×

இறை வண்ணம் கொள்வோம்!

நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் அது குவளையின் ஓரத்தில் போய் ஒதுங்கிக் கொள்கிறது. கல் தண்ணீருக்குள்தான் இருக்கிறது, என்றாலும் அது தண்ணீருடன் முழுமையாகச் சேராமல் தனித்தே நிற்கிறது. அதாவது கல், கல்லாகவும் தண்ணீர், தண்ணீராகவும் இருக்கின்றன.

ஆனால் அதே நீரில் வண்ணப் பொடியைப் போட்டால் அது நீரில் கலந்து கரைந்து ஒன்றித்து விடுகிறது. நீர் வேறு, சாயம் வேறு என்று சொல்ல முடியாத அளவுக்கு இணைந்து விடுகின்றன. இறைவனின் திருநெறிக்கும் நமக்கும் இருக்க வேண்டிய தொடர்பு அந்தக் கல்லையும் தண்ணீரையும் போன்றதல்ல; வண்ணத்தையும் தண்ணீரையும் போன்றது. ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் இஸ்லாமியத் திருநெறி உதிரியாகவோ தனித்தோ நின்று விடுவதில்லை. மாறாக அது அவனுடைய முழு வாழ்விலும் இரண்டறக் கலந்து நிற்கிறது.

ஓர் இறைநம்பிக்கையாளனின் உணர்வும் உள்ளத்துடிப்பும் பார்வையும் கேள்வியும் இறைமார்க்கமாகவே இருக்க வேண்டும்.அவனுக்குக் கையும் காலுமாக விளங்குவதும் கூட இறைநெறிதான். அதனைப் பற்றிக் கொண்டே அவன் உலகின் அனைத்துக்  காரியங்களையும் செய்ய வேண்டும். வாழ்வின் எந்த ஒரு துறையையும் விட்டுவிடாமல் மனிதனை முழுமையாகச் சூழ்ந்து நிற்கிறது அந்த நெறி.

மறைநம்பிக்கையாளனின் ஒவ்வொரு சொல்லிலும் அதனுடைய ஒளி பிரதிபலிக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலும் அதன் சாயலைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். தண்ணீருக்குள் கல்லைப்போல் ஒருவனிடம் இறைநெறி இருந்தால் அவன் முழுமையாக மார்க்கத்தைப் பின்பற்றியவன் ஆகமாட்டான். நீரில் கரைந்த சாயம் போல இந்த நெறியுடன் அவன் ஒன்றித்து இருப்பதே உண்மையான மார்க்கம் ஆகும்.

ஒரு மனிதனுக்கு ஏதேனும் ஒரு பொருளின் மீது அளவு கடந்த அன்பிருந்தால் அப்பொருள் முழுவதிலுமே அவனுடைய அன்பின் பிரதிபலிப்பைக் காணலாம். அவ்வாறே இறைநெறியை ஒருவன் வாய்மையுடன் ஏற்றுக்கொண்டால் தன்னுடைய முழு வாழ்விலும் அதனைப் பிரதிபலித்துக் காட்ட
வேண்டும்.

இதைத்தான் திருக்குர்ஆன் ரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறுகிறது: ‘‘இறைவனின் வர்ணத்தை மேற்கொள்வீர்களாக. இறைவனின் வர்ணத்தைக் காட்டிலும் யாருடைய வர்ணம் சிறந்தது? மேலும் நாங்கள் அவனுக்கே பணிந்து வாழ்பவர்களாய் இருக்கிறோம்.’’ (திருக்குர்ஆன் 2:138) இறைநெறியில் முழுமையாகக் கரைந்து வாழ்வோம். அவனுக்கே பணிந்து வாழ்வோம்.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரப் பிரார்த்தனை

இறைவா, என்னுடைய நாவைச் சீராக்குவாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நெஞ்சத்திலிருந்து வஞ்சகத்தை நீக்குவாயாக!’ (திர்மிதி)

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா