×

ஆயுள் முழுவதும் காத்தருளும் ஸ்ரீஆயுர் தேவி

சுரைக்காயூர்

அருட்பெருஞ் சித்தர்களும் மஹரிஷிகளும், மக்கள் சேவையே மகேசன் சேவையென மனித குலத்திற்காக பல தியாகங்கள் புரிந்தவர்கள். அவர்களைத் தன்னுடைய
எட்டுத்திருக்கரங்களில் ஏந்தி தம் ஒன்பதாவது கரத்தை அபயஹஸ்தமாகக் கொண்டு, அருள்பாலிப்பவள் ஆயுர்தேவி.

தேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! அவர்களின் திருவுருவைக் கோயில் தூண்களில் காணலாம். சில திருக்கோயில்களில், அவர்களுக்கென்று தனிச் சந்நதி அமைந்துள்ளது. ஆனால், சித்த புருஷர்களைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பவள் ஆயுர்தேவி மட்டுமே. ஸ்ரீஆயுர் தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரகத் தத்துவங்களை விளக்குகின்றன.

ஸ்ரீஆயுர் தேவியை வழிபட, ஸ்ரீபராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரித்து அவர்களின் அருளும் சேர்ந்து கிட்டுகிறது. தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீஆயுர் தேவி, என்றும், எங்கும், எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம், பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள்புரிவதில் பேரின்பம்கொள்கிறாள். எனவே, ஸ்ரீஆயுர் தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பாபநாசம் - திருவைகாவூர் சாலையில் வெட்டாற்றின் கரையில் மேற்கு நோக்கி சென்றால், சுரைக்காயூர் அடையலாம். முன்னர் சிறைக்காவூர் என அழைக்கப்பட்ட ஊரே பின்னர் மருவி, சுரைக்காயூர் ஆனது. இரு சுரைக்காயூர்கள் உள்ளன. மற்றொன்று திருப்பாம்புரம் அருகில் உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு எளிமையாகவும், அழகுடனும் விளங்கும் இத்திருக்கோயிலின் பிரதான வாயில் தென்புறம் உள்ளது.

இறைவன் புஜபதீஸ்வரர் என்றும், இறைவி ஔஷத மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். பெயருக்குஏற்றார்போல், அம்பிகை தன்னை நம்பி வந்தவர்களின் நோய்நொடிகளை நீக்கும் ஔஷதமாக விளங்குகிறாள். இந்த இறைவியை பூஜிப்பதன் மூலம், மக்கள் நோய்நொடியில்லா வாழ்வினைப் பெறுவர் என்பது உறுதி. இக்கோயிலில் விநாயகர், முருகன், விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆயுர் தேவி, காலபைரவர் போன்ற உபசந்நதிகளும் உள்ளன.

இத்திருக்கோயிலின் தென்புறம் வடக்கு நோக்கிய சிற்றாலயத்தில் ஆயுர்தேவி அம்பிகை காட்சி தருகிறாள். அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன. சிவாம்சம் கொண்ட ஆதிபராசக்தியான ஆயுர் தேவி, அன்ன வாகனத்தில் ஒன்பது திருக்கரங்களை உடையவள். வல, இடப்புறங்களில் நான்கு கரங்களும், ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகவும் விளங்குகிறது.

ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில், சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண் திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்கும்படி, தேவியின் சந்நதி உள்ளது.

ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்தத் தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் கயாசுர மகரிஷி. அவளுடைய திருக்கரங்களில் மற்ற எந்தெந்த மகரிஷிகள் விளங்குகிறார்கள் என்று பார்ப்போமா!

அவளுடைய வலதுகரத்தில் மேலிருந்து கீழாக; 1. கயாஸூர மஹரிஷி, 2. ஆணி மாண்டவ்யர், 3. அத்ரி மஹரிஷி, 4. குண்டலினி மஹரிஷி ஆகியோரும், இடது கரத்தில் மேலிருந்து கீழாக 1. அஹிர்புத்ன்ய மஹரிஷி, 2. சாரமா முனிவர், 3. அஸ்தீக சித்தர், 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி ஆகியோரும் அமர்ந்திருக்கின்றனர். எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி, ஸ்ரீஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள்புரிபவள்.

இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இவர் தனது ஒன்பது கரங்களில், ஏழில் முனிவர்களை ஏந்தியகோலமும், ஒரு கரத்தில் அமுதகலசம் கொண்டும் விளங்குகிறார். பிற தலங்களில் காண்பதற்கு அரிய தேவியாவார். உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுக, துக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கிவிடுகின்றன.

இறைவனிடம் நாம் வேண்டிக் கொள்வதெல்லாம், நம் துன்பங்களும், துக்கங்களும் நீங்க வேண்டுமென்பதுதான். இதுவே, இன்று எல்லோருடைய பிரார்த்தனையுமாகும். நம் கர்ம வினைகளாலேயே நமக்குத் துன்பங்கள் வருகின்றன. நம் வினைகளுக்கேற்ப நல்லவையும், மற்றவையும் நமக்கு மாறிமாறி வருகின்றன. இதற்கு அதிபதியாக இருப்பது நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் தலைவியாக அம்பிகை விளங்குகிறாள்.

ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில்  சக்கரத்திற்கு ஒப்பான ‘‘தீபிகா பிம்ப சக்கரம்’’ அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது. இந்தத் தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலனங்களை நிர்ணயிக்கின்றது. நித்ய ஜீவசக்தியை அளிக்கின்றது.

கிருதயுகத்தில் சிறப்புற்று விளங்கிய ஸ்ரீஆயுர்தேவி உபாசனை காலப் போக்கில் மறைந்துவிட, தற்போது சித்த புருஷர்களின் அருட்பெருங் கருணையால் கலியுகத்து மக்களிடையே ஸ்ரீஆயுர் தேவியைப் பற்றிய பல விவரங்கள் பலருக்கும் தெரிந்து, அம்பிகையை உணரத் தொடங்கியுள்ளனர். ஸ்ரீதேவி, காருண்ய தேவியாக மக்களின் நலனுக்காக மீண்டும் மக்கள் மனங்களில் தோன்றி அருள்பாலிக்கத் தொடங்கியிருக்கின்றாள்.

கிருதயுகத்திலும், திரேதாயுகத்திலும் வீட்டுக்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த ஸ்ரீஆயுர்தேவியை, சித்த புருஷர்கள் வழிபடும் அன்னையை நவராத்திரியில் வணங்குவது மிகவும் விசேஷம். இந்தத் தேவி வழிபாடு மனிதக் குலத்தின் அனைத்துத் துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு முழுமையான வழிபாடாகும். ஸ்ரீஆயுர் தேவி வழிபாடு, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியின் ஸர்வ தெய்வ சம்பூர்ண வழிபாடாக அமைகிறது.

திரிமூர்த்திகள் தமக்குரித்தான ஆக்கல், காத்தல், அழித்தல் நியதிகளால் மூவரே தவிர அவர்கள் ஒன்றிடும்போது பரப்பிரம்மமாக ஒளிர்கின்றனர். மூவரும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய ஸ்ரீஆயுர்தேவியைப் பரம்பொருளின் அம்சமாக வழிபடுகின்றனர் என்றால் தேவியவள் மகாத்மியத்தை வடித்துரைக்க இயலுமா?

சுரைக்காயூருக்குச் செல்லும்போது அவசியம் ஆயுர் தேவியை கண்ணாரக் கண்டு மகிழுங்கள்!

சென்னைக்கருகில் உள்ள மறைமலை நகரில் அமைந்துள்ள, தான்தோன்றி சாய்பாபா கோயிலிலும், ஆயுர் தேவியைத் தரிசிக்கலாம். அவளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அவள் நம்மை ஆயுள் முழுவதும் காப்பாள்.

தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியன்

Tags : SriAyur ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி