×

வேதாளங்களுக்கு அருளிய வடிவேலன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

செய்யூர்

ஒரு அரசன் தான் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நிலையிலுள்ள அரசவை ஊழியர்களை வைத்திருப்பார். அதுபோல இறைவனின் கட்டளையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்கும் சில சக்திகள் உண்டு. இவ்வாறு ஈசனின் கட்டளையை ஏற்று அவற்றை ஈசனின் அருளுடன் நொடிப் பொழுதில் நிறைவேற்றுபவை பூதகணங்களே.

ஒரு ஜீவன் கயிலைக்கு செல்லும்போது கூட உடன் வந்து அழைத்துச் செல்பவை சிவகணங்களே. ஈசனின் கட்டளைப்படி சம்பந்தருக்கு திருவாவடுதுறை தலத்தில் உலவாப் பொற்கிழியையும், பட்டீஸ்வரம் எனும் தலத்தில் முத்துச் சிவிகையையும் கொண்டு வந்து கொடுத்தவை பூத வேதாள கணங்களேயாம். திருமுருகன்பூண்டியில் சிவபெருமானின் கட்டளைப்படி வேடர்களாக வந்து சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளிடம் திருவிளையாடல் நடத்தியவையும் பூத வேதாளங்களே ஆகும். அப்படிப்பட்ட பூத வேதாள கணங்கள் வணங்கும் தலமே செய்யூர் ஆகும். இத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் வேதாள கணம் புகழ் வேலவன் என்று போற்றிப் பாடுகிறார்.

இங்குள்ள ஆலயத்தை கந்தசுவாமி பைரவர் கோயில் என்றே அழைக்கிறார்கள். மேலும் வேறெங்கும் காணக் கிடைக்காத அரிதாக 27 நட்சத்திரங்களுக்குரிய 27 பூத வேதாளங்கள் முருகனை வணங்கும் கோலத்தை காணலாம். சிவபெருமானின் சேய் ஆன முருகப் பெருமான் அருள்வதால் சேய்  ஊர் என்பது செய்யூர் என்றானது. இதனால் இங்கு வணங்குபவர்களுக்கு சேய் வரம் நிச்சயம் என்கிறார்கள். வளவன் எனும் சோழ மன்னன் ஆண்டதால் வளவாபுரி என்றழைக்கப்பட்டது.

சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்ய உதவிய பைரவரின் பூதவேதாள கணங்கள் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை காண பைரவரிடம் கோரிக்கை விடுத்தனர். பைரவரும் முருகப் பெருமானிடன் பூத வேதாளங்களின் பக்தியையும் அவர்களின் அவாவையும் சொன்னார். முருகப் பெருமான் உளம் மகிழ்ந்து, ‘‘ஆஹா... யானே என் தந்தையாரான ஈசனை அச்சிறுப்பாக்கம் எனும் தலத்திற்கு அருகேயுள்ள சேயூர் எனும் பதியில் அனுதினமும் துதித்து வணங்க உள்ளோம். அங்கு வந்தால் துணைவியரோடு யாம் காட்சி தருவோம்’’ என்று அருளினார்.

பைரவர் மிகவும் மகிழ்ந்து பூத வேதாளங்களைக் கூட்டிக்கொண்டு செய்யூர் வந்தமர்ந்தார். அவர்கள் எல்லோரும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை தரிசித்தனர். அதுமட்டுமல்லாது தாங்களும் கந்தசுவாமியோடு தினமும் அர்த்த ஜாமத்தில் சோமநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபடும் பெரும் பேற்றைப் பெற்றனர். இன்றும் அருவமாக இங்கு அவர்கள் ஈசனை வழிபடுவதாக ஐதீகம் உள்ளது. கருவறையின் முன்பு துவாரபாலகர்களுக்குப் பதிலாக பிரம்மாவும் விஷ்ணுவுமே காணப்படுகின்றனர்.

எனவே, இத்தலம் மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் அற்புதத் தலமாகும். இத்தலத்தில் 27 பூத வேதாளங்களையும் தரிசிக்கலாம். மேலும், இவை பைரவர் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாது. எனவே, பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தலத்தில் அவரவர் நட்சத்திரத்துக்குரிய பூத வேதாள கணங்களை வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்வது இங்கு வழக்கமானதாகும்.

அழகான ஆலயத்திற்குள் வெளிப்பிராகாரத்தினுள் நுழையும்போதே ஐந்து அடி உயரத்தில் மேற்கு பார்த்த வண்ணம் சூரிய பகவான் சிவசூரியன் எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நேர் எதிரேயே முருகப் பெருமான் அனுதினமும் பூஜிக்கும் சோமாநாதரும், மீனாட்சி அம்மனும் அருள்கின்றனர். இத்தல ஈசனை பிரதோஷ நாட்கள் மற்றும் மாதாந்திர சிவராத்திரி நாட்களில் அப்பர் சுவாமிகள் திருஅங்கமாலை எனும் பதிகம் பாடி வழிபட்டால் சகல உடற் பிணிகளும் நீங்கும் என்கிறார்கள்.

சோமநாதரின் தென்புறம் பள்ளியறை அமைந்துள்ளது. ஈசனின் வடப்புறமுள்ள வாயிலின் வழியாகச் சென்றால் ஆலயத்தின் பிரதான மண்டபமும் அங்கேயே கந்தசுவாமியாக வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் பேரெழிலோடு அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களோடு வேலும் மயிலும் உடனிருக்க அபயஹஸ்தம் தாங்கி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையில் துவாரபாலகர்களாக சுவீரனும், சுஜனனும் உள்ளனர்.

கருவறை வெளிவாயிலின் இருபுறமும் விநாயகரும், கஜலட்சுமியும் அமைந்துள்ளனர். கருவறையின் வெளிச்சுற்று கோஷ்டங்களில் முருகனே பஞ்ச கோஷ்ட மூர்த்தியாக அருள்கிறார். அதாவது நிருத்திய ஸ்கந்தர், பால ஸ்கந்தர், பிரம்ம சாஸ்தா, சிவகுருநாதர், வேடுவர் எனும் திருப்பெயர்களோடு அருள்கிறார்கள். சாதாரணமாக கோஷ்டத்தில் பிரம்மா இருப்பார். இங்கு அவருக்குப் பதிலாக பிரம்ம சாஸ்தாவும்,  நர்த்தன கணபதிக்கு பதிலாக நிருத்திய ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்திக்கு பதிலாக சிவகுருநாதரும், லிங்கோத்பவருக்குப் பதிலாக பாலஸ்கந்தரும், துர்க்கைக்குப் பதிலாக புளிந்தர் எனும் வேடுவரும் உள்ளனர்.

கருவறையை வலம் வரும்போது நிறைவாக பிரதான மண்டபத்தின் கிழக்கு வாயிலின் உள்நுழைவில் இருபுறமும் பைரவரும், குஹ சூரியனும் மேற்கு நோக்கியவாறு உள்ளனர். பைரவரான மூலவர் கந்தசுவாமியை நோக்கியவாறு உள்ளது சிறப்பாகும். மூலவர் கந்தசுவாமியின் எதிரே உட்பிராகாரத்தில் கல்லால் ஆன வேல் உள்ளது.

வெளிப்பிராகாரத்தில் மூலவருக்கு எதிரிலேயே கொடிமரம், மயில், பலிபீடம் அமைந்துள்ளன. கொடிமரத்திற்கு வடக்கிலுள்ள மயில் மண்டபத்தில் வள்ளியும் தெய்வானையும் தனித்தனி சந்நதிகளில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இதற்கு அருகிலேயே சர்வ வாத்திய மண்டபம் உள்ளது. இங்குள்ள தூண்களில் மாரியம்மன், நரசிம்மர், ஐயப்பனின் சிற்பங்களில் அதிஅற்புதமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர கோயிலிலேயே பூரனை புஷ்கலை சமேத ஐயனாருக்கு சந்நதி உள்ளது. மயில் மண்டபத்தின் பின்புறம் பெரியாண்டவருக்கென்று அழகான சந்நதி நிறுவப்பட்டுள்ளது.

இத்தலத்தில் பிரதான அரிதான சிறப்பம்சமாகிய பூத வேதாளங்களின் புடைப்புச் சிற்பங்களை இந்த ஆலயத்தில் வெளிப் பிராகாரத்தின் உட்புறச் சுவற்றின் நான்கு புறங்களிலும் தரிசிக்கலாம். 26 நட்சத்திர பூத வேதாளங்கள் வெளிப்பிராகாரச் சுவர்களிலும் ஒன்று மட்டும் மயில் மண்டபத்தின் மேற்புறம் மேற்கு பார்த்த வண்ணம் உள்ளது. முதல் பூத வேதாளம் நாகலிங்க மரத்தின் அருகிலும், 27வது பூத வேதாளம் வில்வ மரத்தின் அடியிலும் அமைந்துள்ளது சிறப்பானதாகும். அந்த பூத வேதாளங்களின் பெயரும், நட்சத்திரமும் பக்தர்களின் வசதிக்காக பொறிக்கப்பட்டுள்ளது.

செவ்வரளி, மரிக்கொழுந்தால் அர்ச்சித்து, கந்தசுவாமிக்கு பசு நெய் தீபத்தை ஆறு வாரங்கள் ஏற்ற சகல தோஷங்களும், தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்பும் நிச்சயம் நீங்கும். தேய்பிறை அஷ்டமி பூஜை மாலை நான்கு முதல் இரவு எட்டரை மணிவரை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதுதவிர முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை, சூரசம்ஹாரம் போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். செட்டி குளம் எனும் தீர்த்தமே தல புஷ்கரணியாக விளங்குகிறது. மிகவும் அரிதும், ஆச்சரியமுமான இந்த ஆலயத்தை எல்லோரும் அவசியம் தரிசிக்க வேண்டும்.

இத்தலம் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரிலிருந்து நேர் எதிரில் கிழக்கில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும், சென்னை -புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருபவர்கள் மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூர் தாண்டி எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் வந்தடைத்து அங்கிருந்து மேற்கே 3 கி.மீ. பயணித்தால் செய்யூரை அடையலாம்.

தொகுப்பு: கிருஷ்ணா

Tags : Vadivela ,Vedas ,
× RELATED வேதம் வந்த மாதம்..!