சரஸ்வதி தேவி ஸ்தலங்கள்

கலைவாணியான சரஸ்வதி பிரம்மாவின் மனதில் இருந்து அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவிக்கு பல கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவில்களும் தேவியின் விசேஷ ஸ்தலங்களாக வழிபடப்படுகின்றன. அவ்வாறு வழிபடப்படும் தேவி எங்கெல்லாம் காட்சி தருகிறாள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

*வேலூர், தோட்டப் பாளையம் தாரகேஸ்வரர் திருக்கோயிலில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவுக்கு எதிரில் கலைமகள் காட்சி தருகிறாள்.

*கங்கை கொண்ட சோழபுரம் பெரிய கோயிலின் வடக்கு வாசல் மாடத்தில், நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் மேற்குத் திசை நோக்கி அமர்ந்த நிலையில் ‘ஞானசரஸ்வதி’ என்ற பெயரில் அழகிய சிற்பம் உள்ளது.

*திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நதியில் சரஸ்வதியை தரிசிக்கலாம். மேலும் கீழ மாட வீதியில் கோமதி அம்மன் கோயிலில் தனிச் சந்நதியில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி அருள்கிறாள்.

*மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண் ஒன்றில் சரஸ்வதியின் திருவுருவம் நின்ற நிலையில் கையில் வீணையுடன் உள்ளது.

*குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதி தேவியை கவிச் சக்கரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு.

*தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். மேலிரண்டு கரங்களில் அட்சமாலை சுவடியும் முன்னிரு கரங்களில் அபய முத்திரையுடன் விளங்குகிறாள்.

*தஞ்சாவூர், திருவையாறு சாலையில் உள்ள திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம் கருவறையில் நான்கு திருக்கரங்கள் கொண்ட சரஸ்வதி பிரம்மாவுடன் இணைந்து காட்சி

தருகிறாள்.

*திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோயிலில் பிரம்மா சந்நதிக்கு இடப்புறம் சரஸ்வதிக்குத் தனிச் சந்நதி உள்ளது. தெற்கு திசை நோக்கி சுகாசன கோலத்தில் அருள்கிறாள்.

*கும்பகோணம், கூத்தனூர் திருத்தலத்தில் சரஸ்வதிக்கு தனிக் கோயில் உள்ளது. இங்கு சரஸ்வதியின் கரங்களில் வீணை இல்லை. தவக் கோலத்தில் வெள்ளைத் தாமரையில் பத்மாசன கோலத்தில் அமர்ந்து ஞான சொரூபமாக காட்சி தருகிறாள் சரஸ்வதி.

கல்வியில் சிறந்து விளங்கவும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் அருகில் உள்ள சரஸ்வதி ஆலயம் சென்று தேவியை வழிபடலாம். வீட்டில் பூஜை அறையிலும் தேவியின் படத்திற்கு மல்லிகை மலர்கள் கொண்டு வழிபடலாம்

தொகுப்பு - எம்.வசந்தா, சென்னை.

Related Stories: