×

அறிந்த தலம் அறியாத தகவல்கள்

பேரூர்

கி.மு. முதல் - கி.பி. வரை

பேரூரிலும் அதைச்சார்ந்த வெள்ளலூரிலும் 60-ஆண்டுகளுக்கு முன்னால், ஏராளமான அயல்நாட்டு நாணயங்கள் கிடைத்தன. அவை அனைத்தும் கி.மு. காலம் முதல் கி.பி. வரை அரசாண்டு வந்த ரோமானியர் கால நாணயங்கள். ரோமானியர்கள், அயல் நாடுகளில் பல தூர தேசங்களில் தங்கள் வாணிபத்தைச் சிறப்பாக நடத்திவந்த காலம் அது.

அங்கு ஆண்ட ‘அகஸ்டஸ்’ எனும் அரசர் முதல், நிரோ எனும் மன்னர் காலம் வரையிலான 68-நாணயங்களும், நிரோ முதல் கேரகல்லா (Caraculla) என்ற மன்னர் காலத்து நாணயங்கள் வரை 217-ம் கிடைத்தன. இவற்றைத் தவிர, ‘பைசேண்டியன்’ வம்சத்தைச் சேர்ந்த அரசர்களின் நாணயங்களும் சில கிடைத்தன. ‘பேரூர்’ மிகவும் சிறப்பாக இருந்ததை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் இவை.

கலைகளுக்காக ஒதுக்கியது
 
பங்குனித் திருநாளில், பேரூர் ஆலயத்தில் திருப்பதிகம் பாடுபவர்க்கும், நடனம் ஆடுபவர்க்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. ஒதுக்கியவர் ராஜராஜசோழன் ஆவார்.

பிரசாத பட்டியல்

‘அற்பிசி’ (ஐப்பசி)யிலும் உத்திராடத் திலும், இந்த கோயில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, கூடவே இங்கு வழங்கப்பட்ட பிரசாதங்களையும் பட்டியல் இடுகிறது. கறியமுது, உப்பமுது, மிளகமுது, பருப்பமுது, நெய்யமுது, தயிரமுது, சர்க்கரையமுது, அடைக்காயமுது, இலையமுது என்பவையே அவை. விளக்கெரிக்கவும் திருப்பதிகம் பாடுவதற்கும் நிலங்கள் ஒதுக்கப்படுவதாகவும், அந்தக் கல்வெட்டு விவரிக்கிறது.

ஈடு இணையற்ற சிற்பங்கள்

இங்கே ‘கனகசபை’யில் அற்புதமான சிற்பங்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகவும் நுட்பமான பெரும்பெரும் உருவங்கள், கல்லாலான சங்கிலிகள், கல்லாலான சுழலும் தாமரை, நடனமாடும் பெண்கள் சிலைகள் என அற்புதமான சிற்பங்கள் உள்ளன. எவ்வளவுதான் வர்ணித்து எழுதினாலும், சொன்னாலும் இங்குள்ள சிற்பங்களின் கலை நுணுக்கங்களையோ, அழகையோ விவரிக்க முடியாது.

ஒரு முறையாவது நேரில் பார்த்துத்தான் உணரமுடியும். கலை நுணுக்கங்களை மட்டுமல்லாமல், கல்விப்பாடங்களையும் வெளிப்படுத்துகின்றன இந்தச்சிற்பங்கள். மிகப்பழமையான காலங்களில், ஆண்களும் பெண்களும் அணிந்திருந்த நகைகள், ஆடை வகைகள், தலைமுடி அலங்காரங்கள், விதவிதமான கட்டில்கள், பல வகையான இசைக்கருவிகள், நடனமாடும் பெண்களின் பலவகையான கோலங்கள், கோமாளி வேடம் பூண்டவர்கள் எனப் பலவிதமான வடிவங்களைக் காட்டி, மௌனமாகப் பாடம் நடத்துகின்றன இந்தக் கலைப் படைப்புக்கள்.

இங்குள்ள ‘கிராதார்ஜுனீயம்’ எனும், சிவபெருமான் வேடனாக வந்து அர்ஜுனனோடு போர் புரிந்த வடிவம், பிட்சாடன - மோகினி வடிவம், அபூர்வமான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, கஜ சங்கார மூர்த்தி என பலவிதமான நடனக்கோலங்கள், கலைக்கோவிலாகக் காட்சி அளிக்கும் இடம் இது.

கைப்பற்றுதல்

ராஜத்துரோகிகளின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு, அரசாங்க கஜானாவில் சேர்க்கப்பட்டதாக இங்குள்ள பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இந்தக் காலத்திலும், இப்படிச் சில நடப்பது, அன்றே நடந்திருக்கிறது.
 
பெயர் மாறிப்போன பழமை

பண்டைத்தமிழ் மக்கள் உபயோகப்படுத்தி வந்த பண்டங்கள் முதலானவைகள், அங்கங்கே வைக்கப்பட்டவைகள் பல, இங்கே கிடைத்திருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக்கால கலாசார நாகரிகங்கள் வெளிப்படுகின்றன. அப்படிப்பட்டவைகள் மிகமிகப் பழமையான இடங்களில்தான் அகப்படும். பழமையைப் பறைசாற்றும் அப்படிப்பட்ட இடங்களில் பேரூரும் ஒன்று. இங்கே பூமிக்கு அடியில் மண் பாத்திரங்கள், தட்டு - முட்டுச் சாமான்கள், இடுகாட்டுக் குழிகள் என அகப்படுகின்றன.

இறந்தவர்களின் உடல்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான பொருட்களையும் வைக்கும் ‘முதுமக்கள் தாழி’; பலவகைக் கற்களால் ஆன 3-4 சிறுசிறு அறைகள் எனப் பலவாறாகக் கிடைத்தவைகளை, பேரூரில் இருந்து சித்திரைச் சாவடிக்குப் போகும் வழியில் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பானைகளை வெள்ளலூரிலும், நொய்யல் ஆற்றங்கரையிலும் கண்டெடுத்தார்கள். மாண்டவர்களின் தாழிகள் கிடைத்த அக்குழிகளை, ‘பாண்டவர் குழிகள்’ என மாற்றிச் சொல்கிறார்கள்.

பேய் பிசாசுகளை நீக்கும் திருநீற்று மேடு

பிரம்மதேவர் யாக குண்டம் அமைத்து யாகம்செய்த பூமி இது. அவர் ‘யாக குண்டம்’ அமைத்து யாகம் செய்த இடம் `திருநீற்று மேடு’ என்று அழைக்கப்படுகிறது. பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, காஞ்சி நதியில் நீராடி திருநீற்று மேட்டில் இருந்து திருநீற்றை எடுத்துக் குழைத்து அணிந்தால், தீராத துயரங்கள் தீரும். இதை நாரத முனிவர், பாதிக்கப்பட்ட பாண்டிய மன்னர் ஒருவருக்குச் சொல்ல, மன்னரும் அவ்வாறே செய்து துயரங்கள் நீங்கினார்.

சிவபெருமானே சொன்ன இத்தலத்தின் வேறு பெயர்கள்

விஸ்வாமித்திரர் இங்கு வந்து தவம்செய்து, எண்ணம் நிறைவேறப் பெற்றதால், தவபுரி. ஆனந்தத் தாண்டவம் செய்வதால், மேலைச் சிதம்பரம். வெள்ளிமலையைத் தன்னுள் கொண்டு பாவங்களைத் தீர்த்து முக்தி அருள்வதால், பேரூர், பத்திபுரி; வன்மீக நகரம், ஞான நகரம்; பரம்புரம்; ககனபுரி, போத புரம்; நாட்டிய புரம்; ஆதி புரி; மேரு நகரம்; பிரம்ம நகரம்; குரு க்ஷேத்திரம்; பசுபதி புரம்; இர சத சபை; குந்தகானம்; சிற்சபை; கலியாண புரம்; போதிக்கானம்; தேனுபுரம், பிறவாநெறி எனப் பல திருப்பெயர்கள் பேரூருக்கு உண்டு. சிவபெருமான் பிரம்ம தேவருக்குச் சொன்னது இது.

வில்லும் அம்பும்

மேற்றிசை (மேற்குத்தொடர்ச்சி) மலைத் தொடரில் ஐந்து மலைகள் உள்ளன. வெள்ளியங்கிரி, உமாதேவிகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, மருதவரை எனும் ஐந்து மலைகளும், வளைந்த வில்லைப்போல அமைந்திருப்பதும், அந்த வில்லில் தொடுக்கப்பட்ட அம்பைப்போல, இங்குள்ள காஞ்சிமாநதி ஓடும் காட்சி அற்புதம்! அழகு!

நான்கு யுகங்களில்

இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், கிருதயுகத்தில் விஸ்வநாதர் என்ற பெயரிலும், திரேதாயுகத்தில் அமிர்தலிங்கேசர் என்ற பெயரிலும், துவாபரயுகத்தில் தருமநாதர் என்ற பெயரிலும், கலியுகத்தில் கோட்டீச்சுரர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு, வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

பெருமாள் கோவில்

மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னர், பேரூரில் திருமாலுக்குக் குன்றம் அன்னதோர் பெருங்கோவில் கட்டினார் என்று, ‘ஜடாவர்மன் சாசனம்’ சொல்கிறது.

காஞ்சிவாய்ப் பேரூர் புக்குத்
திருமாலுக் கமர்ந்துறையக்
குன்ற மன்ன தோர் கோயிலாக்கியும்
ஆழி முன்னீர் அகழாக
அகல் வானத் தகடுறிஞ்சும்
பாழி நீண் மதில் பரந்தோங்கும்
பகலவனும் அகல வோடும் (ஜடாவர்மன் சாசனம்)


என அச்சாசனம் கூறுகிறது. அந்த மன்னர் ஒரு பரம வைணவ பக்தர். இவரிடம் மதுரகவியாழ்வார் மந்திரியாக இருந்தாராம். ஆனால், அந்த மன்னர் கட்டிய கோவில் இப்போது இல்லை. பேரூர்க் கோவிலுக்குத் தென் கிழக்கில் உள்ள குளத்தில், முன்பு ஒரு பெரும் விஷ்ணு கோவில் இருந்ததாகவும், அது அழிந்துபோனதால், அதன் மூல விக்கிரகம்தான், இப்போது தெப்பக் குளத்திற்குத் தென்பக்கம் வைத்திருக்கும் ‘லட்சுமி நாராயண விக்கிரகம்’ என்றும் சொல்லப்படுகிறது. மிகப் பழமையான இந்த விக்கிரகத்தைத் தட்டிப் பார்த்தால், வெண்கலம் போல ஓசை எழும். 1292-ல் ஆட்சிசெய்த ஹாய்சள வீர வல்லாளன் காலத்தில், அந்தக் கோவில் இருந்ததாகச் சாசனம் உண்டு.

விசித்திர குளம்

கோயிலுக்கு வடகிழக்கே உள்ள திருக்குளம், 16-மூலைகள் கொண்டதாக ஒரு விசித்திரமான அமைப்புடன் காட்சி அளிக்கிறது. அதன் கீழ்க்கரையில் ‘மாதேச்சரம்’ எனும் ஆலயம் அமைந்துள்ளது.

அமாவாசை சிறப்பு

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை முதலான முக்கிய நாட்களில், சில விசேடத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் கடலில் நீராடி, முன்னோர்களுக்கான பித்ரு தர்ப்பணம் செய்வதுண்டு. ஆனால், இங்கு பேரூரிலோ, ஒவ்வோர் அமாவாசை அன்றும் பலர் இங்கு வந்து, இங்குள்ள ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்கிறார்கள். ‘பிறவா நெறி’ எனும் பெயர்பெற்ற தலமல்லவா? பித்ரு சாபத்தையும் பித்ரு தோஷத்தையும் நீக்கும் திருத்தலம் இது.

பிறவாப்புளி - இறவாப்பனை அதிசயம்

பிறப்பு - இறப்பு என்பவைகளை நீக்கி, முக்தி அளிக்கும் தலம் இது. அதன் காரணமாகவே ‘பிறவா நெறி’ எனப்பெயர் பெற்ற இந்த தலத்தில், இரண்டு தெய்வீக விருட்ச மரங்கள் உள்ளன. ஒன்று ‘பிறவாப்புளி’ மற்றொன்று ‘இறவாப்பனை’. பிறவாப்புளி எனும் இந்த மரத்தின் புளியங்கொட்டைகளை, விதைகளைப் பூமியில் விதைத்தால், அவை முளைப்பதில்லை. பெயருக்கேற்ப பிறவாப்புளியாகவே இருக்கிறது. மற்றொரு மரமான இறவாப்பனையின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத நோய்கள் எல்லாம் தீர்கின்றன. நோயால் இறவாதபடி காப்பதால், இறவாப்பனை எனப் பெயர் அமைந்தது.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Tags :
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்