பிரிந்த தம்பதியரை சேர்த்து வைப்பான் சேர்வாரன் சாமி

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

நம்ம ஊரு சாமிகள்

கிராமத்தை விட்டு தள்ளியிருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஏறுமாடம் கட்டி குடியிருந்தனர். பகலில் தாங்கள் வளர்த்து வந்த நாயை கம்மாடச்சிக்கு துணையாக இருக்க வைத்துவிட்டு, சேர்வாரன் மலையிலிருந்து இறங்கி, அங்குள்ள தோட்டங்களிலிருந்து காய்களும், கானகத்திலிருந்து கனிகளையும் எடுத்துக்கொண்டு சென்று உண்டு வாழ்ந்துவந்தனர். கொஞ்ச நாள் கம்மாடச்சியின் அண்ணன்மார்களிடம் இருந்து தப்பிப்பதற்காகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, அப்புறம் ஏதாவது ஊர்ப்புறபகுதிகளில் சென்று வாழலாம் என முடிவு செய்திருந்தனர்.

தினமும் நண்பகல் நேரம் அங்குள்ள நீர்நிலையில் குளித்துவிட்டு, மனைவிக்குத் தண்ணீரும் எடுத்துச் செல்வான் சேர்வாரன். இது அந்த பட்டாடைமலை கிராம மக்களுக்குத் தெரியும். இது இப்படி இருக்க, சேலத்தில் சேர்வாரன் தனது தங்கையை கடத்திக்கொண்டு சென்றுவிட்டான் என்ற கோபத்தில் சேர்வாரனின் குடும்பத்தை சித்ரவதை செய்தனர் அரண்மனைக்காரர்கள். அதில் ஒருவர்தான் எங்களது உறவினர் பாண்டிய நாட்டில் இருப்பதாகவும், ஒருவேளை அங்கு சென்றிருக்கலாம் என்று கூற, மதுரைக்கு வந்தனர் கம்மாட்சியின் அண்ணன்மார்கள்.

அவர்கள் அங்கிருந்து இருவரின் அங்க அடையாளங்களை கூறி விசாரித்துவிசாரித்து நெல்லைச் சீமைக்கு சங்கரன்கோவில் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 4-வது நாள் பட்டாடைகட்டி மலைக் கிராமத்திற்கு வந்தனர். சேர்வாரன் குளிக்க வரும் அந்த குளத்தில் தங்களது குதிரைகளுக்கு நீர் காட்டினர் கம்மாடச்சியின் அண்ணன்மார்கள். அப்போது குளத்தின் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் கம்மாடச்சியின் அண்ணன் கஜேந்திரபூபதி, சேர்வாரனின் அங்க அடையாளங்களை கூறி அவரை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க, அந்த சிறுவன் ஓ, நான் பார்த்திருக்கேன். மத்தியான நேரத்தில இங்க தான் வந்து குளிச்சிட்டு தண்ணிய எடுத்துட்டு போவாரு என்றான்.

இப்ப மதியவேளையாச்சே அந்த ஆளு வந்திட்டு போயாச்சா என்று கேட்க, இல்லை இனிதான் வருவார் என்றான். உடனே ஏழு பேரும் ஆளுக்கொரு பக்கமாக கையில் வாளுடன் அங்கிருந்த மரம் செடி கொடிகளுக்கிடையே பதுங்கி இருந்தனர். சேர்வாரன் வந்தான். தன் தோளில் போட்டிருந்த துணியை எடுக்க முற்பட்டபோது, வெட்டுங்கடா என்று கம்மாடச்சியின் அண்ணன் மூத்தவன் ராஜமாணிக்கம் குரல் கொடுத்தான்.

சத்தம் கேட்டு ஓட முற்பட்ட சேர்வாரனை மகேந்திரபூபதி வெட்டினான். வயிற்றுப் பகுதியில் வெட்டுப்பட்டதும் ரத்தம் பீறிட்டது. கையில் இருந்த துணியைக் கொண்டு வயிற்றில் கட்டினான். சேர்வாரன் உடனே அங்கிருந்து ஓடினான். ரத்தம் சொட்ட சொட்ட விரைந்தான் இருப்பிடம் நோக்கி, அவன் பின்னாடியே ஓடி வந்தார்கள் அவளது அண்ணன்மார்கள்.

சேர்வாரன் வரும் நிலையைக்கண்டு அவன் வளர்த்து வந்த நாய், அவனருகே ஓடி வந்தது. பின்னர் விரைந்து சென்று தூங்கிக்கொண்டிருந்த கம்மாடச்சியின் சேலைத் துணியை பிடித்து இழுக்க, கண் விழித்து பார்த்தவள், கதறினாள். `என்னங்க, என்னாச்சு’ என்றதும். சேர்வாரன் நடந்ததை கூறினான். என் உடன் பிறந்தவங்கன்னு நினைச்சு விட்டுட்டு வந்தீங்களா, வேண்டாங்க, அவங்க, சங்காத்தம் வேண்டாமுன்னு வந்தபோதும், சங்க அறுக்க வந்திட்டாங்களே, போங்க, என் உடன் வாழும் உங்கள கொன்னுட்டு என்ன முண்டச்சியாக்க வந்த, என் உடன் பிறந்தவங்கள முண்டமாக்கிட்டு வாங்க, என்று கூறியதும் வீறு கொண்டு சென்றான்ப் சேர்வாரன்.

