×

மலரட்டும் சமரசம்..!

தெருவில் போய்க் கொண்டிருக்கும்போது சர்வ சாதாரணமாக ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம். யாராவது இரண்டுபேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எல்லாரும் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்களே தவிர சண்டையை விலக்குவதற்கோ சமாதானம் செய்து வைப்பதற்கோ யாரும் முன்வர மாட்டார்கள். நம்ம ஆட்களுக்கு சண்டையை ரசிப்பதில் அவ்வளவு ஆர்வம்.

ஆனால், இஸ்லாமியத் திருநெறி மனிதர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துங்கள், சமரசத்தை மலரச் செய்யுங்கள் என்று பெரிதும் வலியுறுத்துகிறது.
சண்டையை மூட்டிவிடுவது ரொம்ப சுலபம். இதையே தொழிலாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். மற்றவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, இன்பம் கொள்ளும் ஒருவித மனநோயாளிகள் இவர்கள். மனைவியிடம் சென்று, ‘‘உன் கணவனை அந்தப் பெண்ணோடு பார்த்தேனே…’’ என்று பார்க்காத ஒரு சம்பவத்தைப் பார்த்தது போல் வர்ணித்து கணவன்-மனைவியிடையே சண்டையை மூட்டுவார்கள்.

அதேபோல் இரண்டு சமூகத்தைச் சேர்ந்த தனிப்பட்ட இரு மனிதர்களின் சண்டையை ஊதிப் பெரிதாக்கி வகுப்புக் கலவரமாய் வெடிக்க வைத்து, அதில் குளிர்காயும் மனிதப் பதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் வளர்க்கும் இது போன்று இழிசெயல்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய குழப்பங்களை உருவாக்குவது கொலையைவிடக் கொடியது என்று கூறுகிறது.

‘‘அமைதி பெறுக! அமைதி தருக!’’ என்பதுதான் மார்க்கத்தின் மகத்தான முழக்கமாகும். ‘‘குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியதாகும். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவராயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது’’ என்கிறது, குர்ஆன். அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்தச் செயலையும் ஓர் இறை நம்பிக்கையாளன் செய்யக்கூடாது.

‘‘இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றொருவருக்கு சகோதரர் ஆவார். உங்கள் சகோதரர்களுக்கு இடையில் தொடர்புகளைச் சீர்படுத்துங்கள்’’ என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது. சிலர் எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கிசுகிசுப் பேச்சுகளில் பெரும்பாலும் எந்த நன்மையும் இருப்பதில்லை என்று இறைமறை அடித்துச் சொல்கிறது. ‘‘மனிதர்களின் பெரும்பாலான ரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கு இடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுகளைத் தவிர’’ (குர்ஆன் 4:114).

ஆகவே, சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல், மோதல் போக்கை வளர்க்காமல் சமாதானத்ைத ஏற்படுத்துவதும் சமரசத்தை மலர வைப்பதுமே வீட்டுக்கும் நாட்டிற்கும் நாம் செய்யும் பெரும் சேவை ஆகும். ஆண்டவனின் கட்டளையும் அதுதான். இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள்’’ (குர்ஆன் 49:9).

மறையட்டும் சண்டைகள்!
மலரட்டும் சமரசம்!


- சிராஜுல்ஹஸன்


இந்த வாரச் சிந்தனை

‘‘மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமரசத்தையும் ஏற்படுத்துவதற்காக ஒருவர் பொய் கூறியிருந்தாலும் அவர் பொய்யர் அல்ல. ஏனெனில் அவர் நன்மையையே செய்திருக்கிறார்’’ (நபிமொழி).

Tags :
× RELATED ஆற்றில் அருளும் அழகர்