×

உப்பும் வழிபாடும்

உணவிற்குச் சுவைசேர்ப்பது உப்பாகும். உப்பு உணவின் தன்மையை, சுவையை மேம்படுத்துகிறது. உப்புதல் மேம்படுதல் வடிவம். ஆறுவகை சுவையுமே உப்பால் உண்டாகிறது. இன்+உப்பு=இனிப்பு; கரித்தல்+உப்பு = கரிப்பு; காரம்+உப்பு= கார்ப்பு; புளித்தல்+உப்பு = புளிப்பு. ‘‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’’ என்பது பழமொழியாகும். வடமொழியில் உப்பை லவணம் என்பர். உப்பினால் லிங்கம் செய்து வழிபடும் வழக்கம் உள்ளது. உப்பாலான லிங்கம் `லவண லிங்கம்’ எனப்படும். அவருடைய தேவி, லவணேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். ராமேஸ்வரத்தில், மேற்குப் பிரகாரத்தில் லவண லிங்கம், லவணேஸ்வரியோடு செய்து வைத்து வழிபட்டு வருகிறார்கள். உப்பு, எளிதில் கரைந்து விடும் தன்மை கொண்டது. ஆனால், இந்த உப்புலிங்கம் பல நூற்றாண்டுகளாக கரையாது உறுதியாக உள்ளது.

கௌரி விரதங்களில், `லவண கௌரி விரதம்’ என்பதும் ஒன்றாகும். உப்பைக் குவித்து வைத்து, ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து கௌரி தேவியாக வழிபடுகின்றனர். கல்வெட்டுக்கள், கோயிலுக்குக் கொடுக்கும் உப்பை, `உப்பமுது’ என்றே குறிக்கின்றனர். கோயில்களில் உப்பு சேர்த்தே சமைக்கிறார்கள்.
தானம் அளிப்பதற்குரிய பொருள்களில் உப்பும் ஒன்றாகும். இதனை `லவண தானம்’ என்பர். உப்பை வைக்க மரத்தாலான பாத்திரங்களைப் பயன்படுத்தினர். உப்பு எளிதில் நீர்த்து விடும். உலோகங்களை அரித்துவிடும். அதனால், அதனை மரத்தில் சேமித்து வைப்பர்.

உப்பு என்றதும் கடலிலிருந்து பெறப்படும் உப்பே நினைவுக்கு வந்துவிடுகிறது. உப்பு, கடலில் இருந்து தோன்றுவதால் அதை லட்சுமியின் அவதாரமாகச் சொல்வர். உப்பு, கடலில் இருந்து மட்டும் தோன்றுவதில்லை. பூமியில் விளையும் உப்பு, மலைகளில் பாறையில் விளையும் உப்பு, ஆற்றின் உவர் மண்ணில் இருந்து பெறப்படும் உப்பு என்று உப்பு பலவகைப்படும். கடல் நீரைக் காய்ச்சி எடுக்கும் முறை எளிது என்பதாலும், விலை குறைவு என்பதாலும், கடலுப்பை பயன்படுத்துகின்றனர்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?