இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே... அப்படி என்றால் என்ன?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தெளிவு பெறுஓம்

உபசாரம் என்பது இறைவனது வழிபாட்டில் சிறப்பு மிக்கதோர் அம்சமாகும். இறைவனை அரசனாக நினைத்து நாம் செய்யும் பணிவிடைகள். இதனை ஐந்து, பத்து, பதினாறு, அறுபத்துநான்கு என விவரிக்கலாம். இவற்றுள் சோடசோபசாரம் என்னும் பதினாறு வகையான உபசாரம் ஆலய நித்ய, நைமித்திய பூஜையில் இடம் பெறுவது வழக்கம். அவை;

1) ஆவாஹனம்: இறைவனை வரவேற்றல்; வியாபிக்கும் பரமசிவனது பொருவிலுயர் பரிபூரணாநந்தனம் அறிவிலழுந்துதல் ஆவாகனம் ஆகும்.

2) ஆசனம்: இறைவனை சிறந்த ஆசனத்தில் அமர்த்துதல்.

3) பாத்யம்: திருவடிகளை சுத்தம் செய்ய நீர் கொடுப்பது.

4) அர்க்யம்: இறைவனது திருமுடியில் சமர்ப்பிப்பது அல்லது கரங்களை சுத்தம் செய்ய நீர் கொடுப்பது.

5) ஆசமனியம்: வாயை சுத்தம் செய்ய நீர் கொடுப்பது.

6) ஸ்நானம்: நீராட்டுதல் (அபிஷேகம்)

7) வஸ்திரதாரணம்: சிறந்த உடைகளை அணிவித்தல்.

8) சந்தன குங்கும தாரணம்: மணம்மிக்க சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்தல்.

9) அட்சததாரணம்: நுனிமுறியாத முழு அரிசியைச் சமர்ப்பித்தல்.

10) ஆபரணதாரணம்: விலைமிக்க ஆபரணங்களால் அலங்கரித்தல். (பதிலாக உபவீந்தாரணமும் செய்யப்படும்)

11) புஷ்பதாரணம்: மணம் மிகுந்த மலர்களால் அமைந்த மாலையால் அழகுபடுத்தல்.

12) தூபம்: நறுமணம் மிகுந்த குங்கில்யம், சாம்பிராணி முதலிய பொருட் களிட்ட புகையைக் காட்டுதல்.

13) தீபம்: ஒற்றைத்தீபம் காட்டியவுடன் தீபாராதனைகளைத் தொடங்குவது வழக்கம். பெருவழக்கில் உள்ள தீபங்கள், அடுக்கும் தீபம், நட்சத்திர தீபம், பஞ்சமுகத் தீபம், வில்வ தீபம், நாகதீபம், விருஷய தீபம், கருதீபம், ஈசானாதி தீபங்கள், கற்பூர தீபம், பஞ்சாராந்திரிக தீபம் என்பன தீபங்களைக் காட்டும் முறை ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

பரிசாரகர் தரும் தீபத்தை, தூய்மை செய்து புஷ்மத்தால் அர்ச்சித்து, கையில் வாங்கி, சுவாமிக்கு நேரே உயர்த்தி, இடது கண்ணிற்கு நேரிலும் பின்னர் வலது கண், நெற்றி ஆகிய இடங்களிலும் பாதத்திலிருந்து சிரசு வரையும் மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும்.சிரசு, நெற்றி, கழுத்து, மார்பு, பாதங் களில் தனித்தனி வலதுபுறமாக சுற்றிக் காட்டும் முறை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தீபங்களை மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும் எனக் கூறும் ஆகமம், முதலில் சுற்றிக் காட்டுவது உலக நன்மைக்காகவும், இரண்டாவது முறை கிராமத்தின் நன்மைக்காகவும், மூன்றாவதாகக் காட்டுவது உயிர்களின் நன்மைக்காகவும் எனக் கூறுகின்றது.

தீபாராதனையின் பொழுது, தீபத்திற்குரிய மந்திரங்களை முறைப்படி வேதங்களை பயின்ற அர்ச்சகர் ஓதுவார்.14) நைவேத்தியம்: நைவேத்தியத்திற்குரிய அன்னம் சமைக்கப்படும் இடம் பாகசாலை எனப்படும். இதற்கு நியமிக்கப்படுவர் பாசகர்கள் எனப்படும் பரிசாரகர்கள் ஆவர். இவர்கள் சில தீக்ஷை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். நாள்தோறும் நீராடித் தோய்த்துஉலர்ந்த ஆடை தரித்து, நிந்தியக் கடன்களை முடித்து தர்ப்பை தரித்தவர்களாக மடைப்பள்ளி புகுந்து நிவேதனங்களை விதிப்படி பக்குவம் செய்ய வேண்டும். அரிசியை பாகம் செய்தல் முதலான முறைகள் காமிசுரகமத்தில் விரிவாகக் கூறப்படுகின்றது.

அரிசியின் மட்டத்திற்கு அரைப்பங்கு அதிகமாக பாத்திரத்தில் நீர்விட்டு, சாணியால் மெழுகப்பெற்ற அடித்தளத்தை உடையதும், தர்மம், அதர்மம் எனப்படும் இரு புயங்களை உடையதுமான அடுப்பின்மீது வாமதேவ மந்திரம் கூறி அதனை ஏற்றுதல் வேண்டும். பின்னர் அடுப்பு மூட்டி எறும்பு முதலியவற்றால் தாக்கப் பெறாத விறகை எரியச் செய்ய வேண்டும். சுத்தோதனம் என்பது நன்கு சமைக்கப்பட்ட அன்னமாகும். அரிசியைக் காட்டிலும் மூன்று மடங்கு பாலும், பாலில் பாதியளவு நீரும் நீரில் பாதியளவு பயிற்றம் பருப்பும், நெய்யும் கலந்து பக்குவமாகச் சமைத்தால் அது பாயசான்னமாகும்.

அரிசியில் பாதி பருப்பும், உரிய உப்பும், மிளகுப்பொடியும், எள்ளுப் பொடியும் கலந்து சமைத்தால் அது எள்ளன்னமாகும். அரிசியில் மூன்றிலொரு பங்கு பருப்பும், முன் கூறிய அளவு பாலும் கலந்து சமைப்பது பயற்றன்னம். பாலில் பாதியளவு வெல்லமும், அதில் பாதியளவு நெய்யும் வாழைப்பழமும் கலந்து சமைப்பது சர்க்கரையன்னம். இவ்வாறு அன்னங்கள் ஐந்து வகைப்படும். நைவேத்தியத்தை மூன்று பங்காக்கி இரண்டு பங்கை நிலேதித்தல் வேண்டும். பாத்திரத்தில் ஒரு பங்கு மீதமிருக்க வேண்டும். நிவேதனத்திற்குரிய சிற்றுண்டி வகைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

நிவேதனத்தை எட்டுப் பங்காகப் பிரித்து இரு பங்குகள் சிவனுக்கும், ஒரு பங்கு சக்திக்கும் ஒரு பங்கு கணேசருக்கும், ஒரு பங்கு கந்தனுக்கும் ஒரு பங்கு பலிக்கும், அக்கினி காரியத்திற்கும், ஒரு பங்கு நேசிகனுக்கும், ஒரு பங்கு பாத்திர சேஷமாகவும் (பரிசாரசுர்க்கும்) இருக்க வேண்டும்.

15) நீராஞ்சனம்: இறுதியாக சமர்ப்பிக்கப்படுவது கற்பூர நீராஞ்சனமாகும்.

16) பிரதட்சண நமஸ்காரம்: குறைகள் நிகழ்ந்திருப்பின் பொறுக்குமாறு வேண்டி தன்னைத்தானே மூன்று முறை சுற்றிக் கொண்டு நமஸ்காரம் செய்வது.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

Related Stories: