×

இந்த வார விசேஷங்கள்

5-11-2022 - சனிக்கிழமை சனிப் பிரதோஷம்

திரயோதசி திதியும் சனிக்கிழமையும் இணைந்து வந்தால் அதனை மகா பிரதோஷம் என்கிறார்கள். சனிக்கிழமை ஸ்திர வாரம் என்பதால் சனிக்கிழமை பிரதோஷம் மிகுந்த பலன் தரக் கூடியது. அசையாத ஸ்திரமான பலன்களைத் தரக்கூடியது.  சனி பிரதோஷ விரதம் இருந்து சிவாலயத்தை தரிசனம் செய்தால், ஆயிரம் சாதாரண பிரதோஷத்தைத் தரிசனம் செய்த பலனைத் தரும் என்கிறார்கள். மாலை சிவாலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலமாக சகல பாவங்களும் தீரும்.

இன்றைய பிரதோஷத்தில் இன்னுமொரு விசேஷம் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே பிரதோஷம் வருகிறது. இதனால் சனியால் ஏற்படக்கூடிய கிரக தோஷங்கள் விலகும். ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனி முதலிய சனிதோஷங்களும், சனிதிசை பாதிப்பும் இன்றைய பிரதோஷ சிவாலய தரிசனத்தால் விலகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கோயிலுக்குச் செல்லும்பொழுது ஏதேனும் ஒரு பூவோ பழமோ அல்லது விளக்கு எண்ணெயோ எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

சிவன் கோயிலுக்கு அபிஷேகப் பொருள் தருவது மிகவும் விசேஷம். அபிஷேக காலத்தில் நந்தியை தரிசனம் செய்ய வேண்டும். அப்பொழுது ருத்ர நாம ஜபமும் செய்ய வேண்டும். நந்தியை வழிபட முந்தும் வினைகள் நீங்கும். பெரும்பாலான சிவாலயங்களில் பார்வதி சமேத சந்திரசேகரர் ரிஷப வாகன பிராகாரத்தில் வலம் வருவார். அந்த சுற்றுக்கள் அத்தனையிலும் கலந்து கொண்டு சிவனை வணங்க வேண்டும். அப் பொழுது நடைபெறும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் செவியால் கேட்க வேண்டும். சிவாலய தரிசனம் முடிந்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வைத்து உங்களுடைய பிரதோஷ விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

7-11-2022 - திங்கட்கிழமை சந்திர ஜெயந்தி


இன்று திங்கட்கிழமை. சந்திரனுக்கு உரிய நாள். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். சந்திரன் கெட்டால் புத்தி(மதி) கெட்டது என்பார்கள். ஒருவருக்கு நடக்கக்கூடிய நன்மை தீமைகளைச் சொல்லும் தசாபுத்தி காலங்களை சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் ஜோதிட சாஸ்திரத்தில் நிர்ணயம் செய்கிறார்கள். ஒருவருடைய ராசியை நிர்ணயிப்பது சந்திரன். அவர்கள் பிறந்தபோது சந்திரன் இருந்த வீடுதான் ராசி.

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் சரியாக இல்லாவிட்டாலோ, ராகு, கேது, சனி போன்ற கிரக சேர்க்கையோடு பலமிழந்து இருந்தாலோ அவருக்கு மனச் சஞ்சலங்கள் அதிகமாக இருக்கும். எதிலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சந்திர ஜெயந்தி தினமான இன்று பரிகார வழிபாடு நாள். மற்றவர்களும் செய்யலாம். சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி, வழிபட சந்திர தோஷம் விலகும்.

7-11-2022 - திங்கள் திருமூலர் குருபூஜை

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெட்டு சித்தர்களில் ஒருவருமான திருமூலநாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமூலர் அவதாரத்தலம் ஆடுதுறை பக்கத்தில் உள்ள சாத்தனூர். நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் திருமூலர் வரலாற்றைச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறார்.

திருமூலர் முக்தி பெற்ற தலம் திருவாடுதுறை. அவர் இயற்றிய திருமந்திரம் மிகச் சிறந்த தத்துவ நூல். அதிலே யோக சாஸ்திரம் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது. பல சிவாலயங்களில் திருமூலர் குருபூஜை இன்றைய தினம் நடைபெறும்.

8-11-2022 - செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்

இன்றைய தினம் இவ்வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. பகல் 2.30 மணி முதல் மாலை 6 .19 மணிவரை பரணி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த முழு சந்திரகிரகணம் இந்தியாவில் பகுதி கிரகணமாகச் சந்திர உதயத்தில் மட்டும் தெரியும். கிரகண ஆரம்ப நேரம் பகல் 2 மணி 37 நிமிடம். முழு கிரகண ஆரம்பம் பகல் 3.45 கிரகணம் மத்தியம காலம் பகல் 4 மணி 28 நிமிடம்.

முழு கிரகண முடிவு மாலை 5.11 கிரகண முடிவு மாலை 6.19 இந்தக் கிரகணம் முழு கிரகணமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் ஆரம்பிப்பதாலும், இந்தியாவில் சந்திரன் தெரியாததாலும், பகுதி கிரகணமாக சந்திர உதய காலத்தில் மட்டுமே பார்க்கலாம். அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும். அந்தந்த ஊர் சந்திர உதயத்திற்குப் பின் புண்ணிய காலம் ஆரம்பம். காலை முதல் விரதமிருந்து, கிரகணம் முடிந்த பின்,தர்ப்பண வழிபாடு களை முடித்து  உணவருந்தவும். பௌர்ணமி சிராத்தம் செய்பவர்கள் அடுத்த நாள் செய்யலாம்.

8-11-2022 - செவ்வாய்க்கிழமை நின்றசீர் நெடுமாறன் குருபூஜை


அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான பாண்டியமன்னன் நெடுமாறன். செழியன் சேந்தன் என்கின்ற மன்னனுக்கு குமாரனாகப் பிறந்தவர். கிபி 640 முதல் 670 வரை ஆட்சிசெய்தவர். மாறவர்மன், சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், அரிகேசரி பராங்குசன் முதலிய பட்டப்பெயர்கள் இவருக்கு உண்டு. இவருடைய மனைவி மங்கையர்க் கரசி அம்மையார். சோழ நாட்டைச் சேர்ந்தவர். சைவத்தில் ஊற்றமுடையவர். அரசி மங்கையர்க்கரசியும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர்தான். சமண மதத்தை தழுவிய தன்னுடைய கணவரை எப்படியாவது சைவமதத்திற்குத் திருப்ப வேண்டும் என்று படாத பாடு பட்டவர் மங்கையர்க்கரசி அம்மையார்.  

கூன்பாண்டியனைத் திருத்திப் பணி கொள்ளவேண்டும் என்பதற்காக இறைவன் வயிற்றில் சூலை நோயை கொடுத்து ஞானசம்பந்தப் பெருமானால் சைவ சமயத்துக்கு மடைமாற்றம் செய்யப்பட்டார். இவருடைய சைவசமய ஊற்றத்தினாலும், தொண்டினாலும் பாண்டிய தேசம் முழுக்க இவர் காலத்தில் சைவ சமயம் மிகப் பிரகாசம் அடைந்தது. “நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரர், தம் திருத்தொண்டத்தொகையில் இவருடைய சிவத்தொண்டினையும் சிவபெருமான் மீது கொண்ட அன்பி னையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரம், இன்று.

9-11-2022 - புதன்கிழமை இடங்கழி நாயனார் குருபூஜை


அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் இடங்கழி நாயனார். தில்லையில் உள்ள நடராஜப்பெருமான் ஆலயத்துக்கு பொற் கூரை வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோர்கள் வழியில் அரச வம்சத்தில் பிறந்தவர். வேளீர் வம்சத்தில் பிறந்தவர் என்று சொல்வார்கள். கொடும்பாளூரை தலைநகராகக் கொண்டு வேளிர்குலத் தலைவனாக வாழ்ந்தவர். கொடும்பாளூர் என்பது திருச்சியில் இருந்து விராலிமலை வழியாக மதுரை செல்லும் சாலையில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திப்பில் உள்ள சிற்றூர். ஒருகாலத்தில் பேரூர். ஒருநாள் நாட்டில் பஞ்சம் வந்தது. எங்கும் நெல்மணிகள் கிடைக்க வில்லை.

அந்த ஊரில் சிவனடியார்களுக்கு அன்னம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு அன்பர், சிவனடியார்களுக்கு அன்னம் இடுவதற்காக நெல்மணிகள் கிடைக்காததால், வேறு வழியின்றி அரசனுடைய அரண்மனைக்குள் புகுந்து, அங்குள்ள நெற்களஞ்சியத்தில் இருந்து நெல்லை எடுத்துக்கொண்டு சென்று, சிவனடியார்களுக்கு அன்னம் இட்டார்.  இதை அறிந்த அரண்மனைக் காவலர்கள் அந்த தொண்டரைப் பிடித்து வந்து மன்னன் முன் நிறுத்தினர்.

‘‘ஏன் நெற்களஞ்சியதிலிருந்து நெல்லை கொள்ளை அடித்தீர்?’’  என்று மன்னர் கேட்டார். ‘‘நான் சிவனடியார்களுக்கு மஹேஸ்வர பூஜை செய்து அன்னம் படைக்கும் வழக்கமுடையன். அன்னமிட எங்கும் நெல்மணிகள் கிடைக்கவில்லை. சிவனடியார்கள் வயிறு பசியால் காயும்போது நான் என்ன செய்வேன்? தங்கள் அரண்மனைக்குள் புகுந்து அரண்மனைப் பண்டாரத்தில்  இருந்து நெல்லை எடுத்துச் சென்றேன்’’ என்று சொன்னவுடன் மன்னன், “அந்த நெற்களஞ்சியம் எனக்கு பண்டாரம் அல்ல; இதோ சிவனடியார்களுக்கு அன்னம் படைப்பதே  குறிக்கோளாகக்  கொண்ட இந்த அன்பர் அன்றோ நமக்குப் பண்டாரம் (செல்வம்)’’ என்று சொல்லி அவரைப் போற்றி வணங்கினார்.

தம்முடைய நெற்களஞ்சியத்தில் இருந்த நெல்மணிகளை எல்லாம் எடுத்து ஏழை எளியவர்களுக்கு கொடுத்தார். பல இடங்களில் சிவத்தொண்டு புரிந்து கோயில்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதற்கு மானியங்கள் அளித்தார். சிவத்தொண்டை தன்னுடைய குலத் தொண்டாகக் கொண்ட மன்னன் இடங்கழி நாயனார் குருபூஜை ஐப்பசி கார்த்திகை. இன்றைய தினம்.

தெய்வம் நிவேதனத்தை ஏற்றுக் கொள்கிறதா?

இளைஞர் ஒருவர் மகான் ஒருவரைத் தரிசி்கப் போயிருந்தார். தரிசனம் முடிந்ததும்,‘‘ தெய்வத்திற்கு நிவேதனம்  செய்கிறோம். அதைத் தெய்வம் ஏற்றுக் கொள்கிறதா? அதாவது எடுத்துக் கொள்கிறதா? அப்படித் தெய்வம் எடுத்துக் கொண்டிருந்தால், நிவேதனம் கொஞ்சமாவது குறைந்திருக்க வேண்டும். அது கொஞ்சம்கூடக் குறையாமல்,அப்படியே தான் இருக்கிறது. அப்படியிருக்க, எதற்காக நிவேதனம்  செய்கிறோம்?’’ எனக் கேட்டார். மகான் அமைதியாக,‘‘உனக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?’’ எனக் கேட்டார்.

‘‘தெரியும்! தெரியும்!’’ என அவசர அவசரமாகப் பதில் சொன்னார் இளைஞர். மகான் தொடர்ந்தார்; ‘‘பகவத்கீதையில் ஏதாவது தெரியுமா?’’ எனக் கேட்க, ‘‘தெரியாது’’ என்றார் இளைஞர். ‘‘சரி! இங்கே நூல் நிலையத்தில் பகவத்கீதை இருக்கும். அதை எடுத்துக்கொண்டு  வா!’’ என்றார் மகான்.

இளைஞரும் போய் பகவத்கீதையை எடுத்து வந்தார். ‘‘அதில் உள்ள ‘பரித்ராணாய சாதூனாம்’எனும் ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து கொண்டு வா!’’ என்றார் மகான். இளைஞர் உடனே அங்கிருந்து விலகி,மனப்பாடம் செய்து கொண்டு சற்று நேரத்தில் திரும்பி மகானிடம் வந்தார். வந்ததும் அவரிடம் இருந்த பகவத்கீதை நூலைத் தான் வாங்கிக் கொண்ட மகான்,‘‘ம்! சொல்லு!’’ என நூலைப் பிரித்து வைத்துக்கொண்டார்.

இளைஞர் சொல்லச் சொல்ல, மகான் தன் கையில் இருந்த நூலில் உன்னிப்பாகப் பார்த்து வந்தார். இளைஞர் சொல்லி முடித்ததும், ‘‘பலே! நன்றாகவே சொல்லி விட்டாய்’’ என்று பாராட்டினார் மகான். அதை ஏற்ற இளைஞர், ‘‘நான் நன்றாகச் சொன்னதாக நீங்களே சொல்லி விட்டீர்கள்! ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் விடை சொல்ல வில்லை’’ என்றார் இளைஞர்.

‘‘சரி! இப்போது நீ சொன்னாயே அந்த ஸ்லோகத்தை நீ எங்கிருந்து எடுத்தாய்?’’ என மகான் கேட்க, ‘‘உங்கள் கையிலிருக்கும் நூலில் இருந்துதான் எடுத்தேன்’’ என்றார் இளைஞர். மகான் நூலைப்பிரித்து இளைஞரிடம் காட்டி,‘‘நீ இதிலிருந்து தான் எடுத்தேன் என்கிறாய். ஆனால் இதோ பார்! நீ எடுத்த அந்தஸ்லோகம் இதிலேயே உள்ளது. இதிவிருந்து நீ எடுத்திருந்தால், அந்த ஸ்லோகம் எப்படி இன்னும் இந்த நூலிலேயே இருக்கும்?’’ எனக்கேட்டார் மகான்.

இளைஞனுக்குப் புரிந்தது; ‘பளிச்’சென்று மகானின் கால்களில் விழுந்து வணங்கினான். மகான் அமைதியாகப் பேசத் தொடங்கினார்; ‘‘நீ எப்படி உன் பார்வையாலேயே கிரகித்து-ஏற்றுக்கொண்டாயோ, அதுபோலத் தெய்வமும் நாம் வைக்கும் பிரசாதங்களைப் பார்வையாலே ஏற்கும். எப்படி நீ ஏற்ற பின்னும் அந்த ஸ்லோகம் கொஞ்சம்கூடக் குறையாமல், அப்படியே முழுமையாக நூலில் உள்ளதோ; அதுபோல,தெய்வம் நாம் படைப்பதை ஏற்றபின்னும், அந்த நிவேதனம் அப்படியே முழுமையாக-குறையாமல் இருக்கிறது’’ என்றார்.
- பி.என்.பரசுராமன்.    

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?