×

ஞான சரஸ்வதி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நான்கு வேதங்களைக் கொண்டு உலகை படைத்ததாக பிரம்மாவை சொல்கிறோம். அதனாலேயே பிரம்மாவிற்கு நான்கு தலைகள் இருப்பதாக புராணம் காட்டுகின்றது. அந்த வேதமே ஈசனின் மூச்சுக் காற்றாக விளங்குகின்றன. வேதங்கள் என்பது சப்தங்களின் தொகுதியாகும். எனவேதான் வேதங்களை சப்த பிரம்மம் என்றழைக்கிறார்கள். சப்தங்களிலிருந்துதான் பிரபஞ்சம் உருவாகுகிறது. எல்லாவற்றிற்கும் மூலமே ஒலிதான். அந்த இடையறாத ஒலியின் சலனமே பிரபஞ்சமாக விரிகின்றது.

விவேகானந்தரிடம் ஒருவர், அதெப்படி வேத சப்தங்களிலிருந்து உலகம் உருவாக முடியும். வார்த்தையிலிருந்து சிருஷ்டி வருமா’’ என்று கேட்டார். அதற்கு விவேகானந்தர், ‘‘மிக நிச்சயமாக முடியும். உலகம் முழுக்க பானைகள் இருக்கின்றன. மெல்ல பானைகள் முழுவதும் அழிந்து விடுகின்றன. பானை எனும் விஷயமே எவருக்கும் தெரியாமல் போய்விடும். ஆனால், பானை என்றொரு வார்த்தை மட்டும் இருந்தால் போதுமானது. மீண்டும் பானைகளை உருவாக்கீ விடலாம். அதுபோலத்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதன் மூலத்தில் ஒலிவடிவில்தான் இருக்கின்றன. மெல்ல ஒலியின் அதிர்தல் இறுகி பொருளாக மாறுகின்றன. அதேசமயம் அந்த மூல சப்தங்கள் எந்த வித மாற்றத்தையும் அடைவதில்லை. அந்த மாற்றமடையாத சப்தத்தையே நாம் பீஜம் மற்றும் பீஜாட்சரம் என்கிறோம்.

இப்படியாக ஒன்றிலிருந்து ஒன்றாக பிரம்மா பிரபஞ்சத்தையும் ஜீவராசிகளையும் படைத்ததாகச் சொல்கிறோம். எனவே சிருஷ்டிக்கு மூலகர்த்தாவாக பிரம்மாவையே சொல்கிறோம். படைக்கப்பட்ட விஷயங்கள் மட்டும் இருந்தால் போதுமா. வெறும் பாறையும் மண்ணும் மட்டும் போதுமா. வெறும் மரம் வேடிக்கை பார்க்க மட்டும்தானா? இங்குதான் படைப்புக்குள் படைப்பாக, உணர்வுகளை வடித்தெடுக்கும் சக்தியாக, பார்க்கும் விஷயங்களில் நுட்பத்தை புகுத்தி ரசனை எனும் கலைவியக்தியாக மாற்றும் ஒரு சக்தி வெளிவருகிறது.

அந்தச் சக்திக்கே சரஸ்வதி என்று பெயர். சரஸ்வதி அறிவால் உணர்ந்ததை அனுபவத்தால் தெளிந்ததை அழகு காவியமாக்குவாள். காவிய நாடகங்களை கவினுறு பாணியில் வெளிப்படுத்துவாள். வெறும் பேச்சு மட்டுமல்ல வாய். மயக்கும் பாடலையும் அதன் மூலம் பாடலாம் என்று குரல் வழியே கேட்போரை நெக்குருக வைப்பாள் சரஸ்வதி. இவ்வாறு ஆடலும், பாடலும், காவியமியற்றலும், சித்திரம் தீட்டலும், உளிகொண்டு சிற்பம் வடித்தல் என்று ஆய கலைகளையும் அபரிமிதமாக தன்னிலிருந்து பிரபஞ்சம் முழுதும் சுரக்கச் செய்கின்றாள்.

பிரம்மா சிருஷ்டி கர்த்தாவெனில், சரஸ்வதி அந்த சிருஷ்டியை அலங்கரித்துக் கொடுக்கின்றவள். மூங்கில் பிரம்மாவின் படைப்பெனில் அதை புல்லாங்குழலாக மாற்றி அதிலிருந்து நாதமாக இசையை அருள்பவள் சரஸ்வதி. எனவேதான், பிரம்மாவை கணவனாகவும் சரஸ்வதியை மனைவியாகவும் இந்து மதம் நிலை நிறுத்துகின்றது.

இன்னும் தேவி மகாத்மியம் போன்ற நூல்கள் சரஸ்வதியை கலைக்கு மட்டுமே சொல்லாது அதன் மூலம் வரைக்கும் சென்று அவளே ஞான ரூபிணி என்கின்றன. மகாசரஸ்வதி என்பவள் ஞானத்தை அருள்பவள் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன.  இந்த நவராத்திரியிலேயே கூட சும்ப நிசும்பர்களை வதைப்பதற்காக அந்த மகா சரஸ்வதியே காளி ரூபத்தில் வருகின்றாள். அதாவது எங்கெங்கெல்லாம் அஞ்ஞானம் மிகுந்துள்ளதோ அங்கெல்லாம் தன்னுடைய ஞானமெனும் சூரியனை பரப்பி அறியாமை எனும் இருளை அகற்றி விடுகின்றாள். அதனால் இங்கு அவள் ஞான சரஸ்வதியாகின்றாள்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

Tags : Gnana Saraswati ,
× RELATED ஞான சரஸ்வதி