×

முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளுதலும்

முதியோருக்குப் பொதுவாக மரியாதை செலுத்தும் வழக்கம் நம்நாட்டில் இருந்துவருகிறது. இருப்பினும், தற்போது அனைத்து முதியோருக்கும் சமமான மரியாதை கிடைப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தொடக்கநூல் 46-ம் அதிகாரத்தில் ஒரு மகன் வயதான தனது தந்தை மீது காட்டிய அன்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இஸ்ரயேல் எனப்பட்ட யாக்கோபுக்கு மொத்தம் 12 பிள்ளைகள்.

அவர்களில் 11 வதாகப் பிறந்தவர்தான் யோசேப்பு. தனது முதிர் வயதில் பிறந்ததால், அவரது தந்தை இஸ்ரயேல் யோசேப்பை அதிகம் நேசித்தார். இதன் காரணமாக, அவரது மூத்த சகோதரர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். ஒரு கட்டத்தில் யோசேப்பை எகிப்தியர் ஒருவருக்கு அடிமையாக விற்றனர். கடவுள் யோசேப்புடன் இருந்ததால், பல கசப்பான அனுபவங்கள் மற்றும் இக்கட்டுகளைக் கடந்து எகிப்து அரசனாகிய பார்வோனுக்கு அடுத்திருக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.

எகிப்து நாட்டின் நிர்வாகம் முழுவதும் யோசேப்பின் கைக்கு வந்தது. அக்காலத்தில், அப்பகுதி எங்கும் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. யோசேப்பின் நிர்வாகத் திறமையால் எகிப்து நாட்டில் உணவுப் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. உணவுத் தானியங்கள் வாங்குவதற்காகப் பல பகுதியிலிருந்தும் மக்கள் எகிப்து நோக்கி வந்தனர்.

யோசேப்பின் சகோதரர்களும், அவ்வாறே எகிப்துக்கு சென்றபோது யோசேப்பு அவர்களை அடையாளங் கண்டு கொண்டார். அதன் பின்னர், அவரது தந்தை மற்றும் அவரது சகோதரர்களை அவர்கள் குடும்பத்தோடு பார்வோன் அரசனின் நல்லாசியுடன் எகிப்தில் குடியேற்றினார். பல ஆண்டுகளுக்குப்பின் யோசேப்பு தனது தந்தையை சந்திக்கப் போகிறோம் என்பதால், அவர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அவர் தமது தந்தையை அழைத்து வரத் தேவையான அனைத்து ஒழுங்குகளையும் செய்தார். தனது வயது மிகுந்த தந்தையின் பயணம் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்கு உதவும் வகையில், ‘‘தம் தந்தைக்குப் பத்து ஆண் கழுதைகளின் மேல் எகிப்தின் சிறந்த பொருட்களையும், அவரது பயணத்திற்குப் பத்துப்பெண் கழுதைகளின் மேல் தானியத்தையும், அப்பம் முதலிய உணவு வகைகளையும் ஏற்றி அவர்களோடு அனுப்பி வைத்தான்’’ (தொடக்க நூல் 45:23).

ஆம்! முதியோரின் தேவைகள் முழுமையாக உணரப்பட வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு உணவு, தண்ணீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். அவர்களின் பயணங்கள் வசதியானதும், சுகமானதும், பாதுகாப்பானதுமாக இருக்க அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத் தான் யோசேப்பு தமது தந்தைக்குச் செய்தார். யோசேப்பின் தந்தையாகிய இஸ்ரயேல் தமது மகனின் அழைப்பை ஏற்று எகிப்துக்கு அருகில் வந்தபோது, யோசேப்பு தனது தேரைப் பூட்டிக் கொண்டு தன் தந்தையை சந்திக்கச் சென்றார்.

இதுவும் கூட ஒரு சிறந்த பண்பாடு. அவர் ‘‘தம் தந்தையை கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோள் மேல் சாய்ந்து கொண்டு வெகு நேரம் அழுதார்’’ (தொடக்கநூல் 46:29). யோசேப்பு தன் தந்தையின் மீது, தான் தேக்கி வைத்திருந்த அன்பை இவ்வாறு வெளிப்படுத்தினார். முதியோருக்கு உணவு உடை இருப்பிடம் தேவை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது அன்பும் அரவணைப்பும் ஆகும். முதியோரிடம் நாம் செலுத்தும் அன்பு வார்த்தைகளைக் கடந்து செயலாலும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

நாம் காட்டும் அன்பில் உணர்ச்சி கலந்திருக்க வேண்டும். அவர்களைத் தொட்டுப் பேச வேண்டும். யோசேப்பு இவை அனைத்தையும் செய்தார். யோசேப்பின் தந்தையாகிய இஸ்ரயேல் எகிப்துக்கு வந்து சேர்ந்தபோது அவருக்கு வயது 130. அவர் தமது 147-வது வயதில் இறந்தார். இஸ்ரயேல் உடல் நலம் குன்றியுள்ளார் என்ற செய்தியைக் கேட்டவுடன் யோசேப்பு தனது இரண்டு மகன்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவரை நலம் விசாரித்தார்.

அவர் தமது பேரக் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். அது மட்டுமல்ல, தான் இறந்த பின் தனது உடலை தனது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்திட வேண்டும் என்று தம் மகனிடம்  கேட்டுக் கொண்டார். யோசேப்பு அவரது விருப்பத்தை அவ்வாறே நிறைவேற்றினார். யோசேப்புவின் தந்தையின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.

முதியோர் உடல் நலம் குன்றியிருக்கும் போது அவர்களை நலம் விசாரிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவம் மற்றும் இதர உதவிகள் செய்ய வேண்டும். அவர்களின் நியாயமான விருப்பங்களை அவர்கள் இறந்த பின்னும் நிறைவேற்ற வேண்டும். யோசேப்பு அவ்வாறு செய்து முதியோரிடம் அன்பு காட்டுவது எப்படி என்பதை நமக்கு உணர்த்தியுள்ளார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி