×

அறங்கள் காக்கும் காஞ்சிபுரம் மாசாத்தான்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முக்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மை பெற்றதான காஞ்சி புரத்தில் மகா சாஸ்தா எனப் படும் மாசாத்தன் வழிபாடு சிறப்பாக இருக்கிறது. காஞ்சியில் அவர் சிவ வழிபாடு செய்து மேன்மை பெற்றதாக காஞ்சிப் புராணம் கூறுகிறது. அவர் வழிபாடு செய்த சிவாலயம் காஞ்சிபுரத்தில் மாசாத்தன் தளி என்னும் பெயரில் உள்ளது.அமுதம் வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் விஷம் வந்தது. அதை சிவபெருமான் ஏற்று மணிகண்டரானார். இறுதியில் அமுதம் வந்தது. அதை அடைவதில் தேவர்களும் முனிவர்களும் போட்டியிட்டனர்.

திருமால் மோகினியாகத் தோன்றி  தேவர்களுக்கு அமுதத்தை அளித்த அசுரர்களை ஏமாற்றி விட்டு பின் எஞ்சியதை இந்திரலோகத்தில் வைத்தார். அந்த வேளையில் சிவபெருமான் மோகினியைத் தழுவினார். அதன் விளைவாக ஆற்றல் பெற்ற பிள்ளை ஒருவன் செண்டாயுதத்துடன் தோன்றினான். அவனுக்கு மாசாத்தன் என்று பெயர் சூட்டினர். அவன் சிவபெருமானை வணங்கி தனக்கு அருள்புரிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.

அவர் ‘‘காஞ்சிபுரம் சென்று என்னை வழிபடுக’’ என்றார். அதன்படியே காஞ்சிபுரம் வந்த மாசாத்தன் பிரம்மசாத்தனான முருகனை வணங்கி அவர் அருள் பெற்று சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தான். சிவபெருமான் அவன் வழிபட்ட லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அனைத்து தேவர்களின் முன்னிலையில் அவனுக்கு உலகைக் காவல் கொள்ளும் ஆணையைத் தந்து பூதகணங்களுக்கு அதிபதியாகப் பட்டம் சூட்டினர். அவனிடம் அன்னை பராசக்தியை வணங்கி அவளது ஆலயத்திற்குக் காவலாக இருக்குமாறு ஆணையிட்டார். அவன் அமைத்து வழிபட்டுப் பேறுபெற்ற சிவலிங்கத்திற்கு அமைந்த ஆலயம் அவன் பெயரால் ‘‘மாசாத்தன் தளி’’ என்று அழைக்கப்படுகிறது.

சாத்தனார் தான் வழிபட்ட மாசாத்தான் தளியில் இருப்பதோடு கச்சபேஸ்வரர் ஆலயத்திலும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்திலும் வீற்றிருக்கின்றார். காமக்கோட்டம் என்று புராணங்கள் போற்றும் ஆலயம் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயமாகும். இங்கு அன்னை பராசக்தி காமாட்சி என்னும் பெயருடன் அமர்ந்து 32 அறங்களையும் ஓயாது வைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கும் அவளது தர்மச் செயலுக்கும் காவலனாக மகா சாஸ்தா வீற்றிருக்கிறார்.

காமாட்சி அம்மன் வீற்றிருக்கும் கருவறையின் பின்புறம் திருமாளிகை பத்தியில் உள்ள சந்நதியில் பெரிய வடிவினதாக தர்ம சாஸ்தா அமர்ந்திருக்கிறார். இவருக்கு எதிரில் பெரிய யானை வடிவம் உள்ளது. இவரைத் தமிழ் இலக்கியங்கள் பெரிதும் போற்றுகின்றன. கரிகால் பெருவளத்தான் என்னும் சோழப் பேரரசன் காமக்கோட்டத்தில் இருக்கும் இந்த மாசாத்தனை வணங்கினான். அவனுக்கு மாசாத்தன் தன் செண்டாயுதத்தை அளித்தார். அதனைக்கொண்டு அவன் இமயத்தை அடித்து வெற்றி கொண்டான் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

இதனை,
கச்சிவளை கைச்சிக் காமகோட்டம் காவல்
மெச்சி இனிதிருக்கும் மெய்ச் சாத்தான் கைக் செண்டு
கம்பகளிற்று கரிகால் பெருவளத்தான்
செம்பொன் கிரிதிரித்த செண்டு


 - என்னும் தனிப்பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள பெரிய சிவாலயங் களில் கச்சபேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இது திருமால் ஆமை வடிவத்துடன் இருந்து வழிபட்ட தலம். இங்கு ஆலயத்தின் உள்ளே பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. இதனை இஷ்ட சித்தி தீர்த்தம் என்பர். அதன் வடகரையில் இஷ்டசித்தீசுவரர் ஆலயம் உள்ளது. இது கார்த்திகை மாதத்தில் நீராடுவதற்குரிய தீர்த்தமாகும். ஞாயிற்றுக்கிழமை களில் இதில் மூழ்கி இஷ்ட சித்தீசுவரரையும் ஜோதிர்லிங்க வடிவமாகத் திகழும் கச்ச பேஸ்வரரையும் வழிபடுவோர் வேண்டிய செல்வங்களை விரும்பியபடி அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்தக் குளத்தின் கிழக்கே பெரிய முற்றம் உள்ளது. அதில் சூரியன், பைரவர், விநாயகர், மகா சாஸ்தா, துர்க்கை ஆகிய ஐவருக்கான சிறிய ஆலயங்கள் இருக்கின்றன. ஐந்து ஆலயங்களில் சங்கமமாக (சந்நதியாக) இருப்பதால் இந்த இடம் பஞ்ச சந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் பெயரால் இங்குள்ள விநாயகர் பஞ்சசந்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு மூல ஆலயத்தின் உள்மதிலில் ஈசான திக்கில் அமைந்துள்ள மாடத்தினை வளர்த்திக் கட்டி சிறிய சந்நதியாக்கியுள்ளனர். இதில் பூரணை புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றிருக்கிறார். இவர் அறிவின் வடிவமாகப் போற்றப்படுகிறார். இவரை வணங்க அளவில்லாத ஆற்றலைப் பெறலாம்.

தொகுப்பு: பூசை. அருணவசந்தன்

Tags : Kanchipuram ,Maasatan ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை...