×

வேங்கடவன் தரிசனம்!

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது திருப்பதியில் ஒருநாள் எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள்மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் முறையிலேயே அனைத்து பூஜைகளும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில்
தரிசிக்கலாம்.

இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். மோகனூர் எனும் தலப்பெயரோடு இதை ஒப்பிட்டுக் கொண்டால் தலத்தின் காரணப் பெயர் எப்படி வந்தது என்று புரியும். புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளின் கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் காட்சி தருகிறார்.

சென்னை - தரமணி

ஏழுமலையான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது.  சென்னை - வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இத்
தலம். ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார்.

வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.
 
ஆப்பூர்

சிங்க பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இங்கு மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. ஆச்சரியமாக இத்தல பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றதாகும். கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமாகும். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும். பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதித் தாயாரும் அருட்காட்சியளிக்கிறார்கள். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
 
பாதூர்

ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் விழுப்புரம் -  உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர் திருத்தலம்.

இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னன், மூன்றாவது கிருஷ்ணன் அவர்களால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.

தொகுப்பு - எஸ்.கிருஷ்ணஜா

Tags : Venkatavan ,
× RELATED வேங்கடவனின் வெள்ளக்குளம் அண்ணன்!