கநாயனாரின் கதையும் அப்படிப்பட்டதுதான். தொண்டைமண்டல நாட்டில் திருவேற்காடு என்னும் தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் மூர்க்கநாயனார். நிறைய நிலபுலன்கள் அவருக்கு இருந்தன. சிவனடியார்களை வணங்குவதும் அவர்களுக்கு அமுது படைப்பதும் என சிவத்தொண்டில் அவர் மிகுந்த ஊற்றத்தோடு இருந்தார். அதனால் அவருடைய கைப்பொருள் கரைந்தது.

இனி வேறு வழி இல்லை என்றதும், தான் கற்ற சூது மூலம் பொருள் திரட்டி, தொண்டுகள் விடாது புரிந்துவந்தார். உள்ளூரில் வழியில்லாது அதற்காகவே அவர் குடந்தைக்குச் சென்றார். இதை பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

தொல்லுழவர், நற்சூதர், சூது வென்று

கொண்டபொருள் கொண்டன்

பர்க் கமுதளிக்குங்

கொள்கையினார், திருக்குடந்தை குறுகியுள்ளார்,

விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

வெகுண்டி டலான் முர்க்கரென விளம்பு நரம

மெணடிசையு மிகவுடையா, ரண்டர் போற்று

மேழுலகு முடனாளு மியல்பி னாரே.

அவருடைய ஒரே இலக்கு சிவனடியார்களை பூஜிப்பதும், சிவநாமத்தை இடை விடாது உச்சரிப்பதும். சிவனடியார்களை அவமதிக்கும் எந்தச் செயலை யார் செய்தாலும், அவர் கடுமையாக நடந்து கொள்வார் என்பதால் மூர்க்க நாயனார் என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் அடியார்கள் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சுந்தரர், தம் திருத் தொண்டத்தொகையில், “மூர்க்கற்கும் அடியேன்” என்று இவருடைய மூர்க்க தன்மையையே பெருமையாகக் குறிப்பிட்டார். அவருடைய குருபூஜை, கார்த்திகை மூலநட்சத்திரம் இன்று. நற்சூதர் என்று இவரை சைவநெறி சார்ந்த அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

26-11-2022 - சனி தொழில்துறை வியாபார விருத்திக்கு அபியோக திருதியை

பொதுவாகவே  வளர்பிறை திருதியை திதி மிகவும் விசேஷமானது. மங்கலகரமானது. திருதியை  தினத்தில் எது செய்தாலும் அது மிகச்சிறப்பாக விருத்தியடையும் என்று ஜோதிட  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் அட்சய திருதியை அன்று  நாம் பல பொருள்களை வாங்குகிறோம். பல செயல்களை தொடங்குகின்றோம். வாங்கிய  பொருளும் தொடங்கிய செயலும் வளரச் செய்யும் கார்த்திகை மாதத்தின், இந்த திருதியை ``அபியோக திருதியை’’ தினமாகும்.

சிலர் ``ரம்பா திருதியை’’ என்றும்  சொல்கிறார்கள். இன்று அம்பாள் படத்தை வைத்து பூஜித்து மாலையில்  விளக்கேற்றி, அம்பாளின் ஸ்தோத்திரங்களையும் பாடல்களையும் சொல்லி வழிபட  வேண்டும். இந்த வழிபாடு யோக பலன்களை விருத்தி செய்யும். தொழில்துறை  மேம்படும். வியாபார விருத்தி உண்டாகும். திடீர் தலைமைப் பதவி போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும்.  

27-11-2022 - ஞாயிறு சிறப்புலிநாயனார் குருபூஜை

நிலையற்ற பொருளைக் கொண்டு நிலைபெற்ற பொருளாக மாற்றும் புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி. சுந்தரர், “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று குறிப்பிடும்படியான மிகப் பெரிய வள்ளலாக வாழ்ந்தவர் சிறப்புலிநாயனார். எல்லா ஆலயங்களிலும் திருமடங்களிலும் கார்த்திகை பூராடத்தில், அவருடைய குருபூஜை தினம் நடக்கிறது. திருக்கடையூருக்கு பக்கத்தில் பூம்புகார் அருகே ஆக்கூர் என்ற ஒரு ஊர் உள்ளது.

அந்த ஊர் ஈஸ்வரனுக்கு தான்தோன்றீஸ்வரர் என்று பெயர். தான் தோன்றீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென் கரைத் தலங்களில் 46-வது சிவத்தலமாகும். இந்த தலம் மீது சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவநாயனார் பாடிய பாடல் பதினோராம் திருமுறையிலும் உள்ளது. இந்த தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தகு பெருமை பெற்ற ஊரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் சிறப்புலிநாயனார்.

நாள்தோறும் தவறாது ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதியும், தம்முடைய குலவழக்கப்படி வேள்விகள் செய்து, அதனுடைய பயனை சிவனார்க்கே அர்ப்பணமும் செய்தார். சிவபூஜை செய்வதிலும், சிவனடியார்களுக்கு அமுது படைப்பதிலும் உற்றம் சுற்றம் இணைந்து செயல்பட்ட அவர், ஒருமுறை ஆயிரம் அடியார்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தோடு இருந்தார்.

பல்வேறு இடங்களில் இருந்து அடியார்கள் இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்து கொள்வதற்காக ஆக்கூர் வந்து சேர்ந்தார்கள். அவர் எண்ணிப் பார்த்தார். 999 அடியார்களே இருந்தார்கள். ஒரு அடியார் வந்தால் பூஜையைத் தொடங்கிவிடலாம் என்று காத்திருந்தார். இவருடைய ஊற்றத்தையும் வைராக்கியத்தையும் கண்ட தான்தோன்றீஸ்வரர் தாமே, இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என்று வயதான சிவனடியார் வடிவில் வந்து சேர்ந்தார்.

அதனால், அந்த ஊர் ஈஸ்வரனுக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற திருநாமமும் உண்டாயிற்று.

திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்

சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்

அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்பரானார்க்கு

அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்

பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்

பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்

கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த

கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.

இத்தகு பெருமை பெற்ற சிறப்புலி நாயனார் குரு பூஜை தினம் இன்று.

27-11-2022 - ஞாயிறு யோகப் பலன்களை அளிக்கும் பதரி கௌரி விரதம்

சுக்லபட்ச சதுர்த்தி திதி விரதம் இது. `பதரி’ என்பது இலந்தைமரத்தைக் குறிக்கும். வடநாட்டில் பத்ரிகாஸ்ரமம் என்று ஒரு தலம் உண்டு. 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்று. இலந்தை மரங்கள் இங்கே அதிகம். இங்கே பகவான், தானே நாராயணனாகவும் நரனாகவும் இருந்து திருமந்திர உபதேசம் செய்தான் என்பார்கள். ஆனால், இன்றைய விரதம் அம்பாளுக்கானது.

அம்பாளை இன்றைய தினம் வழிபாடு செய்வது மிகச் சிறந்த யோகப் பலன்களை அளிக்கும். அம்பாளை இலந்தை மரத்தடியில் ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். இலந்தைப் பழங்கள் நிவேதனம் செய்து, தானும் சாப்பிடவும். பிறகு குழந்தைகளுக்கும் கொடுக்கவும். இதனால் சிறந்த அறிவு (ஞானம்) கிட்டும். இறுதியில் ஆத்ம தர்சனம் கிடைக்கும்.

28-11-2022 - திங்கள்  பாவத்தை தீர்க்கும் பஞ்சமி தீர்த்தம்

தற்சமயம், 20.11.2022 முதல் திருப்பதியில், அலர்மேல்மங்காபுரம் என்று அழைக்கப்படும் திருச்சானூரில், கார்த்திகை மாத தாயார் பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. தாயார் இங்குள்ள ஒரு பெரிய தடாகத்தில் அலர்ந்த தாமரைப்பூவில் கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் (ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) அவதரித்த தினம் கார்த்திகை வளர்பிறை பஞ்சமி என்பதால், பஞ்சமி தீர்த்தம் விசேஷமாக கொண்டாடப்படும்.அதனை ஒட்டி பிரம்மோற்சவம் நடக்கிறது. தினசரி காலையிலும் மாலையிலும் தினம் ஒரு வாகனம் சேவை மாடவீதிகளில் உலா வருவதும் நடந்து இன்று தீர்த்தவாரி நடைபெறும். திருமலை பிரம்மோற்சவத்தைப் போலவே இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கே கூடுவது கண் கொள்ளாக் காட்சி ஆகும்.

28-11-2022 - திங்கள் திருமணத் தடை போக்கும் நாகபஞ்சமி

இன்று நாக பூஜா பஞ்சமியாக இருப்பதால், நாக தேவதைகளை வணங்குவது சிறப்புடையது. நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில், நாகதேவதை பிம்பங்களை பாலாபிஷேகம் செய்து வணங்குவது, நாகதோஷத்தை நீக்கும். குறிப்பாக திருமணத் தடை, குழந்தை பிறப்பு தடை முதலிய தடைகள் நீங்குவதற்கு நாகபஞ்சமி விரதம் இருந்து நாக தேவைகளை வணங்குவது நல்லது.

இந்த வழிபாடு செய்வதற்கு ராகுகாலம் நல்ல நேரம் என்கிறார்கள். புற்றுக் கோயில்கள், கருங்கல் நாக பிரதிஷ்டை இருக்கும் கோயில்களில் பால், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். வீட்டில் நாகர் விக்கிரகம் வைத்திருந்தால் அதில் அபிஷேகம் செய்தும் வழிபடலாம்.

28-11-2022 - திங்கள் வெற்றியைத் தரும் சோம சிரவணம்

மாதமும் கிழமையும் இணைவது ஒரு சிறப்பு. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிப்பார்கள். அதைப்போலவே, திங்கட்கிழமையும் திருவோண நட்சத்திரமும் இணையும் நாள், விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும்.

திங்கட்கிழமை திருவோண நட்சத்திரம் வருவதால், அந்த நாளை `சோம சிரவணம்’ என்று கொண்டாடுவார்கள். உப்பிலியப்பன் கோயில், திருமலை முதலிய திருவோண நட்சத்திர வழிபாடு சிறந்த தலங்களில், மிகச் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

29-11-2022 - செவ்வாய்  சகல தோஷம் போக்கும் சம்பக சஷ்டி

இன்றைய செவ்வாய் பல்வேறு சிறப்பு களோடு கூடியது. முருகனுக்குரிய சஷ்டி தினம். ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” மந்திரத்தை ஓதி, ஆறாவது திதியான சஷ்டி திதியில் முருகனை வணங்கினால், பேறு தப்பாது என்பார்கள். நினைத்த எண்ணம் நிறைவேறும். கார்த்திகை மாத சஷ்டி அதாவது வளர்பிறை சஷ்டி, சம்பக சஷ்டி, சுப்பிரமணிய சஷ்டி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இன்றைக்கு விரதமிருந்து முருகப் பெருமானை வணங்க வேண்டும். இன்று சப்தமி விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி `சூரிய விரதம்’ என்னும் விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

Related Stories: