விடுவிக்கக் களம் இறங்கும் கடவுள்

(விடுதலைப் பயணம் 3:1-12)

விடுதலைப் பயணம் 3:1-12 வரை அடங்கிய பகுதி கடவுளைப் பற்றிய மனிதரின் புரிதலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று ஆகும். அதுவரை கடவுள்,படைப்பு, பாவம் , இரட்சிப்பு, மோட்சம், நரகம் என்ற சிந்தனைகளே கிறிஸ்தவர்களை ஆதிக்கம் செய்து வந்தன. இப்பகுதி கடவுளை விடுதலையாளராகவும், ஒடுக்கப்பட்டவர் மற்றும் ஏழைகளின் கடவுளாகவும் புரிந்துகொள்ள உதவியது.

திருவிவிலியத்தில் முதல் ஆகமம் என்று கூறப்படும் பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதிகளை நாம் இஸ்ரவேல் மக்களின் சமய-அரசியல் வரலாறாகத்தான் (Religio-Political History) பார்க்க வேண்டும். இஸ்ரவேல் மக்களுக்கு அடிமைத்தனம் வெளி சக்திகளிடமிருந்து வந்திருந்தாலும் அல்லது உள்ளுக்குள்ளே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் இரண்டையும் எதிர்ப்பவராகவே கடவுள் உள்ளார்.

அடிமைகளின் அழுகுரல் கேட்டு களமிறங்கிய கடவுள்.

கடவுளை யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதல்ல, கடவுள் யாரைத் தம் சொந்தமென நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். கடவுள் எகிப்தில் அடிமைகளாக்கப்பட்டு, வதைக்கப்பட்ட எபிரேய அடிமைகளை ‘‘என் மக்கள் (My People) என்று சொந்தம் கொண்டாடுகிறார். பெரும்பாலும் ஆட்சியாளர்கள், அதிகாரம் வகிப்பவர்கள் மற்றும் செல்வந்தர்களே கடவுளின் அருள்பெற்றவர்களாகக்  கருதப்படுவர். ஆனால் இங்கு இழப்பதற்கு அடிமைச் சங்கிலியைத் தவிர வேறு ஏதுமில்லாத அடிமைகளே கடவுளின் அருள் பெற்றவர்களாகின்றனர்.

அடிமைகளை விடுவிக்கக் களமிறங்கிய கடவுள். ‘‘எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம் அவர்களின் துயரங்களை அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும்... அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். (விடுதலைப் பயணம் 3:7-8).

பஞ்சகாலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது எகிப்தில் குடியேறிய இஸ்ரவேலர்கள் ஒரு காலகட்டத்திற்குப் பின் எகிப்தியர்களால் அடிமை

களாக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் பெற்றிருந்த உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. இந்த நிலை சுமார் 430 ஆண்டுகள் நீடித்தது. அவர்களின் துன்பநிலையைக் கண்ட கடவுள் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்து சுதந்திர நாட்டுக்கு அழைத்துச் செல்ல களம் இறங்குகிறார். இன்றும் இத்தகைய சூழல் நிலவும் எல்லா இடங்களிலும் கடவுள் தமது விடுதலைச் செயல்பாட்டை தொடர்கிறவராகவே இருக்கிறார்.

ஒருங்கிணைதல், போராட்டத்தின் வழி விடுதலை. அடிமைப்பட்டு இருக்கும் மக்களின் சமுகப்,பொருளாதார, அரசியல் விடுதலையைக் கடவுள் மாய மந்திர செயல்களால் அளிப்பவர் அல்ல. மாறாக அடிமைப்பட்டு இருக்கும் மக்களை எழுச்சி பெறச் செய்து, அவர்களை ஒருங்கிணைத்து, போராட்டத்தின் வழியே தான் அவர்களை விடுவிக்கிறார். அடிமைப்பட்டு இருக்கும் மக்கள் விடுதலை பெறத் தீர்மானித்து, போராட்டங்களை நடத்திப் பெறும் விடுதலைதான் சாத்தியமானது மற்றும் நிலையானது என்பதைக் கடவுள் அறிந்திருந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் மக்களின் தலைமை, பெண்களின் பங்கு. ஒரு நாட்டில் அடிமைப்பட்டு இருக்கும் மக்களை விடுவித்து அனுப்ப எந்த அரசனும் விரும்பமாட்டான். அவர்களின் விடுதலைப் போராட்டங்களை வன்முறை மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தி ஒடுக்குவான்.  எகிப்து நாட்டில் இஸ்ரவேலருக்கும் இது தான் நடந்தது. இத்தகைய சூழலில் கடவுள், வயது முதிர்ந்து பக்குவமடைந்திருந்த மோசேயை விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்க அழைக்கிறார்.

மோசேயும் தமது பொறுப்பை உணர்ந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். எந்த விடுதலையும் பெண்களின் பங்கேற்பு இன்றி சாத்தியமில்லை. இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் போராட்டக் களத்தில் இருந்திருப்பார்கள். அவர்கள் அனைவரின் பிரதிநிதிகளாக மோசேயின் தாயார், மோசேயின் சகோதரி மிரியாம், பார்வோன் குமாரத்தி, அரசாணையை மதிக்காத

எபிரேய மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா மோசேயின் மனைவி  சிப்போரா முதலியவர்களைக் குறிப்பிடலாம்.

சமகால வரலாற்றில் கூட இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் ஜெர்மன்நாட்டு இராணுவப் படைகளை வீழ்த்த சோவியத் யூனியன் நாட்டுப் பெண்கள் நேரடியாகப் போர்க்களத்திலும், தொழிற்சாலைகளிலும், மருத்துவப் பணிகளிலும் பணிபுரிந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. ஆம்! கடவுள் விடுதலைப் போராட்டங்களில் களமிறங்கி மக்களோடு சேர்ந்து தொடர்ந்து போராடுகிறார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related Stories: