காவலாக வருவாள் காளியம்மன்

நம்ப ஊரு சாமிகள்

அச்சங்குட்டம், திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் ஊரில் கோயில் கொண்டுள்ள காளியம்மன். தன்னை தொழும் அடியவர்களுக்கு காவலாக வருகிறாள்.

தாரகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாக தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக் கூடாது என்றான். பிறக்கும் எல்லா உயிருக்கும் இறப்பு உண்டு என்றார் அவர். அப்படியானால், மணமுடிக்காத இளம் மங்கை, அகோர முகத்தோடு, ஆடை அணிகலனின்றி என்னோடு யுத்தம் செய்து என்னை வீழ்த்த வேண்டும் என்று கேட்டான் தாரகாசுரன். எந்தப் பெண் ஆடைகளின்றி ஆண்கள் முன் வருவாள்.

அப்படி இருக்கையில் யுத்தமா, நினைத்துப் பார்க்கவே முடியாது. எனவே இப்பிறப்பில் தனக்கு மரணமே நேராது என்று மனதிற்குள் நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்தார். வரம் பெற்ற தாரகாசுரன். தேவர்கள் உட்பட ஏனைய உயிர்களுக்கு எண்ணிலடங்கா துன்பத்தை விளைவித்தான். அவனது ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவன் அருகே இருந்த உமையாளை பார்க்க, உமையவள் தன் மேனியிலிருந்து தனது சாயலுடன் ஒரு சக்தியை உருவாக்கினாள். அவளே அனல் கொண்ட பார்வையும், ஆங்கார ரூபமும் கொண்ட காளி தேவியானாள்.

தாரகாசுரனை அழிக்க புறப்பட்டாள். தாரகாசுரன், சண்ட, முண்டனை காளியோடு யுத்தம் செய்ய அனுப்பினான். அவர்கள் காளியோடு யுத்தம் புரிந்தனர். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்த பின் வெற்றி அடைந்தாள். ஆனால் அவனை வெற்றிகொண்ட பின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. காளியின் உக்ரத்தினால் அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகினார்கள். அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிர பாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டு கோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக்காட்சி தந்தார்.

அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப்போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்துகொள்ள அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.

பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள். போட்டியில் தோற்றுப் போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்துத் தேவர்களும், மகா விஷ்ணுவும் பிரம்மாவும் ஒன்றுசேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக்கொண்டனர்.

பிரம்மா அங்கேயே அமர்ந்துகொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஓதி அவளை பூஜிக்க அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரம்ம சாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்த நாயகி ஆகி அதே இடத்தில் இன்னொரு சந்நதியில் சென்று அமர்ந்தாள். ஆக அந்த ஆலயத்தில் ஒரு சந்நதியில் உக்ர காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும், இன்னொரு சந்நதியில் சாந்தமான நான்கு முக பிரம்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள். காளி அங்கிருந்து பல தலங்களுக்கு சென்று வந்தாள்.

திருவிளையாடல் நிகழ்த்தி கோயில் கொண்டாள். திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் அருகே சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துமலை ஜமீனில் கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்த ஒருவர், தனக்கு சொந்தமான காலி மனையில் சுரண்டையிலிருந்து குடிபெயர்ந்த ஒரே இனத்தைச் சேர்ந்த ஐம்பது பேர்கொண்ட பங்காளிகள் வீடு கட்டி வசிக்க நிலத்தை கொடுத்தார். அந்த நிலத்தில் அவர்கள் வீடு கட்ட நாள் பார்த்து பணியை தொடங்குகின்றனர். அப்போது தோண்டப்பட்ட இடத்திலிருந்து எலுமிச்சை ஒன்று கிடைக்கிறது. அதை எடுத்த அவர்களில் ஒருவர் அருள் வந்து ஆடினார்.

அப்போது நான் காளியம்மன் என்றும் எனக்கு இங்கே நிலையம் போட்டு பூஜை கொடுத்த பின் உங்களது வேலையை தொடங்குங்க. நான் துணையிருப்பேன் என்கிறார். அதன்படி சுட்டமண்ணால் பீடம் எழுப்பி காளியம்மன் நாமம் கூறி அழைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் வீட்டுக்கு ஒரு பனைஓலை என வசூலித்து ஒலையால் கோயில் கட்டினர். கோயிலில் துர்கா தேவிக்கும், மாரியம்மனுக்கும்  பீடங்கள் அமைக்கப்பட்டன. சுயம்புவாக பைரவர் பீடம் உருவானது. வாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். ஒருமுறை அங்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

குடிக்க தண்ணீர் இன்றி கடும் வறட்சி உருவானது. நெடுந்தூரம் சென்றும் தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டனர். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த மாடக்கண்ணு என்பவர் கனவில் தோன்றிய காளியம்மன் எனது சந்நதிக்கு அருகே தோண்டினால் வற்றாத நீர் கிடைக்கும் என்றாள். அதன்படி அங்கு தோண்டினர். பன்னீர் போன்ற தெளிந்த தண்ணீர் கிடைத்தது. எந்த கோைடயிலும் இந்த கிணறு வற்றுவதில்லை. கிணறை விட சிறிய அளவில் இருக்கும் நீர் நிலையை குட்டை என்று அழைப்பது உண்டு. அந்த குட்டை அருகே சென்றால் சிறுதூறல் விழும். மலையாளத்தில் தூறலை கச்சம் என்று சொல்வதுண்டு.

அவ்வாறு கச்சம்குட்டை என்று அழைக்கப்பட்டதே பின்னர் கச்சங்குட்டம் என்றும் அது மருவி அச்சங்குட்டம் என்றும் இப்பகுதி அழைக்கப்படலாயிற்று. இந்த கிணற்றுத் தண்ணீரே கோயிலுக்கு சக்தி தீர்த்தமாக உள்ளது. இந்த நிலையில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த கண் பார்வை இல்லாத குத்தாலிங்கம் என்பவரின் கனவில் வந்த காளியம்மன்  ஊரில் எல்லைப்பகுதியில் ஓரிடத்தில் எனது ரூபம் கொண்ட சிலை மண்ணில் புதைந்து உள்ளது. அதை எடுத்து வந்து பூஜை செய்யுங்கள் என்று கூறினார். உடனே பதறி எழுந்த குத்தாலிங்கம் நடுராத்திரி என்றும் பாராமல் கம்பு ஊன்றி நடந்து அருகே இருந்த செல்லத்துரை என்பவரது

வீட்டிற்கு வந்தார்.

அவரிடம் தான் கனவு  கண்டதை கூறினார். ஆனால் அவர் நம்பவில்லை. இதனால் விரக்தி அடைந்த குத்தாலிங்கம் அய்யாதுரை என்பவரிடம் கூறினார். அவர் தனது மாட்டு வண்டியில் குத்தாலிங்கத்தை அழைத்து சென்றார். கனவில் கண்ட இடத்தை அடையாளங்களுடன் குத்தாலிங்கம் சொல்ல, சொல்ல அந்த இடத்திற்கு இருவரும் பயணமாகினர். புளியங்குடி அருகேயுள்ள சோழ நாத்திபக்கம் வடக்கிலிருந்து நாலாவது பாத்தியில் தோண்டுங்கள். காளியம்மன் இருக்கிறாள் என்று கூறினார்.

அதன்படி தோண்டிய போது மூன்றடி உயரத்தில் காளியம்மன் சிலை இருந்தது. அந்த நேரம் அம்மா என்று கத்தினார் குத்தாலிங்கம். ஆம். அவருக்கு காளியின் அருளால் பார்வை கிடைத்தது. அந்த சிலை தற்போது மூல ஸ்தானத்தில் உள்ளது. திருவிளையாடல் நடத்தி கோயில் கொண்ட அச்சங்குட்டம் காளியம்மன் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு எப்போதும் காவலாக வருகிறாள். இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடக்கிறது.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Related Stories: