×

விதியையும் மதியையும் எப்படிப் புரிந்துகொள்வது?

திருவள்ளுவர் போல் ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் சொல்ல மற்றவர்களால் முடியாது. அனேகமாக மனிதகுலம் திருவள்ளுவரையும், திருக்குறளையும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். மேடைகளில் அலங்காரமாகப் பேசாமல், திருக்குறளைப் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் தனது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். திருக்குறள் எல்லாப் பிரச்னைகளையும் அலசி, காரணத்தைச் சொல்லி, பரிகாரத்தையும், அதாவது, தப்பிக்கும் வழிமுறை களையும் சொல்கிறது. திருக்குறளில் சில கருத்துக்கள் முரண்பாடாக இருப்பதாகச் சொல்வார்கள்.

உதாரணமாக, ஊழின் பெருவலி என்று, ஊழ்வினையை வலியுறுத்தும் வள்ளுவர், “எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது, போ” என்று சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தில், “நீ  முயற்சி செய், வினையைத் தூக்கி எறி, முன்னேறு” என்கிறாரே, இது முரண்பாடு அல்லவா என்று கேட்கிறார்கள். அறத்துப்பாலில் கடைசி அதிகாரத்தில் ஊழ்வினையின் தாக்கத்தைச் சொல்கிறார்;

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்


விதியை விட மிக வலிமையான ஒன்று இந்த உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்? சரி, எப்படியாவது முயற்சி செய்து, துன்பத்தை நீக்கிக்கொள்ளலாம் என்று, வெவ்வேறு வகையில் முயன்றாலும், அங்கும் அந்த முயற்சி நிறைவேறாதபடி ஊழ்வினை தானே வந்து முன்னே நிற்கிறது என்கிறார் வள்ளுவர். இந்த ஊழ்வினையின் வேகத்தைச் சொன்னவர், பரிகாரம் குறித்து அறத்துப் பாலில் சொல்லவில்லை. பொருட்பாலில் சொல்லுகின்றார் (அதிகாரம் 52) அறத்துப்பால் கருத்துக்களை அறத்துப்பாலில் எதிர்த்திருந்தால்தான் முரண்பாடு. பொருட்பால் கருத்துக்களில் சொல்லும்போது எப்படி முரண்பாடாகும்? இதில் ஒரு குறள், அதில் ஒரு குறட்பா என்று வைத்துக்கொண்டு பேசுவதால் வரும் முரண்பாடுதான் இது.

விதியையும் மதியையும் எப்படிப் புரிந்துகொள்வது?

சீட்டுக்கட்டில் நமக்கு விழுந்த அட்டைகளின் வலிமை அல்லது வலிமையின்மைதான் அறத்துப்பாலில் சொல்லப்பட்ட ஊழ். நாம் விளையாடுகின்ற விளையாட்டில், திறமைதான் (மதி) பொருட்பாலில் சொல்லப்பட்ட ஆள்வினையுடைமை. நோய் அங்கு சொன்னது. (ஊழ்வினை விதி) நோயின் மருந்து இங்கு சொல்லப்பட்டது. (முயற்சி, திறமை) இப்பொழுது ஜோதிட ரீதியான பரிகாரத்துக்கு வருவோம்.

எல்லாமே செயலின் விளைவுதான். வாழ்வு, தாழ்வு, நோய், ஆரோக்கியம், செல்வம் எல்லாமே வினைகளின் எதிரொலிதான். இதில் இழப்புகள் ஏற்படுவது இயற்கை. இதைச் சரிசெய்வதே பரிகாரம். வெகு காலம் முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். ஒரு குடும்பத்தினர் வியாபாரம் செய்கின்றார்கள். எத்தனையோ கடுமையான முயற்சி செய்தும் அடுத்தடுத்து தோல்வி, பொருள் இழப்பு ஏற்படுகிறது. பல சிரமங்கள்.. என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர்கள் பல ஜோதிடர்களிடம் போனார்கள். பல விதமான பரிகாரங்களையும் செய்தார்கள். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.

கடைசியில் ஒரு அனுபவமிக்க அருமையான ஜோதிடரிடம் வந்தார்கள். ஜோதிடர், அவர்கள் ஜாதகத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்துவிட்டுச் சொன்னார்: “செய்த பரிகாரங்கள் இருக்கட்டும். போட்ட இடத்தில் தேடினால்தான் பொருள் கிடைக்கும். நீங்கள் மிகப்பெரிய ஒரு தவறு செய்து இருக்கிறீர்கள். அந்தப் பாவம், நிழல்போல் உங்களை சுற்றிக் கொண்டு, செயல்படாமல் தடுக்கிறது. இந்த ஜாதகத்தின்படி, உங்களால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம், தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அங்கே தேடிப் போய் பரிகாரம் செய்யுங்கள். பிறகு தெய்வத்திடம் வாருங்கள். மனப் பூர்வமாக நீங்கள் தெரிந்து செய்த அல்லது தெரியாமல் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். ஜோதிடர் இப்படிச் சொன்னதும், அவர் கேட்டார்;

“என்ன தவறு, நான் யாருக்குச் செய்தேன்?”
ஜோதிடர், பொறுமையாகச் சொன்னார்;

“நீங்கள் தனிமையில் யோசித்துப் பாருங்கள். நீங்களோ, உங்கள் தந்தையோ, தாத்தாவோகூடச் செய்திருக்கலாம். முயற்சி செய்து கண்டுபிடியுங்கள். குடும்பத்தினருடன் பேசுங்கள். முடியாவிட்டால், மறுபடியும் வாருங்கள். வேறு தீர்வு குறித்து ஆராய்ந்து பார்க்கலாம்” என்றார். ஆறு மாதம் கழித்து வந்தார்கள். கடந்த மூன்று மாதங்களாகக் குடும்பம் நல்லபடியாக இருப்பதாகவும், வியாபாரம் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

“பரிகாரம் செய்தீர்களா?” என்று ஜோதிடர் கேட்டார். “செய்துவிட்டேன்” என்றார் வந்தவர். ஜோதிடர் கூறியது போல், அவர் தன் குடும்பத்தாருடன் விவாதித்து, தங்கள் குடும்பத்தாரால் ஏதோ ஒரு காலத்தில் பாதிக்கப்பட்ட, ஒரு குடும்பத்தின் நிலைமையை அறிந்து, அந்த குடும்பம் முன்னேற உதவினர். உண்மையான இந்த பரிகாரம் உடனே வேலை செய்தது. நன்மைக்குத் தடையாய் இருந்த பாவம் பரிகாரம் செய்தபின், செயலின் விளைவுகளை மாற்றியமைத்துத் தர ஆரம்பித்துவிட்டது.
அப்படியானால், பரிகாரத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதல்லவா.

ஏன் சில பரிகாரங்கள் வேலை செய்வதில்லை என்பதை ஆராய வேண்டும் அல்லவா? ஒரு உதாரணம் சொன்னால் புரியும். நம் உடம்புக்கு ஒரு நோய் வந்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஜுரம் என்று வைத்துக்கொள்வோம். ஜுரத்தின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உடம்பு கொதிக்கிறது. தலைவலிக்கிறது, வாய் கசக்கிறது, சக்தி இல்லாத நிலை. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

இதற்குத் தீர்வு என்ன?

1. மருத்துவரிடம் செல்வது.
2. நோய் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது.
3. நோயின் தீவிரத்தை படிப்படியாகக் குறைப்பது.  
4. நோயின் பாதிப்பினால் தளர்ந்த உடம்பைச் சீராக்குவது.
5. இனி நோய் வராமல் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது.
6. நோய்க்கு எதிரான வேலையைச் செய்வது அதாவது ஜுரத்துக்கு எதிரான மாத்திரைகளைச் சாப்பிடுவது, உணவுகள் சாப்பிடுவது.
7. ஓய்வெடுப்பது.
8. நோய் அதிகரிக்கச் செய்யும் வேலையைச் செய்யாமல் இருப்பது, அதாவது உப்பு, புளி, காரம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, ஐஸ் போன்ற குளிர்ந்த பொருட்களைச் சாப்பிடாமல் இருப்பது.
9.நோயை அதிகரிக்கும்படியான அலைச்சல், மழையில் நனைவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது.

ஜுரத்துக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டே, வரும் வழியில் மழையில் நனைந்து, காரமான எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களையும், ஐஸ்வாட்டர் போன்ற பொருட்களையும், சாப்பிட்டால் என்ன ஆகும்? மருந்து வேலை செய்யாது. ஜுரம் அதிகமாகும். இதுதான் பரிகார விஷயத்திலும் நடக்கிறது. பரிகாரம் செய்துவிட்டு தோஷத்தை அதிகரிக்கும் பல காரியங்களைச் செய்கின்றோம்.

“அதுதான் கிரகதோஷ பரிகார பூஜை போட்டாயிற்றே, இனி என்ன?” என்கிறோம். அது ஜுரம் போக ஒரு பக்கம் மருந்து (பரிகாரம்) சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைவதைப் போலத்தான் (தொடர்ந்து பாவகாரியங்களைச் செய்தல்) சரியான டாக்டர் கொடுத்த மருந்து நம் தவறான நடவடிக்கையால் மருந்து (பரிகாரம்) வேலை செய்யாமல் போவது இப்படித்தான்.

Tags :
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்