தன்னை நோக்கி வீசிய வாளை பறித்து எதிரே வந்த ஏழு பேர்களின் தலையையும் கொய்தான். தன் நிலை மயங்க கத்தினான், கம்மாடச்சி... கம்மாடச்சி... குரல் கேட்டு அவனருகே விரைந்து வந்தாள். கல் தட்டி மரத்தடியில் அமர, அவள் மடிதனில் சாய்ந்தான் சேர்வாரன். நா தழு தழுக்க, பேச முற்பட்டவன் வாயை மூடிய கம்மாடச்சி, நான் சுமங்கலியாகத்தான் சாகணும். நீங்க எதுவும் பேசாதீங்க என்றபடி, தன் நாக்கைப் பிடுங்கி உயிரை மாய்த்தாள் கம்மாடச்சி, சேர்வாரனும் அடுத்த விநாடியே மாண்டு போனான்.

உயிரற்ற 9 உடல்களும் அடர்ந்த காட்டில் ஆங்காங்கே கிடந்தன. நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் பலவாயின. நடுவக்குறிச்சி ஜமீன் வேட்டைக்குச் சென்றுவிட்டு ஒரு முறை அவ்வழியாக வந்தார். அப்போது தனது உதவியாளருடன் அந்த குளத்தில் இறங்கி குளித்தார். நீராடிவிட்டு அங்கிருந்து புறப்படும்போது கீழே விழுந்தார். எழுந்து புறப்படும்போது மீண்டும் குதிரையுடன் கீழே விழுந்தார். பின்னர் முயற்சித்து அரண்மனை வந்து சேர்ந்தார். அரண்மனையின் ஆஸ்தான ஜோதிடரை அழைத்து நடந்த சம்பவத்தை கூற, மை போட்டு பார்த்தேன். கிரக பலத்தில் குற்றம் இல்லை.

அங்கே ஒரு துடிகொண்ட மாண்ட உயிரொன்று நிலைகொண்டுள்ளது. அதை சாந்தப்படுத்த படையல் போட்டு பூஜை செய்ய வேண்டும் என்றார். அதன்படி படையல் போடப்பட்டது. சுற்றுவட்டாரக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜை நடக்கும் நேரம் நிலைகொண்ட தெய்வம் எவர் ஒருவர் மேல் வந்து, தான் யார் என்பதையும், படையல் ஏற்றுக்கொண்டதையும் கூறுவது அந்த பகுதியில் வழக்கம்.

பூஜை நடந்து கொண்டிருந்தபோது ஜோதிடர் பின்னால் நின்ற ஒருவர் மேல் சாமி அருள் வந்தது. என்னது. இவன் சாமியாடி மற்றவர்களுக்கு திருநீறு கொடுப்பதா என்றெண்ணிய ஜோதிடர். சாமி அருள் வந்தவரின் கால் பெருவிரலை மிதித்துக் கொண்டு மந்திரம் சொன்னான். வந்த வேகத்தில் சாமி அருள் அற்று போயிற்று. இந்த சம்பவங்கள் எதுவும் ஜமீனுக்கோ ஜமீன் ஆளுங்களுக்கோ தெரியாது. பூஜை முடிந்து அனைவரும் இல்லம் திரும்பினர். அன்றிரவு அவரது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த அனைத்து மாடுகளும் மாண்டு போனது. அதிகாலை எழுந்து பார்த்த ஜோதிடர் கத்திக்கதறினார்.

உடனே சாமியாடிய நபரை அழைத்து வந்து காரணம் கேட்க, அவன் உன் மந்திரசக்தியால் என்குலசாமியை கட்டி வைத்திருக்கிறாய், அவிழ்த்து விடு, மறுநிமிடமே ஆநிரைகள் உயிர்த்தெழும் என்றான். அதன்படி ஜோதிடர் செய்ய, ஆநிரைகள் உயிர்த்தெழுந்தன. நடந்தவற்றை ஜமீனிடம் கூறிய ஜோதிடர், அடுத்த பூஜைக்கு நாள் குறித்து கொடுத்தான். பூஜை நடந்தது. அன்று அருள் வந்து ஆடியவர், தான் யார் என்பதையும், தனக்கும், தனது மனையாள் கம்மாடச்சிக்கும் சிலை கொடுத்து பூஜித்துவந்தால் சிறப்பான வாழ்வளிப்பேன் என்று கூறினார்.

பதினெட்டுபட்டி மக்களும், ஜமீனும் சேர்ந்து சேர்வாரனுக்கும், கம்மாடச்சிக்கும் அவர்கள் கொலையுண்ட இடத்தில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் பிடிமண் மூலம் பல்வேறு இடங்களில் சேர்வாரனுக்கு கோயில் உருவானது. சேர்வாரன் கோயிலின் தலைமைபதியாக பட்டாடைக்கட்டி திகழ்கிறது. சங்கரன்கோவில், நெற்கட்டும்சேவல், ஆராய்ச்சிப்பட்டி, ஆயாள்பட்டி, குருக்கள்பட்டி, ஊத்தாங்குளம், ஊத்துமலை உள்பட பல ஊர்களில், சேர்வாரனுக்கு கோயில்கள் உள்ளன.

வேண்டுபவர்களுக்கு மன உறுதியையும், சிறப்பான வாழ்வையும் அருள்கிறார் சேர்வாரன். இந்த கோயில் சங்கரன்கோவிலிருந்து 6 கி.மீ தூரத்தில் திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள ஆராய்ச்சிபட்டியில் அமைந்துள்ளது.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: